Sep 30, 2022
ஆலோசனை

வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருகிறானாம்!

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி?

அன்புடன் தோழிக்கு,

எனக்கு 48 வயதாகிறது. என் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இரண்டு மகன்கள். தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். பிள்ளைகள் இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். மூத்தவன் பொறியியலும், இளையவன் வணிகவியலும் கல்லூரி படிப்பை கடந்த ஆண்டு கொரோனா காலத்தில்தான் முடித்தனர். முதலில் தேர்வு எழுத தேவையில்லை, ‘ஆல் பாஸ்’ என்றனர்.

அதன் பிறகு ‘மீண்டும் தேர்வு எழுத வேண்டும்’ என்றனர். தொடர்ந்து ‘ஆன்லைனில் தேர்வு’ என்றனர். அடுத்து ‘அரியர்’ தேர்வு தனியாக எழுத வேண்டும் என்றனர். எழுதிய பிறகு அதையும் ரத்து செய்தனர். இப்படி பல்வேறு குளறுபடிகளால் என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்க தாமதமாகிறது. இப்போது அரியர் தேர்வு முடிவுகள் மட்டும் வர வேண்டும். ேமலும் கொரோனா பிரச்னையால், என் மகன் ஓராண்டு காலமாக வீட்டில்தான் இருக்கிறான். வேலைக்கு ஏதும் செல்லவில்லை.

பிகாம் படித்த இளைய மகன் விவகாரத்தில் பெரிய பிரச்னை இல்லை. கொரோனா ஊரடங்கு கொஞ்ச கொஞ்சமாக குறைய ஆரம்பித்ததும், அவன் கிடைத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தான். சில நாட்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வான். இன்னும் நிரந்தரமாக எந்த வேலையும் கிடைக்கவில்லை.

நானும் கொரோனாவுக்கு பிறகு தினமும் வேலைக்கு செல்வதில்லை. ‘ஆர்டர்’ கிடைக்கவில்லை என்று வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலைக்கு அழைக்கிறார்கள். அதனால் சம்பளமும் குறைந்து விட்டது. அந்த வருவாயை வைத்து வாடகை, குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. இளையவன் வேலை செய்வதால் ஓரளவு சமாளிக்கிறேன்.

மூத்தவனுக்கு குடும்ப பிரச்னை குறித்து எந்தக் கவலையும் கிடையாது. எப்போதும் செல்போன், கம்ப்யூட்டர் விட்டால் டிவி என்றுதான் பொழுதை கழிக்கிறான். இத்தனை பரபரப்பான வேலைகளுக்கு இடையில் மறக்காமல் உடற்பயிற்சி செய்கிறான். அதற்கு ஏற்ப சத்தான உணவு வேண்டும் என்று அடம் பிடிப்பான். அப்படித் தராவிட்டால் சண்டை போடுகிறான்.

என் கணவர் இருந்த போது, அவன் தவறு செய்தால், பொது இடம் என்றுகூட பார்க்காமல் அடிப்பார். மறுபடியும் அடம் பிடிக்கமாட்டேன் என்று அவன் சொல்லும்வரை விட மாட்டார். அதனால் அவரிடம் எப்போதும் அடங்கியே இருப்பான். நான் அடிக்க மாட்டேன். அவன் விருப்பப்படி விட்டு விடுவேன். அவருக்கு பிள்ளைகள் மீது பாசம் அதிகம். அவர்கள் ஏதாவது கேட்டால் தட்டாமல் வாங்கிக் கொடுப்பார். அவர் இறந்த பிறகு மூத்தவன் செய்யும் அடாவடிகள் அதிகரித்து விட்டன. ஆனாலும் ‘சரியாகிவிடுவான்’ என்ற நம்பிக்கையில் அவன் விருப்பம் போல் நானும், இளையவனும் நடக்க ஆரம்பித்து விட்டோம்.

அதை ஒரு தாயாக எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நானும், இளையவனும் வேலைக்கு செல்லும் நாட்களில் அவன் ஒரு பெண்ணை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவதாக பக்கத்தில் குடியிருப்பவர்கள்  சொன்னார்கள். நான் நம்பவில்லை. வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் எங்களுக்கும் பிரச்னை. எங்களை காலி செய்து விட்டால் புதிதாக அதிக வாடகைக்கு வேறு ஆளை கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். எனவே எங்களுடன் எப்போதும் தகராறு செய்வார். அதனால் அவர் தூண்டுதலில் பொய் சொல்கிறார்களோ என்று கூட நினைத்தேன்.

இளையவனும் அதையே சொன்னான். ஒருநாள் அவன் வீட்டில் இருக்கும் போதே அந்தப் பெண்ணை அழைத்து வந்ததாக கூறினான். கேட்கும் போதே எனக்கு படபடப்பாகி விட்டது. இப்படி பல நாள் நடப்பதாக இளையவன் சொன்னான். எனக்கு அவனிடம் கேட்க தயக்கமாக மட்டுமல்ல பயமாக இருந்தது. அதனால் இளையவனிடம், ‘அவள லவ் பண்றானா... இல்லனா சும்மா கூட்டிட்டு வர்றானானு மெதுவா கேளுடா ’ என்று சொன்னேன்.

இளையவன் கேட்டதற்கு, ‘உன் வேலையை பாருடா’ என்று சொல்லிவிட்டான். இளையன் விடாமல் ‘லவ் பண்றியா... கல்யாணம் பண்ணிக்கப் போறீயா’ என்று கேட்டதற்கு, ‘அதெல்லாம் எனக்கு தெரியாது... நான் இப்போ சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான்’ என்று சொல்லியுள்ளான். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, இளையவனை நன்றாக போட்டு அடித்து இருக்கிறான். விஷயம் எனக்கு தெரிந்த பிறகும், அவன் போக்கு மாறவில்லை.

அந்த இளம்பெண் எங்கள் ஏரியாவில்தான் இருக்கிறாள். அவள் கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கிறாள்.  வசதியான குடும்பம். வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து ஓட்டல் நடத்துகிறார்கள். அவர்களது உறவினர்கள் எல்லோரும் பல்வேறு அரசியல் கட்சிகளில் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த பெண்ணுடன், என் மகன் பழகுவது அவர்களுக்கு தெரிந்தால் ஏதாவது பிரச்னை வருமா என்று பயமாக இருக்கிறது. இருவரும் காதலிக்கிறார்களா, இல்லை ஜாலிக்காக பழகுகிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அந்தப் பெண் உண்மையாக பழகி இவன் ஜாலிக்காக பழகினாலும் பிரச்னை தானே. அப்படி ஏதாவது நடந்தால் இந்த ஊரிலேயே எங்களை வாழ விட மாட்டார்கள்.

அந்த பெண்ணிடம் கேட்கலாம், எச்சரிக்கை செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் மூத்தவனுக்கு தெரிந்தால் ஏதாவது கலாட்டா செய்து விடுவானோ என்று கவலையாக இருக்கிறது. அவர்கள் வீட்டில் பேசலாமா என்று தெரியவில்லை. அவர்கள் ஏதாவது தப்பாக நினைத்துக் கொண்டு தகராறு செய்வார்களோ என்று யோசனையாக உள்ளது. ஊரை காலி செய்து கொண்டு போய் விடலாமா என்றால் மூத்தவன் ‘முடியாது’ என்கிறான். அவனை ஏதாவது வேலைக்கு போக சொன்னால் ‘அரியர்ஸ் ரிசல்ட் வரட்டும் பாக்கலாம்’ என்கிறான். நான் வேலைக்கு செல்லும் போதெல்லாம் அந்த பெண்ணின் வீட்டு வழியாகத்தான் போக வேண்டும். அப்போதெல்லாம் அவர்கள் வீட்டிலிருந்து யாராவது கூப்பிட்டு கேட்டு விடுவார்களோ என்று பயமாக உள்ளது.

என் மகன் செய்யும் வேலைகளால், வீட்டு உரிமையாளர் வேறு ‘எப்போது காலி செய்யப் போகிறீர்கள். இது லாட்ஜ் கிடையாது. இப்படியே போனா போலீஸ்ல புகார் பண்ணிடுவேன்’ என்று மிரட்டுகிறார். இந்த விஷயத்தை உறவினர்கள், தோழிகள் என்று யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் என் பையனை தவறாக நினைப்பார்களோ என்று தயக்கமாக உள்ளது. அதனால் யாரிடமும் ஆலோசனை கேட்க முடியவில்லை. சில நாட்களாக அவனுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறான். கேட்டால், என்ன பிரச்னை என்று சொல்ல மறுக்கிறான்.

‘அதையெல்லாம் உன் கிட்ட எப்படி சொல்றது’ என்று கேட்கிறான். பிறகு டாக்டரை பார்க்க வேண்டும் என்று பணம் வாங்கிக் கொண்டு போனான். ஏதேதோ மாத்திரைகள் வாங்கி வந்தான். என்ன எதுவென்று எங்களிடம் காட்டவில்லை. அவன் உடல் நலம் ஏதாவது பாதிக்கப்பட்டு இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. மூத்தவனை நினைத்தால் ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவில் தூக்கம் வருவதில்லை.

என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆனால் பதில்தான் தெரியவில்லை. என் மகனை சரியான வழிக்கு திருப்ப முடியுமா? அந்த பெண்ணிடம் பழகுவதை தடுக்க முடியுமா? உண்மையாக காதலிக்கிறார்களா? இல்லை ‘சும்மா’ பழகுகிறார்களா? விஷயம் தெரிந்தால் பெண்ணின் வீட்டில் பிரச்னை செய்வார்களே... அதை சமாளிக்க என்ன செய்வது? அவன் உடல் நிலையில் ஏதாவது பாதிப்பு இருக்குமா? ஒன்றும் புரியவில்லை தோழி? இந்தப் பிரச்னைகளை எல்லாம் சரி செய்ய முடியுமா தோழி? இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது? என்ன செய்வது? பிரச்னையில் இருந்து எப்படி விடுபடுவது? எனக்கு வழி காட்டுங்கள் தோழி?

இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்கள் கடிதத்தை படிக்கும் போது, நீங்கள் ஒரு நல்ல அம்மாவாக உங்கள் மகன்களை வளர்த்தது தெரிகிறது. பொதுவாகவே எந்த தாயும் தன் பிள்ளைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை பெரிதாக கண்டிக்க மாட்டார்கள். தங்கள் பிள்ளைகளை யாராவது குறை சொன்னாலும் அதை ஏற்க மாட்டார்கள். நாம் வளர்க்கும் பிள்ளைகள் தவறு செய்ய மாட்டார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.

உங்கள் மூத்த மகனின் குணத்தில், பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் திடீரென வந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு புள்ளியில் அவனிடம் ஏற்பட்ட அந்த மாற்றத்தை ஆரம்பத்திலேயே கவனிக்க தவறி விட்டீர்கள்.பொதுவாக தாய் இல்லாமலோ, தந்தை இல்லாமலோ ஒரு குழந்தை வளரும் பொழுது அவர்களுக்கு செல்லம் அதிகமாக கிடைக்கும். இருவரின் அன்பையும் சேர்த்து ஒருவர் வழங்கும் பொழுது கண்டிப்பு குறைவாகவே இருக்கும். உங்கள் இளைய மகன் பொறுப்போடு நடந்து கொள்கிறான்.

ஆனால் மூத்த மகன், உங்கள் கணவர் இருக்கும் பொழுதே சின்னச் சின்ன தவறுகள் செய்துள்ளான். அவற்றை உங்கள் கணவரும் கண்டித்துள்ளார். அவர் இறந்த பின்பு அவனை கண்டிக்க ஆள் இல்லாமல் போய்விட்டது. குழந்தைகள் பள்ளிப்பருவத்தில் தவறு செய்யும் பொழுதே அவர்களை கண்டித்து வழிக்குக் கொண்டு வருவது எளிது.

ஆனால் 18 வயது நிரம்பிய ஒரு ஆண் சில விஷயங்கள் செய்யும் பொழுது, உங்களால் அதை அவ்வளவு எளிதாக தடுப்பதோ, கண்டிப்பதோ கஷ்டம். அதனால் அவன் போக்கை எளிதில்  மாற்றிவிடவே முடியாது. மேலும் அவன் சின்னச் சின்னத் தவறுகள் செய்யும்போதே அதை கண்டித்து அவனுக்கான பொறுப்பை உணர்த்தி இருக்க வேண்டும். கவனிக்காமல்.... கவனித்திருந்தாலும் கண்டிக்காமல் விட்டு விட்டீர்கள்.

இப்பொழுது நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக தோன்றுகிறது. அவன் தன்னைப் பற்றிய விஷயங்களுக்கும், தன்னுடைய உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. அவன் தன் அம்மாவைப் பற்றியோ,  தம்பியைப் பற்றியோ யோசிப்பதாக தெரியவில்லை. அந்த அளவுக்கு அவனுடைய குணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நான் கூறியது போல இந்த மாற்றம் திடீரென்று வந்திருக்க வாய்ப்பில்லை. சிறிது சிறிதாகத் தான் ஏற்பட்டிருக்கும். அப்பொழுதே அவனை கண்டித்து அவன் செயலைப் பற்றி புரிய வைத்திருக்கலாம். உங்கள் மகன் மனரீதியாக பாதித்திருந்தால் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்று குணப்படுத்தலாம்.

அவன் செயல்களையும் குணத்தையும் இப்போது மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அவனாகப் பட்டு புரிந்து, தெளிந்தால் தான் உண்டு. நீங்கள் அவனிடம் அவன் செயல்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்பதை மீண்டும் மீண்டும் பதிய வைக்கலாம். அவனாகப் புரிந்து கொண்டால், மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி மாறிவிடுவான் என்று உறுதியாகவும் சொல்ல முடியாது. ஆனால் முயற்சி செய்யலாம்.

தனது செயல்களினால், என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் என்றே தோன்றுகிறது. அவன் அறியாத வயதில் இதை செய்யவில்லை. அவன் செய்யும் செயல்களை மாற்றிவிட முடியும், தடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. அந்தப் பெண்ணை அவன் உண்மையாக காதலிக்கிறானா இல்லை வெறுமனே பழகுகிறானா என்பது அவனுக்குத்தான் தெரியும். அந்தப் பெண்ணுடன் ஏற்பட்டுள்ள உறவை தொடர்வதும் பிரிவதும் அவன் விருப்பம்.

எதுவாக இருப்பினும் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க அவன் தயாராக இருக்க வேண்டும். அவனுக்கு வேறு ஏதாவது உடல் ரீதியான, மனரீதியான பிரச்சனை இருந்தால் அவன் வெளியே சொன்னால் தான் அதற்கான தீர்வை தர முடியும். நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது நீங்களும் உங்கள் இளைய மகனும், அவனைப் பற்றிய கவலைகளை விட்டு விடுங்கள். அதற்கு பதில் உங்களின் கருத்துகளை அவனிடம் ஆழமாகப் பதிய வையுங்கள். அதற்கு மட்டும் முயற்சி செய்யுங்கள். முடிவை அவனிடம் விட்டுவிடுங்கள். அவன் எடுக்கும் முடிவிற்கு அவனே பொறுப்பு. இதை நீங்கள் கடந்து செல்லுங்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்