Jun 18, 2021
ஆலோசனை

பாத்திரங்கள் பளபளக்க...

நன்றி குங்குமம் தோழி

*வெள்ளிப் பாத்திரங்களுக்கு  பற்பசையை நன்றாகத் தடவி பின்பு தேய்த்தால் பாலீஷ் போட்டதுபோல மின்னும்.

*வெள்ளிப் பாத்திரங்களை அலம்பும் தண்ணீரில் சிறிது பாலைச் சேர்த்தால் வெள்ளிப் பாத்திரங்கள் பளபளக்கும்.

*தாமிரம் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் மேல் படிந்திருக்கும் பச்சை நிறத்தைப் போக்க வினிகரையும், உப்பையும் கலந்து நன்கு தேய்த்து அலம்ப வேண்டும்.

*திரைச்சீலைகளில் உள்ள பித்தளை வளையங்களை வினிகர் கலந்த நீரில் நன்றாக கொதிக்க வைத்தால் பளபளவென்றாகிவிடும்.

*கண்ணாடி பாத்திரங்களை தண்ணீரில் சிறிது துணிகளுக்கு ஊற்றும் நீலத்தைக் கலந்து கழுவி பின்னர் வெந்நீரில் கழுவினால் பளபளக்கும்.

*குளிர்காலங்களில் முகம் பார்க்கும் கண்ணாடிகளில் சோப்பு நீரை நன்கு தடவி பின்னர் மெல்லிய துணியால் துடைத்தால் புகை படிந்ததுபோல ஆகாமல் பளபளக்கும்.

*மெல்லிய டிஷ்யூ மற்றும் செய்தித்தாள்களால் கண்ணாடி ஜன்னல்களை துடைத்தால் பளபளக்கும்.

*பாத்திரங்களை அலம்பும் நீரில் அவ்வப்போது சிறிது வினிகரைக் கலந்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.

*பித்தளை, தாமிரப் பாத்திரங்கள் பளிச்சிட புளித்த தயிரில் அந்தப் பாத்திரங்களை சிறிது நேரம் ஊற வைத்து சபீனாவினால் அழுத்தி தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவி எடுத்தால் பளிச்சென்றாகி விடும்.

*பூஜை விளக்கு முதலிய பித்தளை பாத்திரங்களை தேய்த்துவிட்டு விபூதி கொண்டு துடைத்தால் பளிச்சென இருக்கும்.

*புதிய பிளாஸ்டிக் பாத்திரங்களைக் கழுவும்போது சிறிது உப்பு நீர் சேர்த்துக் கழுவினால் பிளாஸ்டிக் வாடை போய்விடும்.

*வாணலி கறையா இருந்தால் சிறிது சமையல் உப்பைப் போட்டு சூடுபடுத்தி விட்டு அதை பேப்பரால் துடைத்தால் வாணலி புத்தம் புதுசாகத் தெரியும்.

*அலுமினிய பாத்திரத்தின் உட்பகுதியில் கருப்பு நிறமாக இருந்தால் ஒரு தக்காளியை வெட்டிப்போட்டு வேக வையுங்கள். கருப்பு நிறம் மாறிவிடும்.

*பால் பாத்திரங்களின் அடியில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

*டிகாஷன் போட்டு இறக்கி தங்கும் சக்கையைக் கொண்டு எவர்சில்வர் பாத்திரங்களைத் தேய்த்தால் பளிச்சென மின்னும்.

*எலுமிச்சை தோலைக்கொண்டு எண்ணெய் பிசுக்கு பாத்திரங்களை தேய்த்தால் சுத்தமாகி விடும்.

*தயிர், மோர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்ததும் வெயிலில் காய வைத்தால் வாடையும் போய்விடும். கிருமிகளும் அண்டாது.

*உணவுப் பண்டங்களை எண்ணெயில் வதக்கும்போது பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உப்பை தெளித்துவிட்டால் உணவுப்பண்டங்கள் பாத்திரத்தோடு ஒட்டாது.

தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.