Aug 13, 2022
ஆலோசனை

டிஜிட்டல் கடன் செயலிகள் எச்சரிக்கை!

நன்றி குங்குமம் தோழி  

பொருளாதாரம், நிதி மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான முக்கியமான பிரச்னைகள் குறித்த உரையாடலை, மக்களிடையே உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு ஆன்லைன் ஆராய்ச்சி தளமாக Econfinityயை உருவாக்கியுள்ளார் வேலூரைச் சேர்ந்த மஞ்சரி. இந்த தளம், பொருளாதாரம் குறித்த பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கு, ஆழமான பகுப்பாய்வை வழங்கி, ஆராய்ச்சிகளின் உதாரணங்களுடன் எளிய மொழியில் விளக்கங்களைக் கொடுக்கிறது. மேலும், அதே பெயரில் இவர் இயக்கி வரும் யூடியூப் சேனலிலும் - எளிய தமிழில் முதலீடு, சேமிப்பு எனப் பொருளாதாரம் சம்பந்தமான பல கோணங்களை மக்களுக்கு சுலபமாக புரியும்படி பதிவு செய்து வருகிறார்.  

பூனாவின் புகழ்பெற்ற சிம்பையாசிஸ் கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற மஞ்சரி, கல்லூரி படிப்பிற்குப் பின், பொருளாதாரம் சம்பந்தமான பெரு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், இவருக்கு ஆராய்ச்சிகளிலும், கற்பித்தலிலும் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.பொருளாதாரம் குறித்த பல புத்தகங்களை மஞ்சரி படித்திருந்தாலும்,  அவை அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருந்துள்ளன. தமிழில் பொருளாதார நூல்கள் மிகக் குறைவாகவும், குறிப்பாகப் பொதுமக்கள் புரிந்து கொள்ளக் கூடிய எளிய மொழி நடையிலும் இருக்கவில்லை. இதனால் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் பொருளாதாரம் குறித்த சந்தேகங்களை தன் யூடியூப் சேனல் மூலம் தெளிவுபடுத்தி வருகிறார்.

‘‘பொருளாதாரம் ஒரு மனிதனின் அடிப்படை புரிதல்களில் ஒன்றாக இருக்க வேண்டும். வெறும் சம்பாதித்து மட்டும் நம் பொருளாதாரத்தை உயர்த்திவிட முடியாது. சரியான திட்டமிடல், சேமிப்பு, முதலீடு போன்ற பல வழிமுறைகள் மூலம் நம் வாழ்நிலையை முன்னேற்றலாம். தனிப்பட்ட நிதி நிர்வாகத்தில் தொடங்கி, ஒரு நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது வரை பொருளாதார அறிவு நமக்குத் தேவைப்படுகிறது” என்கிறார் மஞ்சரி. இவர், ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த தகவல்களைப் பகிர்கிறார்.

“கோவிட் நேரத்தில் - எந்த ஆவணமும் இல்லாமல், உடனே கடன் வாங்கும் ஆன்லைன் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதை பெரும்பாலும் மாணவர்களும் இளைஞர்களுமே அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த செயலிகளில் ஆயிரம் ரூபாயைக் கூட உடனடிக் கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும்.கொரோனா காலத்தில் பலரும் சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு என கடினமான நிதி நெருக்கடியில் பாதிக்கப்பட்டனர்.  

இதனால் மக்கள் இந்த உடனடி கடன் செயலிகளை நம்பி வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம் போன்ற செலவுகளுக்காகச் சிறிய தொகைகளைக் கடனாக வாங்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த ஆன்லைன் செயலிகள், அதிகப்படியான வட்டியுடன், பல மறைமுக கட்டணங்களையும் வசூலித்துள்ளனர். மேலும் கடன் ஒப்பந்தங்களின் போது சில மறைமுகநிபந்தனைகளையும் விதிமுறைகளையும் வைத்து நம் தொலைபேசி விவரங்களை எடுப்பதாக புகார்கள் எழுந்தன.  இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கிப் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகளும் கடந்த இரண்டு மாதங்களாகச் செய்திகளில் பார்க்க முடிந்தது.

சைபராபாத்தைச் சேர்ந்த 36 வயதான நபர், 11 ஆன்லைன் டிஜிட்டல் ஆப்களிலிருந்து சுமார் 80,000 ரூபாயைக் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் வட்டி மற்றும் இதர அபராத கட்டணங்கள் என மொத்தமாக இரண்டு லட்சம் வரை திரும்பச் செலுத்த வேண்டி இருந்துள்ளது, இதனால் அவர் மனமுடைந்து ஜனவரியில் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை விசாரித்த சைபராபாத் காவல் அதிகாரிகள் - சீனா மற்றும் பூட்டான் நாட்டு நிறுவனங்களைத் தழுவி இந்த செயலிகள் இயங்கி வந்ததையும், இவர்கள் 35% வரை வட்டி வசூலிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து நாடு முழுவதும் பல டிஜிட்டல் கடன் செயலிகளை அரசாங்கம் கண்காணித்து வருகிறது, சீன செயலிகள் பலவும் தடை செய்யப்பட்டுள்ளன.  இதில் பாதிக்கப்பட்ட பலரும், இந்த செயலிகள் நம் தொலைபேசியின் தகவல்களை திருடி அதை மற்ற நிறுவனங்களுடன் பகிர்வதாகவும் கடனை திருப்பி செலுத்த முடியாத போது, வாட்ஸ்-ஆப்பில் தொடர் தொல்லைக் கொடுத்தும், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவோம் என்று மிரட்டியும் மக்களைத் துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், நம் தொலைபேசியில் இருக்கும் தொடர்பு எண்களுக்கு, ‘குறிப்பிட்ட இந்த நபர், எங்கள் நிறுவனத்திடமிருந்து இந்த தொகையைக் கடனாகப் பெற்றுள்ளார். அந்த பணத்தை நீங்கள் திருப்பி செலுத்துங்கள்’ என்றும், பாதிக்கப்பட்ட நபரை மோசடி செய்பவராகச் சித்தரித்து குறுஞ்செய்திகள் அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

“இந்த செயலிகள் பல நிறுவனங்களின் பெயர்களில் இயங்கி வந்தாலும், ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடனே இருக்கின்றன. மக்கள் உணர்ச்சிவசத்தில் பலவீனமாகி எடுக்கும் முடிவுகளை இவர்கள் தங்களின் லாப நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். சரியான பொருளாதார திட்டமிடலும் விழிப்புணர்வும் இல்லாததே மக்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்குவதற்கான முக்கிய காரணம். ஒரு செயலியிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கி, மறைமுக கட்டணங்களுடன் 30% வட்டியைத் திரும்பிச் செலுத்த ஆரம்பித்து, அதன் 30% வட்டிக்காக வேறு ஆப்களில் இருந்து கடன் வாங்கும் ஒரு சக்கரத்தில் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர்’’  என்கிறார் மஞ்சரி.

இதுபோன்ற உடனடி கடன் வாங்கும் போது, அது ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் கூட, ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் விரிவாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் கடன் வாங்கப்போகும் தளத்தைப் பற்றி மக்கள் கூறியிருக்கும் கருத்துக்களை ஆராய வேண்டும். அவை முறையாக ஆர்.பி.ஐயுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிசெய்த பின்னரே கடன் வாங்க வேண்டும்.  இதற்கிடையில், பயனர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் கூகுள்,  சில கடன் செயலிகளைப் பயன்பாடுகளை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.  

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்