Sep 30, 2022
ஆலோசனை

தலைமுறைகளை உருவாக்கும் பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

டிஜிட்டல் யுகம், உலகமே உள்ளங்கையில், அறிவியல் வளர்ச்சி என்று உலகம்  சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் இன்றைய தலைமுறையிடையே இயற்கையாக நடக்கும் மகப்பேறு பற்றியும், குழந்தை பெற்ற பின் எப்படி அந்த குழந்தையை பராமரிக்க வேண்டும் என்பது பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை நிதர்சனமாக்குகிறது, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர் ஜெயஸ்ரீ உடனான இந்த உரையாடல்.

“சோஷியாலஜி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, ‘அடுத்து என்ன பண்ணப் போற’னு வீட்டில் கேள்வி! வீட்டில் எல்லோருமே அரசு வேலையில் இருப்பதால் என்னையும் அதற்கு முயற்சி பண்ண சொன்னாங்க. ஆனால், எனக்கோ சின்ன வயதிலிருந்தே மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்து வேலை பார்க்கணும்னு ஆசை. அம்மா ஆசிரியர் துறையில் சேர சொன்னாங்க. அவங்க ஆசைக்காக சமூக பணித் துறையில் முதுகலைப் பட்டம் சென்னை ராஜிவ் காந்தி நேஷ்னல் இன்ஸ்டியூட்டில் முடித்தேன். படிக்கும் போது களப்பணி மற்றும் ஆய்வுகள் எல்லாமே மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் குறித்து பல விஷயங்களை ஆழமாக கற்றுக் கொண்டேன்.

என்னுடைய கல்வி மற்றும் ஆய்வைப் பார்த்து, இந்திய அரசு சார்பில் சீனாவிற்கு 15 நாட்கள் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு பல விஷயங்கள் என்னை மேலும் தெளிவுப்படுத்தியது. அதில் மறக்கமுடியாத நிகழ்வு சீன அதிபருடன் அமர்ந்து உணவு அருந்தியது. இதையெல்லாம் வீட்டில் பார்த்தவங்க ‘நீ என்னென்னமோ பண்ணிட்டு இருக்க, இந்த NET தேர்வெல்லாம் எழுதுனா ஈசியா வேலை கிடச்சுடும்’னு சொல்ல, அவங்க விருப்பத்திற்காக எழுதி, அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சியும் பெற்றேன்.

நல்ல சம்பளத்துக்கு வேலையும் கிடைத்தது. ஆனால், எனது முழு கவனமும் என்னுடைய களப்பணியில் மட்டுமே இருந்ததால் வேலையை வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். என் அக்காவை தவிர வீட்டில் எல்லாரும் என்னை திட்டினாங்க” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஜெயஸ்ரீ, தான் செய்யும் வேலைகள் பற்றி பேசினார்.

‘‘ ‘உயிர்மெய்’ என்கிற பெயரில் மகப்பேறு குறித்தான சந்தேகங்கள், குழந்தைக்கு தாய்ப்பால் எப்படி கொடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை சொல்லி வருகிறேன். திருமணமான பெண் கருவுற்றால், அதற்கு முன் அவர்களது உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். ஒரு முறை மாதவிடாய் தள்ளிப் போகும் போது தான் அந்த பெண்ணுக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரிய வரும். ஆனால், அதற்கு முன்னரே கரு உருவாகி இருக்கும். எனவே ஒரு தம்பதியினர் திருமண வாழ்க்கையில் திட்டமிடும் போது அவர்களது உடல் மற்றும் மன நலனில் அக்கறை காட்ட வேண்டும். 15 வருடங்களுக்கு முன், கருத்தரிப்பு குறித்து சிறப்பு மருத்துவம் எல்லாம் கிடையாது.

இப்போது அந்த மருத்துவத்திற்கான செலவும் அதிகம். கருத்தரிக்க வேண்டும் என்பதையே ஒரு சிலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது போல் பார்க்கிறார்கள். இது போன்ற மன உளைச்சல், வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் சோர்வு, சமூகம் கொடுக்கும் அழுத்தம் போன்ற காரணிகளால் கருத்தரிப்பு என்பது சவாலான விஷயமாக மாறி நிற்கிறது. இது போன்ற மன அழுத்தங்களில் இருந்து வெளியே வரவைத்து, அவர்களின் உணவுப் பழக்கம், கருத்தரிப்புக்கான உடற்பயிற்சி, யோகா, கவுன்சிலிங் என எல்லாம் கொடுக்கிறேன்” என்று கூறும் ஜெயஸ்ரீ, சில உணவு பொருட்கள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்கிற மூட நம்பிக்கை இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்கிறார்.

“தினை, பப்பாளி, அன்னாசி பழம், நாட்டுக் கோழி போன்றவைகள் சாப்பிடுவதினாலும், அதிக தூரம் பயணிப்பதாலும் கரு கலைந்துவிடும் என்ற கருத்துள்ளது. அந்த காலத்தில் பெண்கள் செய்யாத வேலையா? விவசாயம், வீட்டு வேலை, கிணற்றில் தண்ணீர் இரைப்பது என அனைத்து வேலையும் செய்து வந்தார்கள். அவர்கள் ஆரோக்கியமாக தான் குழந்தை பெற்றுக் கொண்டார்கள்.

மேலை நாடுகளில் கருவுற்ற பெண்களின் உணவுகளில் பப்பாளி, அன்னாசி பழம் இருக்கிறது. இங்கு காரணமாக சொல்வது இந்த பொருட்கள் உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்தி கருவை கலைத்திடும் என்பது தான். ஆனால் இவர்கள் சொல்லும் இந்த சூடு பித்தத்தினால் வருவது. தூக்கமின்மை போன்ற காரணிகளால் வரும் சூடுதான் பிரச்னை. மற்றபடி உணவின் மூலமாக வருவது பெரிய பாதிப்பில்லை.

அதே சமயம் அதிக அளவில் ஒரு உணவை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் பிரச்னைதான். அப்படி எடுக்கும் போது அம்மாவோட உடல் நலன் பாதிக்கப்படுவதால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம்” என்று கூறும் ஜெயஸ்ரீ, கருத்தடை மற்றும் மாதவிடாய் தள்ளிப்போவதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளின் பின் விளைவுகள் பற்றி கூறினார்.

‘‘கோயிலுக்கு போகணும், டூர் போகணும், விரதம் இருக்கணும் போன்ற காரணங்களுக்காக மாதவிடாய் தள்ளிப் போடுவதற்காக சிலர் மாத்திரைகளை எடுக்கிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். இந்த மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் கண்டிப்பாக இருக்கும். சில பெண்களுக்கு இந்த மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் தான் மாதவிடாயே ஏற்படும்.

அந்த அளவு தங்களின் உடலை  மாற்றி வைத்திருக்கிறார்கள். மாதவிடாய் தள்ளிப் போடுவதற்கு மாத்திரைகள் எடுக்கும் போது அவர்கள் கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதனை தவிர்த்து, வாழ்க்கை மற்றும் உணவு முறைகளை மாற்றினால் மட்டுமே சரி செய்ய முடியும்”  என்று கூறும் ஜெயஸ்ர. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.

“மாதவிடாய் காலங்களில் மூட் ஸ்விங் இருக்கும். அப்படி இருக்கும் போது கர்ப்பக்காலத்தில் அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால், ஒரே விஷயத்துக்கு சந்தோஷமும் படுவார்கள், சென்சிட்டிவாகவும் ரியாக்ட் செய்வார்கள். கர்ப்பகாலத்தில் எந்த அளவு ஸ்ட்ரஸ் ஃபிரியா, ஹேப்பியா இருக்காங்களோ அந்த அளவு குழந்தை நன்றாக வளரும். ஒரு குழந்தையின் 75% மூளை வளர்ச்சி மூன்று மாதத்திலிருந்து, ஒன்பது மாதத்திற்குள்ளும், மீதமுள்ள 25% அந்த குழந்தையின் ஆறு வயதிற்குள் நடந்துவிடுகிறது.

என்னிடம், பலர் குழந்தை அறிவா பிறக்க என்ன சாப்பிடணும்ன்னு கேட்பாங்க. நாம் எல்லோரும் அந்த இன்டலிஜென்ட்டை தான் ஃபோக்கஸ் பண்றோம். அதைவிட முக்கியமானது எமோஷ்னல் இன்டலிஜென்ட்ஸ். இது தான் அந்த குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் குழந்தை அசைகையில், அம்மா வயிற்றை தடவி கொடுக்கும் போது யாரோ ஒருத்தங்க என்னை கவனித்துக் கொண்டு இருக்காங்க, அரவணைக்கிறாங்கன்னு குழந்தைக்கு உணர்வு ஏற்படும். பெரியவங்களான நமக்கே யாராவது ஒருவர் நாம் ஏதாவது செய்யும் போது கவனிக்கவில்லை என்றால் கோவம் வருகிறதல்லவா? அதே போல் தான் கருவில் இருக்கும் குழந்தையும். தாயின் இதய துடிப்பு தான் குழந்தை முதலில் கேட்கும் சத்தம். அதனால் அதை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்றால் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோரும் ஏதோ ஒன்று சொல்லி குழப்பிவிடும் சூழல் தான் இங்கு அதிகம். அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவது அந்த பெண் மட்டுமல்ல, அந்த பெண் வயிற்றில் இருக்கும் குழந்தையும்தான். ஒரு தலைமுறையை உருவாக்கும் பெண்ணிற்கு கர்ப்ப காலத்தில் எந்த ஒரு மன உளைச்சலும் கொடுக்காமல், சந்தோஷமான சூழலை உருவாக்கிக் கொடுக்க
வேண்டியது நம் கடமை.

குழந்தை பிறந்த பின்னர், ‘எப்போதுமே குழந்தைய தூக்கி வச்சுக்காத, அப்புறம் உன்னவிட்டு யார்கிட்டையும் போக மாட்டா…’ என்கிற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை அதன் தாயின் அரவணைப்பில் இருக்கும் போதுதான், தாய்ப்பால் சுரப்பதோடு, அந்த குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கும். அழவிட்டு பால் கொடுப்பதை விட, குழந்தையின் பசி அறிந்து பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தான் அந்த குழந்தைக்கு அம்மா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.

அதை புகட்டும் போது, தாயும், சேயும் சேர்ந்த சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். சில பெண்கள் பால் இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்க உடலை நம்புங்கள். குழந்தை பிறந்த பின் மட்டுமல்ல, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்களும் முதலில் தங்கள் உடல் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று கூறும் ஜெயஸ்ரீ, மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வதோடு, கர்ப்பம் தரிப்பதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘ஒரு பெண் கருத்தரிக்க மட்டுமில்லாமல், நார்மல் டெலிவரிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பதோடு, அரசு அறிவித்திருக்கும் ‘முத்துலட்சுமி ரெட்டி’ போன்ற மகப்பேறு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏழை மக்களிடம் எடுத்துச் செல்கிறேன். கொரோனா அதிகமா இருந்த நேரத்தில் 72 கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு கொடுத்து, அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து வந்தேன். என்னால் முடிந்த வரை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். இதுதான் என்னை ஹேப்பியா வச்சிருக்கு” என்கிறார் ஜெயஸ்ரீ.

தொகுப்பு: அன்னம் அரசு