Sep 19, 2021
ஆலோசனை

டிஜிட்டல் பள்ளிக் கல்விக்கான புதிய செயலி!

நன்றி குங்குமம் தோழி

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் அசாத்தியமான விஷயங்களும் சாத்தியமாகி வருகின்றன. அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று, மனிதர்களை நிலவுக்கு சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய பட்ஜெட் டிஜிட்டலில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய  சூழலில் தான் பள்ளிகளுக்கு செல்லாமலேயே சர்வதேச தரத்திலான கல்வியை ஆன்லைனில் பெறும் வகையில் புதிய BLeap எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எட்4ஆல்  என்னும் இந்த கல்வி நிறுவனத்தை லண்டனை சேர்ந்த வர்த்தக குழுமமான ஆதி குரூப்  மற்றும் எஸ்வி குரூப் ஆகியவை இணைந்து துவக்கியுள்ளன. ஆதி குழும தலைவரும், எட்4ஆல் துணை நிறுவனருமான சஞ்சய் விஸ்வநாதன், இந்த முயற்சி பள்ளிக்கல்வி துறையில் நிச்சயம் புரட்சியை ஏற்படுத்தும் என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, “அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கொள்கையாகும். இந்த சம நிலையை வழங்குவதில் இன்டர்நெட் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது. அதன் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு மூலம் முறையான கல்வியை  முடிந்தவரை பலருக்கு கிடைக்கச் செய்கிறோம்.

இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர வழிக் கற்றல் ஆகியவை ஒன்றாக தொகுத்து வழங்கப்படுகிறது. ஸ்கூல்-இன்-பாக்ஸ் என்று அழைக்கப்படும் இது குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயலி, பிளிப்கார்ட் மற்றும் ஜியோ போன்ற இணையதளங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள சிறு நகரங்களில்கூட இந்த செயலியை பயன்படுத்தும் விதமாக இதில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த செயலியை நாட்டில் உள்ள எந்தவொரு இடத்திலும் பயன்படுத்த முடியும்.

மாணவர்கள் தங்கள் இருப்பிடம், கற்றல் திறன் ஆகியவற்றிற்கு ஏற்ப இந்த செயலி மூலம் கற்றுக் கொள்ளலாம். இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மற்றும் முறையான சான்றிதழ் கிடைக்கும் நிலையில், மாணவர்களுக்கான முறையான பள்ளிக் கல்வியின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்த செயலி உள்ளடக்கி உள்ளது.

உயர்தர பள்ளிக் கல்வியை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் டிஜிட்டல் முறையில் இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் முறையான பள்ளி கல்வியை முடிக்க விரும்பும் எவருக்கும் குறைந்த கட்டணத்தில் இந்த செயலி கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கைகளில் தொழில்நுட்பம் இருப்பதால் கல்வி வளர்ச்சியானது வியத்தகு முறையில் மேம்பட்டு வருவதை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களையும் எங்கள் செயலி சென்றடைய வேண்டும் என்பதற்காக நாங்கள் இணையதளங்களை தேர்வு செய்தோம்” என்கிறார் விஸ்வநாதன்.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

படங்கள்: ஜி.சிவக்குமார்