Jul 29, 2021
ஆலோசனை

‘அந்தக் கேள்வி’யை அப்பாவிடம் கேட்கட்டுமா?

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி?

அன்புடன் தோழிக்கு,

‘நல்ல அப்பா யார்’ என ஒரு போட்டி வைத்தால் எங்கள் அப்பாவுக்கு தான் முதல் பரிசு கிடைக்கும். நாங்கள் 5 பெண்கள், 3 ஆண்கள் என 8 பிள்ளைகள். எங்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவார். அப்பா கஷ்டப்பட்டுதான் எங்களை வளர்த்ததாக அம்மா சொல்வார். ஆனால் நாங்கள் எந்த கஷ்டத்தையும் அனுபவித்ததில்லை.

எங்களை செல்லமாக மட்டுமல்ல ஒழுக்கமாகவும் வளர்த்தார். எங்களுக்கு சிறு வயதில் இருந்தே மற்றவர்களிடம் எப்படி அன்பாக இருக்க வேண்டும், அடுத்தவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி தந்தார். அதிலும் பெரும்பாலும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பதால் என்னென்ன நன்மை என்பதை எல்லாம் நகைச்சுவையாக, சலிப்பு தட்டாமல் கதை, கதையாக சொல்வார்.

நன்றாக படிக்க வைத்தார். எங்களில்   பேருக்கு அரசு வேலை கிடைத்தது. தங்கை வக்கீலாகவும், அண்ணன் பொறியியல் படித்து காண்ட்ராக்டராகவும் உள்ளனர். இப்போது திருமணமாகி எல்லோரும் அதே ஊரில்தான் வசிக்கிறோம். அண்ணன்கள், தம்பி தனிக்குடித்தனம் என்றாலும் அப்பா, அம்மா வசிக்கும் அதே வீட்டின் மாடிகளில் வசிக்கின்றனர். நாங்களும் விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டுக்கு போய் விடுவோம். அன்று ஒரே சமையல்தான். இப்படிதான் எங்கள் வாழ்க்கை இன்றும் தொடர்கிறது அதற்கு காரணம் எங்கள் அப்பா, அம்மாதான்.

 எங்கள்  ஒற்றுமையின் ஆணி வேராக இருக்கும் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இப்போது வயதாகி விட்டது. எங்களுக்கு அன்பையும், மகிழ்ச்சியையும் மட்டுமே தந்த அப்பாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு கேள்வி உறுத்திக் கொண்டே இருக்கிறது.எங்களுக்கு நல்லவராக  இருக்கும் அப்பா ஏன் அப்படி? அந்தக் கேள்வியை கேட்டுவிட ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் முடியவில்லை. அவருக்கு வயதாகிக் கொண்டே போவதால், அந்தக் கேள்வியை கேட்க முடியாமலே போய்விடுமோ என்று கூட நினைக்கிறேன். அந்தக் கேள்விக்கு பின்னே அப்பாவுக்கு ஒரு தனிக்கதை இருக்கிறது. அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

நான் அப்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். ஒருமுறை எங்கள் பள்ளியில் இருந்து, அருகில் நடந்த மருத்துவக்கல்லூரி கண்காட்சிக்கு அழைத்து சென்றிருந்தனர். கண்காட்சி முடித்து விட்டு வெளியில் வரும் போது, அங்கு நோயாளிகள் பிரிவில் இருந்து அப்பா வெளியில் வந்தார். அப்பாவை திடீரென அங்கு பார்த்ததில் உற்சாகமானேன். அவர் என்னை பார்க்கவில்லை. அதனால்  அருகில் சென்று அவரை ஆச்சர்யப்படுத்த நினைத்தேன். ஆனால் போகவில்லை. காரணம் அவருக்கு பின்னால் வந்த ஒரு பெண், அப்பாவுடன் நெருக்கமாக பேசியபடி வந்தார். அதனால் தயங்கினேன்.

அந்த பெண்ணை எனக்கு தெரியும், எங்கள் தெருக்காரர்தான். திருமணமாகி வெளியூர் சென்றவர். கணவர் இறந்து விடவே அம்மா வீட்டுக்கு வந்து விட்டார். அவருக்கு 10வது படிக்கும் ஒரு மகளும் உண்டு. என்னை பார்க்கும் போதெல்லாம், ‘எப்படி இருக்க மா... நல்லா படிக்கணும்’ன்னு அன்புடன் விசாரிப்பார். அவர் மீது எனக்கு மரியாதை இருந்தது.

‘அவர் ஏன்  அப்பாவுடன் மருத்துவமனைக்கு வர வேண்டும்’ என்ற கேள்வி என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. வீடு திரும்பியதும் அம்மாவிடம் விவரங்களை சொன்னேன். அவரோ ‘ஓ அப்படியா... ’ என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். நானோ விடாமல், ‘அவர்கள் ஏன் நம் அப்பாவுடன் வர வேண்டும் ’ என்று கேட்டேன். அதற்கு அம்மா, ‘கவெர்மென்ட் ஆஸ்பத்திரினா ஆயிரம் பேர் வருவாங்க.... போவாங்க.... அதுக்கெல்லாம் காரணம் கேட்டா எப்படி... போய் வேலையை பாரு’ என்று சொல்லிவிட்டார்.  

ஆனால் அந்தக்கேள்வி என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால் அம்மாவிடம் மறுநாள், ‘ஆஸ்பத்திரிக்கு வர்றது ஓகே.... ஆனா அப்பா கூட அவங்க ரொம்ப நெருக்கமா வந்தாங்களே’ என்று ேகட்டேன். அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை. நான் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன். ‘நீ பதில் சொல்லனா நான் அப்பாகிட்டேயே... ’ என்று ஆரம்பித்ததும் கோபமான அம்மா, ‘இது உனக்கு வேண்டாத வேலை நீ இந்த விஷயத்தை மறுபடியும் பேசினா... அடிதான் விழும்’ என்று திட்டினார். அதன் பிறகு அதுபற்றி பேசவில்லை.

பள்ளிக்கு செல்லும் போது அந்தப் பெண், வழக்கம் போல் என்னிடம் பேச முயன்றார். நான் கண்டு கொள்ளவில்லை. மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு அவரிடம் பேசவும் பிடிக்கவில்லை. ஒதுங்கி போய்விடுவேன். சில நாட்கள் பேச முயன்ற, அவரும் வெறும் புன்னகையுடன் ஒதுங்கி போய் விடுவார்.

இந்நிலையில் ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் தெருவே பரபரப்பாக இருந்தது. தெருவுக்குள் நுழைந்ததும் ஓடி வந்த என் அண்ணன் என்னை அவசரமாக வீட்டுக்கு இழுத்து சென்று விட்டார். வீட்டிற்குள் அப்பா உட்பட எல்லோரும் இருந்தனர். வீட்டுக் கதவு, ஜன்னல்கள் எல்லாவற்றையும் அண்ணன் அடைத்து விட்டார். யாரும் வெளியில் போகக் கூடாது என்று சொல்லிவிட்டார். அப்பா சோகமாக உட்கார்ந்து இருந்தார். அம்மா சமையலறையை விட்டு வெளியே வரவில்லை. மற்றவர்கள் யாரும் ஏதும் பேசவில்லை. ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருந்த சகோதரிகள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

அன்றிரவு யாரோ எங்கள் வீட்டு முன்பு நின்று சத்தம் போடுவது கேட்டது. பிறகு கதவை தட்டியவர்கள், அந்த பெண்ணின் பெயரைச் சொல்லி ‘...... இறந்துடுச்சி’ என்றனர். என் அப்பாவின் பெயரைச் சொல்லி கூப்பிட்டனர். எழுந்து வெளியில் போக முயன்ற  அப்பாவை, அண்ணன் அனுமதிக்கவில்லை. அப்பா அப்படியே உட்கார்ந்து விட்டார்.

மறுநாள் வரை வெளியில் கூச்சலும், குழப்பமாக இருந்தது. சிறிது நேரம் அமைதியாக இருக்கும். பிறகு யாராவது வந்து திட்டும் அல்லது கூப்பிடும் சத்தம் கேட்கும். ஆனால் நாங்கள் கதவை திறக்கவில்லை. அப்படியே மூடிய வீட்டிலேயே 2 நாட்கள் இருந்தோம்.

பிறகு 3வதுநாள்தான் அண்ணன் கதவை திறந்தார். ஒரு வாரம் கழித்துதான் பள்ளிக்கு சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் எனக்கு விவரங்கள் தெரிந்தது. என் அப்பாவுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம். ஆதரவில்லாமல் அம்மா வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த அவர், அப்பாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தனிக்குடித்தனம் போய் உள்ளார். அதன் பிறகு அப்பா அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். பிறகு இருவரும் ஒன்றாக வெளியில் போய் வருவதும் நடந்துள்ளன. சில ஆண்டுகளாக இந்த தொடர்பு தொடர. அவரது பெண்ணும், என் அப்பாவை‘ அப்பா’ என்று
அழைப்பாராம்.

தெருவில் இப்படி ஒரு குடித்தனம் இருப்பதை பலர் விரும்பவில்லை. அதனால் அந்த பெண்ணை கண்டித்துள்ளனர். வீட்டுக்கு முன் நின்று சத்தம் போட்டுள்ளனர். அவமானப்பட்ட அந்த பெண்,  தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைப்பார்த்த அவரது மகள், உறவினர்களிடம் சொல்ல, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாராம்.

அதையெல்லாம் கேட்ட பிறகு, அவர் மீது இருந்த கோபம் போய், பரிதாபம்தான் ஏற்பட்டது. நாளாக நாளாக அவரின் மரணத்துக்கு என் அப்பாதான் காரணம் என்று தோன்ற ஆரம்பித்தது. நேர்மையான, அன்பான அப்பா, ஒரு பெண்ணின் மரணத்துக்கும், அவரது பெண் குழந்தை அனாதையாவதற்கும் காரணம் என்பதை இன்று கூட மனம் ஏற்கவில்லை.

இத்தனைக்கும் அவர் எங்களிடம் மட்டுமல்ல, என் அம்மாவிடமும் அன்பாகதான் இருக்கிறார். அவரிடம் ஒருநாள் கூட, அம்மா முகச்சுளிப்பாக பேசி நாங்கள் பார்த்ததில்லை. அத்தனை அன்பான மனைவிக்கு துரோகம் செய்ய எப்படி அவருக்கு மனம் வந்தது. எளிய குடும்பத்தில் பிறந்து, அகதியாக விரட்டப்பட்டு, பின் தங்கிய பகுதியில் குடியேறி தன் உழைப்பால் தானும் உயர்ந்து, எங்களையும் உயர்த்தியவர். அப்படி எல்லாவிதத்திலும் இன்றும் என் அப்பாவை ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறேன்.

ஆனால் அந்த ஒரு விஷயம்தான் என் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. அம்மாவை ஏன் ஏமாற்றினார்? அதனை கண்டு கொள்ளாமல் இருக்க என் அம்மாவை மிரட்டினாரா? கணவரை இழந்த பெண், இவரை நம்பி அவமானப்பட்டு சாகும் நிலைக்கு ஏன் கொண்டு சென்றார்? அது இவருக்கு உறுத்தலாக இல்லையா? அத்தனையும் செய்து விட்டு எப்படி இயல்பாக இருக்க முடிகிறது? என்று அவரிடம் கேள்விகள் கேட்க துடிக்கிறேன். ஆனால் முடியவில்லை.

அந்த கேள்விகளை கேட்க முடியாமல் போய்விடுமோ என்று கவலையும் வந்துவிட்டது. கேட்டால் அவரது உடல்நிலை பாதிக்குமா? உற்சாகமாக இருக்கும் குடும்பத்தில் பிரச்னை வருமா? எனக்கு இருக்கும் அதே கேள்விகள் என்னுடன் பிறந்தவர்களுக்கும் இருக்குமா? இல்லை நான் மட்டும் இப்படி நினைக்கிறேனா? ஒன்றும் புரியவில்லை? என்ன செய்வது? கேட்டு விடட்டுமா தோழி?

இப்படிக்குபெயர் வெளியிட விரும்பாத வாசகி

நட்புடன் தோழிக்கு,

குழந்தை பருவம் அதிசயங்களின் காலம். உங்களுக்கும் அப்படி அற்புதமான காலம் உங்கள் இளவயதிலும் வாய்த்திருக்கிறது. உங்கள் வாழ்க்கை உடன்பிறப்புகளால் நிறைந்துள்ளது. கூடவே, புதிய வரவாக வந்தவர்களாலும் உங்கள் குடும்பத்தின் இனிமை தொடர்கிறது. பெற்றோரை நாம் பார்க்கும் கண்ணோட்டம் வேறு. அவர்களை எப்போதும் நல்லவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் மட்டுமே பார்க்கிறோம். உணர்கிறோம். அதுதான் நமக்கு தெரியும். அப்படித்தான் அவர்கள் காட்டிக் கொள்வார்கள்.  அவர்களும் எல்லா உணர்வுகளும் உள்ள சராசரி மனிதர்கள்தான்.  

உங்கள் அம்மாவை பொறுத்தவரை அமைதியான குணநலன்கள் கொண்டவர் எனத் தெரிகிறது. அவர் மற்றவர் விஷயங்களில் தலையிட ஆர்வமும் காட்டாதவர் என்பதும் புரிகிறது. அதற்கு நமது சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கம் கூட காரணமாக இருக்கலாம். ஒரு குடும்பத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் போது பெண்கள் அடங்கி போகிறார்கள்.

அதே நேரத்தில் உங்கள் தந்தை விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது உங்கள் அம்மாதான். உங்கள் தந்தையின் தொடர்பில் இருந்த பெண்ணிடம் நான் குறைகாண விரும்பவில்லை. ஆதரவற்ற நிலையில் அம்மா வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு, உங்கள் தந்தையின் அன்பு பெரிய ஆதரவாக இருந்திருக்கலாம். தண்ணீரில் தத்தளிப்பவர்கள், கரை சேர துடிப்பது இயல்பானது. கையில் கிடைப்பதை கொண்டு கரை சேருவார்கள். ஆனால் அந்த பெண் விஷயத்தில், உங்கள் அப்பா முதலில் ஆதரவு கரம் நீட்டினாரா, இல்லை அந்த பெண் ஆதரவு கோரினாரா என்று தெரியவில்லை.

நீங்கள் நினைப்பது போல், கணவர் இல்லாதவர் ஆதரவு தேடுவதற்கும், மனைவி குடும்பம் இருக்கும் ஒருவர் ஆதரவு தர செல்வதற்கும் கட்டாயம் வித்தியாசங்கள் இருக்கின்றன. அதை ஆராய ஆரம்பித்தால் தீர்வு சொல்ல நீண்ட நேரம் விவாதிக்க ேவண்டி இருக்கும். அந்த பெண்ணும், அவமானத்துக்கு அஞ்சிய ஒரு சராசரி பெண்ணாகத்தான் இருந்திருக்கிறார். அந்த தொடர்பால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து யோசித்ததாக தெரியவில்லை. அவற்றை சமாளிக்கும் மனவலிமையும் அவருக்கு இருக்கவில்லை.

எப்படியிருந்தாலும் அது முடிந்து போன கதை. அதற்கு யார் காரணமாக இருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. கூடவே ஒரு மகள் என்ற முறையில் உங்கள் தந்தையின் நடத்தை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் குறித்து புரிந்து  கொள்கிறேன். இருப்பினும், உங்கள் அம்மாவின் இயல்பில் சொல்வதென்றால், ‘போராட இது ஒன்றும் போர்களம் அல்ல’. ஏனென்றால் அந்த உறவால் அதிகம் பாதிக்கப்பட்ட அவர்தான் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

நான் ஏற்கனவே சொன்னது போல், பெற்றோர்களும் நம்மை போன்று சராசரி மனிதர்கள்தான். அதை நாம் மறந்து விடுகிறோம். ஒரு தந்தையாக அவரது கடமைகளை சரியாக செய்திருக்கிறார். உங்கள் அப்பாவுடன் தொடர்பில் இருந்த பெண் குறித்து, இப்போது பேசிக் கொண்டிருக்க தேவையில்லை. அவரின் மரணம் கொடுமையானது. ஈடு செய்ய முடியாதது. அதிலும் அவரது இளம் வயது மகளுக்கு பேரிழப்பாகத்தான் இருந்திருக்கும்.

அதேநேரத்தில் உங்கள் தந்தைக்கும் அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாகதான் இருந்திருக்கும். எப்போதும் நாம் விரும்பிய ஒருவரின் மறைவு பெரும் சுமை.... அதிலும் அந்த மரணத்துக்கு நாம்தான் காரணம் என்ற எண்ணம்.... அவர்களை விட்டு எளிதில் போகாது. உங்கள் அப்பாவும் கட்டாயம் நிறைய குற்ற உணர்ச்சிகளை கொண்டிருப்பார். அதுவே அவருக்கு பெரிய தண்டனைதான்.

அதனால் நீங்கள் உங்கள் அப்பாவிடம் கேள்வி கேட்பது அவசியமில்லை என்று நினைக்கிறேன். கூடவே அது நீங்கள் சம்பந்தப்படும் அளவுக்கு முக்கியமானதில்லை. வேண்டுமானால் இது குறித்து உங்கள் சகோதர, சகோதரிகளுடன் பேசலாம். அதற்கு மேல் ஏதும் செய்ய வேண்டாம் என்பதே எனது ஆலோசனை.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்