Nov 27, 2022
ஆலோசனை

உயிரை பணயம் வைக்கும் செல்ஃபி... சரியா? தவறா?

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

தற்போது இணையத்தை திறந்தால் நடிகர், நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு சாதாரண மக்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. நவீன தொழில்நுட்பங்கள் நமக்குள் பல்வேறு மாற்றங்களை விதைத்திருக்கிறது. அதில் ஆச்சரியம் என்னவென்றால்... பல்லும் சொல்லும் போன வயதானவர்களிலிருந்து பல் முளைக்காத பச்சை குழந்தைகள் வரை புகைப்படங்களாக, வீடியோக்களாக உலகில் வலம் வருகின்றனர். இதன் மூலம் வருவாய் கிடைப்பது ஒரு புறம் என்றால், அதில் கிடைக்கும் புகழ் போதை மறுபுறம். இவை உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு போகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

முந்தைய தலைமுறையினர் திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கவே தயங்கிய காலங்கள் உண்டு. தற்போது பெண் பார்க்க ஆரம்பித்தது முதல் திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறக்கும் வரை ஆவணமாக தயாரித்து விடுமளவிற்கு புகைப்பட மோகங்கள் நம்மை ஆட்டுவித்து வருகிறது. அது தற்போது சாகச விளையாட்டு என்கிற அடுத்த கட்டத்தையும் அடைந்து விட்டது.

இத்தகைய போட்டோஷூட்டுகள் ஆபத்தான மலைப்பிரதேசங்கள், பாய்ந்தோடும் ஆக்ரோஷ அருவிகள், ஆறு, ஏரி, குளங்கள், ரயில்வே தண்டவாளங்கள் போன்ற ஆபத்தான இடங்களைத் தேடி அதை ஒரு பிரமாண்டமான சினிமா ஷூட்டிங் நிகழ்வுகள் போல நடந்தேறி வருகிறது. பல்வேறு முன் ஏற்பாடுகளுடனும், பாதுகாப்புடனும் எடுக்கப்படும் சினிமா ஷூட்டிங் நிகழ்ச்சிகளே பல விபத்துகளையும் சந்தித்து வருகிறது என்றால்... சாதாரண நபர்கள், புது திருமணம் ஆன தம்பதிகள்,  புகைப்படக்காரர்களுடன் இத்தகைய ஆபத்தான இடங்களில் ஆபத்தான போஸ்களுடன் உயிரை பணயம் வைத்து களமாடி வருவதை பற்றி நினைத்துப் பார்த்தாலே அதன் விபரீதங்கள் புரியவரலாம்.

இதற்காக வியாபார நோக்கத்துடனும் விளம்பர நோக்கத்துடனும் பல்வேறு புகைப்பட கலைஞர்கள் நிறைய கிடைக்கிறார்கள். இதற்காக பலர் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கவும்  தயாராக இருக்கின்றனர் என்பதும் வியப்பாக தான் இருக்கிறது. இவர்கள் புகைப்படம் எடுக்க தேர்ந்தெடுப்பது ஆபத்தான சாகச இடங்களை, எவ்வித முன்னேற்பாடுகள் இல்லாமல் ஆர்வக்கோளாறில் மட்டுமே புகைப்படமெடுக்க செல்கிறார்கள்.

இத்தகைய போட்டோஷூட்டுக்கென விதிமுறைகள் ஏதேனும் இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அதனை சரிவர பின்பற்றுகிறார்களா? என்பது குறித்த தகவல்கள் சரிவர தெரியவில்லை. அப்படி எந்த விதிமுறைகளும் இல்லையெனில் சில நெறிமுறைகளுடன் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஏற்கனவே பல இடங்களில் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகள் கண்ணில் படுகின்றன. இது வரும் நாட்களில் ரயில் தண்டவாள ஓரங்களிலோ அல்லது கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலை பகுதிகளிலோ ஆபத்தான மலைப்பிரதேசங்களிலோ கட்டாயம் வைக்க வேண்டும்.

மேலும்  இந்த வகையான போட்டோஷூட் புகைப்படங்கள் பல நெருக்கமான மற்றும் அந்தரங்க விஷயங்களையும் கூட உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது அல்லது இவை சம்பந்தப்பட்ட நபர்களின் புகழ் போதையா கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் விபத்தை ஏற்படுத்தாமல் இருந்தாலே போதும் என்று நினைக்க வைக்கிறது. இத்தகைய போட்டோஷூட்கள் மற்றும் ஃசெல்பி மோகங்களால் பலர் உயிரை இழந்துள்ளனர்.

எங்கோ நிகழ்ந்து வரும் விஷயங்கள் நாளை நம்முடைய வீடுகளிலும் நிகழலாம். நமது வாழ்வின் இனிய மகிழ்ச்சிகளை,  பொக்கிஷ நினைவுகளை புகைப்படமாக பதிந்து வைப்பது வரவேற்கப்படவேண்டிய மாற்றம். ஆனால் அதற்காக நமது அன்பிற்குரியவர்களை இழப்பதும் உயிரை பணயம் வைப்பதும் நியாயம் தானா என ஒரு நிமிடம் நினைத்து பார்க்கலாமே.. நமது உயிர் மற்றும் அழகான குடும்பத்தை விட புகைப்படங்களோ, புகழோ, பணமோ முக்கியமல்ல...எனவே பாதுகாப்பாக இருப்போம்!!! விழிப்புணர்வு கொள்வோம்!!!!

தொகுப்பு: தனுஜா ஜெயராமன், சென்னை.