Nov 27, 2022
ஆலோசனை

பெரும்பாடு என்னும் டிஸ்மெனோரியா

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு பெண்ணுக்கும் பருவமடைந்ததிலிருந்து மாதவிடாய் முற்றிலுமாக நிற்கும் வரைக்கும் மாதவிடாய் குருதிபோக்கு மாதாமாதம் ஏற்படுவது இயல்பு. இம்மாதவிடாய்  குருதிபோக்கு ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக அடிப்படையான இயல்புகளில் ஒன்றாகும். உங்கள் மாதவிடாயின் போது அவ்வப்போது வலிகள் மற்றும் அசௌகரியங்கள் ஏற்படுவது இயல்பு, அதிலும் குறிப்பாக நீங்கள் பருவ வயதில் இருந்தாலும் அல்லது மாதவிடாய் தொடங்கியதிலிருந்தே அந்த சௌகரியங்களை அனுபவித்திருந்தாலும் இத்தகைய நிகழ்வுகளை சந்திக்க நேரிடும்.இருப்பினும், கடுமையான மாதவிடாய் வலிகள் / பிடிப்புகள் (Cramps) இயல்பானவை அல்ல. அவை பல சிக்கல்களைக் குறிக்கலாம், அவை உங்கள் கருவுறுதலைக்கூட பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக கூட மாறலாம்.

மாதந்தோறும் வரும் மாதவிடாயை பலரும் தீட்டு என்றும் தோஷம் என்றும் கூறி இந்த நிகழ்வை கூச்சமுள்ளதாகவும் கேலிக்குரியதாகவும், மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் பார்க்கின்றனர். இதனாலேயே பல பெண்கள் இந்த மாதவிடாய் சம்பந்தமாக வரும் பிரச்சனைகளை வெளியில் கூறாமல் மௌனமாக தங்களுக்குள்ளேயே பூட்டி, அவதிப்படுகிறார்கள், மாதவிடாய் காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் வேதனையால் உடம்பாலும், மனதாலும் சோர்ந்துவிடுகிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் வரும் பிரச்சனைகள் பல இருந்தாலும் இக்காலகட்டத்தில் வரும் வலியானது பலருக்கு தாங்க முடியாததாக இருக்கும். சில பெண்களுக்கு கடுமையான வலியின் காரணமாக அன்றாட நடவடிக்கைகள் கூட மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். வலி பொதுவாக கீழ் வயிற்றில் ஏற்படும். கீழ் முதுகு, இடுப்பு மற்றும் மேல் தொடைகள் வரை இந்த வலி பரவக்கூடும். வலியைத் தவிர, சில பெண்கள் தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தியையும் கூட அனுபவிக்கின்றனர். இத்தகைய காரணத்தால்தான் தமிழில் இவ்வியாதியை ‘பெரும்பாடு’ என கூறுகிறோம்.

இத்தகைய வலிமிகுந்த மாதவிடாய்க்கான மருத்துவச் சொல்லான டிஸ்மெனோரியா (Dysmenorrhea), ஐந்தில் ஒரு பெண்ணின் அன்றாட வாழ்க்கையில் தலையிடுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது மிகவும் அடிக்கடி ஏற்படும் மகளிர் நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. டிஸ்மெனோரியா இனப்பெருக்க வயதுடைய பெண்களை 40 முதல் 70 சதவீதம் வரை பாதிக்கிறது, மேலும் 10 சதவீதம் பெண்களில் தினசரி செயல்பாடுகளைக் கூட பாதிக்கிறது.

இன்றைய உலகில் டிஸ்மெனோரியா ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகி வருகிறது, இதனால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வலி மிகுந்த மாதவிடாய் குருதிப்போக்கை ஆயுர்வேதம் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மிகவும் நேர்த்தியாக விளக்கி அதற்கு காரணங்கள், குறிக்குணங்கள் பத்திய முறைகள் உள்புற மற்றும் வெளிப்புற மருத்துவமுறைகளை விஞ்ஞான பூர்வமாக விளக்கியுள்ளதை பார்க்கலாம். இந்த மாதவிடாய் வலியை ஆயுர்வேதத்தில் ‘உதவர்த்தினி யோனி வியாபத்’ என்று கூறுவர்.

உதவர்த்தினியின் முக்கிய குறிக்குணம் ராஜா கிரிச்சரதா (வலி மிகுந்த மாதவிடாய்). இது இனப்பெருக்க வயதுடைய பெண்களில் சுமார் 50 முதல் 60 சதவீதம் பாதிக்கிறது. ஆனால், இன்றுவரை சமகால மருத்துவத்தில் இந்நோயை முற்றிலுமாக தீர்க்கக்கூடிய பயனுள்ள மருந்துகள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.இந்த பிரச்சனைக்கு நாம் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு முதலில் இது ஏன் ஏற்படுகிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் வலிக்கான 3 முக்கிய காரணங்கள்

1.எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்னும் கருப்பை அகப்படலம் நோய்:  எண்டோமெட்ரியம் எனப்படும் மெல்லிய சவ்வு போன்ற கருப்பையின் உள்பகுதியில் இருக்கும்/ வளரும் திசு, கருப்பையின் குழிக்கு வெளியே அவை இருக்கக்கூடாத இடத்தில் வளரும் ஒரு நிலை. சில நேரங்களில் பிற பகுதிகளான கருப்பை குழாய் (ஃபெலோப்பியன் குழாய்), கருமுட்டை, (ஓவரிகளிலும்  அல்லது மற்ற இடங்களிலோ அடிவயிற்றிலோ வளரும்போது அதை நாம் எண்டோமெட்ரியோசிஸ் என்று அழைக்கிறோம்., காலப்போக்கில், இந்த மாதவிடாய் திசுக்கள் ஒரு பெண்ணின் இடுப்பில் வீக்கம் மற்றும் வடுவை ஏற்படுத்துகின்றன. இது கடுமையான மாதவிடாய் வலியை மட்டுமல்ல, கருவுறாமையையும் ஏற்படுத்தும்.

அவை சாக்லேட் நீர்க்கட்டிகள் எனப்படும் பெரிய கருப்பை நீர்க்கட்டிகளை ஏற்படுத்தும். அறிகுறிகள் இல்லாமல் ஏற்படக்கூடும் என்பதால், பல ஆண்டுகளாக கண்டறியப்படாமலே இருக்கலாம். இந்நோயைப்பற்றி இத்தொடரில் முன்னரே விவரமாக பார்த்துள்ளோம்.

2.  ஃபைப்ராய்டுகள் என்னும் கர்ப்பப்பை தசைநார்க்கட்டிகள்: இவ்வகை கட்டிகள் கருப்பையின் தசைச் சுவரில் இருந்து வளரும் புற்றுநோய் அல்லாத கட்டிகள். பல பெண்களுக்கு தசைநார்க்கட்டிகள் இருப்பது தெரியாது. இருப்பினும், சில தசைநார்க்கட்டிகள் வலி மற்றும் அசாதாரண மாதவிடாய், கருவுறுதலில் பாதிப்பு மற்றும் கருச்சிதைவு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இந்நோயைப்பற்றியும்  இதே தொடரில் முன்னரே விவரமாக பார்த்துள்ளோம்.

3. இடுப்பு அழற்சி நோய் (PID): வலிமிகுந்த மாதவிடாயின் மற்றொரு காரணம் கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்களின் தொற்று ஆகும், இது PID என அழைக்கப்படுகிறது. ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கு இது மிகவும் பொதுவான காரணமாகும்.

4.மற்ற காரணங்கள்: மாறி வரும் வாழ்க்கைமுறைகளால் நமது உடல் மற்றும் மனது பல மாற்றங்களை சந்திக்கிறது. உணவில் அதிகப்படியான கொழுப்புக்கள், மாமிசம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரசாயனக்கலவைகள், துரித உணவு கலாச்சாரங்கள், மன அழுத்தம், மனச்சோர்வு, உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான உழைப்பு, இரவில் தூக்கமின்மை, பகலில் தூக்கம் ஆகியவையும் காரணங்களாக கூறலாம்.

டிஸ்மெனோரியா வகைகள்

சில பெண்கள் தங்கள் டீன் ஏஜ் பருவத்தில் முதன்முதலில் மாதவிடாய் வரும்போது வலிமிகுந்த மாதவிடாய்களை அனுபவிக்கிறார்கள், இது அடிப்படை நோயால் ஏற்படாது. இது முதன்மை டிஸ்மெனோரியா என்று குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், பிற்கால வாழ்க்கையில் ஏற்படும் மாதவிடாய் வலிகள், நோய்கள் அல்லது இனப்பெருக்க அமைப்பின் பல்வேறு பிரச்சனைகளால் ஏற்படலாம், மேலும் இந்த வகையான மாதவிடாய் வலி இரண்டாம் நிலை டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படுகிறது.

மற்ற அறிகுறிகள்

மாதவிடாய் வலியைத் தவிர வேறு ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அவற்றைப் பற்றி உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை அணுகவும்.

*ஒழுங்கற்ற சுழற்சிகள்

*உடலுறவின் போது வலி

*மாதவிடாய் தவிர்த்து மற்ற சில

நேரங்களில் இடுப்பு வலி

*கர்ப்பம் தரிப்பதில் சிரமம்

*இடுப்புப் பகுதியில் வீக்கம் அல்லது நிறை போன்ற உணர்வு

*குமட்டல் அல்லது வயிற்றுப்போக்குடன் பிடிப்புகள்

*மாதவிடாயின் போது மலம் கழிக்கும்போது வலி

*மாதவிடாய் காலத்தில் சிறுநீர் பிரச்சினைகள்.

மேலும்,மாதவிடாயின் போது ரத்தப்போக்கு 2 முதல் 7 நாட்கள் வரை நீடிப்பது இயல்பானது. இருப்பினும், அந்த முழு நேரத்திலும் மோசமான மாதவிடாய் பிடிப்புகள் ஏற்படுவது சாதாரணமானது அல்ல. மாதவிடாயின் முதல் 1 லிருந்து 3 நாட்களுக்கு மாதவிடாய் அசௌகரியத்தை அனுபவிப்பது சாதாரணமாக இருக்கலாம். ரத்தப்போக்கு தொடங்குவதற்கு ஒரு நாள் அல்லது நாளுக்கு முன்பு பிடிப்புகள் தொடங்கலாம், ஆனால் அவை உங்கள் மாதவிடாய் முடியும் வரை தொடரக்கூடாது.

மாதவிடாய் வலிகள் உங்கள் மாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்பு தொடங்கக்கூடாது, மேலும் உங்கள் மாதவிடாய் முடிந்த பிறகும் நிச்சயமாக இருக்கக்கூடாது.

ஆயுர்வேத மருத்துவ முறைகள்

உதவர்த்தினி யோனி ரோகங்களுக்கும் வாதமே பொறுப்பு. ஆயுர்வேதத்தில் வாத ரோக சிகிச்சைக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் ‘வஸ்தி’ என்பது வாதத்திற்கான சிறந்த சிகிச்சை முறையாகும். பஞ்சகர்மா சிகிச்சையின் அங்கமான வஸ்தி சிகிச்சையானது உதவர்த்தினி நோயிற்கு நம்பகமான மருத்துவ முறையாக இருக்கிறது. வஸ்தி சிகிச்சையில் எண்ணெய் வஸ்தி, கஷாய வஸ்தி, மாத்ரா வஸ்தி ஆகிய வகைகளில் ஒன்றை நோய் மற்றும் நோயாளியின் தன்மைக்கேற்ப பயன்படுத்தலாம்.  

‘உத்தர வஸ்தி’ என்னும் கர்ப்பப்பையினுள் செலுத்தப்படும் மருந்துகள், சிகிச்சை பல வியாதிகளினால் வரும் மாதவிடாய் வலியை முற்றிலுமாக குணப்படுத்தவல்லது.  ‘விரேசனம்’ என்னும் மருத்துவ பேதி சிகிச்சையில் சிவதை லேகியம், ஹிங்கு திரிகுண தைலம் ஆகியவை கொடுக்க நல்ல பலன் தருவதைக் காணலாம்.உள்ளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் கஷாய மருந்துகளாகிய கந்தர்வஹஸ்தாதி, குளத்தாதி, மகாராஸ்னாதி, சப்தசாரம், எள்ளு கஷாயம் ஆகியவற்றுடன் சூரண மருந்துகளான ஹிங்குவசாதி, அஷ்ட சூரணம் ஆகியவை கொடுத்து மேலும் குளிகைகளான தான்வந்திரம்,  ரஜபிரவர்தினி, காங்காயன குளிகை ஆகியவை கொடுக்க நல்ல பலனளிக்கும். மேலும் நெய் மருந்துகளான வாரணாதி கிருதமும் அரிஷ்ட மருந்துகளான அபயாரிஷ்டம், ஜீரகாரிஷ்டம், குமாரியாசவம், தசமூலாரிஷ்டம் ஆகியவை தகுதிவாய்ந்த மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுத்துவர நல்ல பலன் கொடுப்பதை நாம் பார்க்கலாம்.

உணவு பரிந்துரைகள்

*ஆரோக்கியமான சரிவிகித உணவை உண்ணவேண்டும். சூடான உணவுகளையே உண்ண வேண்டும்
*இலை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
*உணவில் செரிமான பொருட்களான  பெருங்காயம், சுக்கு,  இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, மஞ்சள் ஆகியவற்றை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
*அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரையை தவிர்க்க வேண்டும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

*தவறாமல் உடற்பயிற்சி செய்தல்: பொதுவாகவே நன்றாக உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு இந்த மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
*குறைந்தது 6 முதல் 8 மணிநேரம் நல்ல தூக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.
*புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

இந்த கட்டுரையில் தங்களுக்கு மாதவிடாய் கால வலி பற்றிய பெரும்பாலான சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன். மீண்டும் அடுத்த இதழில் மேலும் ஒரு மாதர் பிரச்சனையையும் அதற்கான ஆயுர்வேத தீர்வை பற்றியும் பார்ப்போம்.

தொகுப்பு: உஷா நாராயணன்