Aug 13, 2022
ஆலோசனை

டெல்டா+ கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை தாக்குமா?

நன்றி குங்குமம் தோழி

டெல்டா+ வகை கொரோனா, இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு காரணமாக இருக்குமா எனும் கேள்வி மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இது குறித்து முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன், தொற்று நோய்கள் மருத்துவ பிரிவின் இயக்குனரை அணுகி பேசினோம். “எந்தவொரு உயிரினத்திலும் பரிணாம வளர்ச்சியும், உருமாற்றமும் வருவது சாதாரணமானதுதான். எந்த  உயிரினத்தில் அதிகமான இனப்பெருக்கம் நடக்கிறதோ, அதில் பரிணாம வளர்ச்சியும் அதிகமாக காணப்படும். வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளில் நாளுக்கு நாள் உருமாற்றங்கள் நடப்பது இயல்புதான்.

டெல்டா+ உருமாறிய  கொரோனா வகை, கவலை அளிக்கக் கூடிய கொரோனா நோய்த்தொற்று வகையாக அறிவித்திருந்தாலும், அதற்கான முழுமையான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஒரு நோய்த்தொற்றை கவலையளிக்கக் கூடியது என வகைப்படுத்த மூன்று முக்கிய காரணிகள் இருக்க வேண்டும். ஒன்று அது வேகமாக பரவ வேண்டும், இரண்டாவது ஏற்கனவே இருக்கும் வகையைவிட பல மடங்கு ஆபத்தானதாக இருக்க வேண்டும். இது வரை டெல்டா+ நோய் தாக்கியவர்களுக்கு பாதிப்புகள் மிதமாக இருப்பதாகவே நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நம்மிடமிருக்கும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் புதிய வகை கொரோனாவிடம் செயலிழக்க வேண்டும். ஆனால் நம் தடுப்பூசிகள் டெல்டா+ வகைக்கு பாதுகாப்பை அளிக்கும் என நிபுணர்கள் அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.

இது, அதிக அளவில் பரவி, அதிக அளவில் பாதிப்பை உண்டாக்கும் என்றால், இந்நேரம் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் தற்போதைய நிலைப்படி டெல்டா+ வகை நோய், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை பாதிக்கவில்லை. மேலும், இந்த டெல்டா+ வகை மூன்றாம் அலையை உருவாக்கும் என்பதற்கான அதாரங்களும் எதுவும் இல்லை. இதனால் மக்கள் தேவையற்ற பயத்தை தவிர்க்க வேண்டும்” என்கிறார். மூன்றாம் அலை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவைத் தாக்கும் என்றும், குறிப்பாக குழந்தைகள் இந்த கொரோனா அலையில் பாதிக்கப்படுவார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர், டாக்டர் ராஜ்குமார் விளக்குகிறார்.   

‘‘பொதுவாக தொற்று நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதன் பாதிப்புகளும் அமையும். வீரியம் அதிகமாக இருக்கும்போது பாதிப்புகளும் அதிகரிக்கும். மூன்றாம் அலை என்பது கணிப்புதான். அது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்பதும் கணிப்புதான். இரண்டாம் அலைக்கு முன் நாம் அலட்சியமாக இருந்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் பார்த்தோம். அதனால் அதே போல இந்த முறையும் இருக்கக் கூடாது என்பதற்காக அரசாங்கமும், மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கையாக சூழ்நிலையை கையாளுகிறார்கள். மக்கள் அதைக் கண்டு பயப்படாமல் தயார் நிலையில் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.

கொரோனாவின் முதல் அலையின் போது வயதானவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். ஆனால் இரண்டாவது உருமாறிய கொரோனா அலை தாக்குதலில் இளைஞர்களும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த மூன்றாம் அலை, வயதானவர்களுடன் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இது பெரியவர்களையும் தாக்கி குழந்தைகளையும் தாக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இரண்டாம் அலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு கவலை தரும் விதத்தில் எந்த பிரச்சினையும் உருவாகவில்லை. இந்த மூன்றாம் அலையிலும் குழந்தைகளுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என்று நம்புகிறோம்.

மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளை காக்க, பெரியவர்களின் பங்கு மிக முக்கியமாகும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கூடுமானவரை கூட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பெரியவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அவர்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைந்து அதன் வழியே வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு பரவும் வாய்ப்பும் குறையும். அதனால் எந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என குழம்புவதைவிட்டு, கிடைக்கும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் குழந்தைகளை நாம் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க முடியாது.

இந்த கொரோனா ஊரடங்கில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது குழந்தைகள்தான். அவர்களால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, நண்பர்களுடன் சேர்ந்து விளையாட முடியவில்லை. இதனால் உடல் அளவிலும் மனதளவிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களை வெளியே கொண்டு வருவது முக்கியமானதாகும். விரைவிலேயே அவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலை வரும். அப்போது பெற்றோர்கள் பயப்படாமல் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இரண்டாவது அலைக்குப் பின் குழந்தைகள் சந்திக்கப்போகும் பெரிய பிரச்சினை உடல் பருமன் தான். இது தவிர, எப்போதும் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனை பார்த்து குழந்தைகளின் கண்களும் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டையும் தவிர்க்க பெற்றோர்கள் குழந்தைகளின் உணவில் பாதி அளவு காய்கறிகளை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற வேண்டும். குழந்தைகள் சாப்பிடும் நொறுக்குத் தீனியை முழுமையாக தடை செய்ய முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு போதுமான விட்டமின் டி கிடைக்க வேண்டும்.

அவர்களை குறைந்தது பத்து நிமிடமாவது பால்கனி அல்லது மொட்டை மாடியில் வெயிலில் இருக்க வையுங்கள். அதேபோல குழந்தைகள் வெளியே சென்று விளையாடாதபோதும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தவரை குழந்தைகளுடன் நேரத்தை செலவழியுங்கள். அவர்கள் இப்போது நண்பர்களுடன் பேச வாய்ப்பு இருக்காது, வெளியே செல்ல முடியாது, வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் அவர்களுக்கு ஒரு நல்ல துணை பெற்றோர்களாகிய நீங்கள் தான். குழந்தைகளுடன் பேச, விளையாட நேரம் ஒதுக்குங்கள். உணவு, உடற்பயிற்சியுடன் உரையாடல்களும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க மிகவும் தேவை.

இந்த மூன்றாம் அலை பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் தாக்கும் என நிபுணர்கள் கூறுவதால், அதற்கேற்ற மருத்துவ வசதிகளை மாற்றியமைக்க வேண்டும். குழந்தைகளை ஒரு மருத்துவமனையிலும் பெற்றோர்களை வேறொரு மருத்துவமனையிலும் வைத்திருப்பது சிக்கல்களை அதிகரிக்கும். அதற்கு மாற்றாக குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முயற்சிக்கவேண்டும். இதுதவிர இரண்டாம் அலையில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு போதுமான வசதிகள் கிடைக்கவில்லை அல்லது தாமதமாக கிடைத்தது. மூன்றாம் அலையில், அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும்.

தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் வசதி மற்றும் மருந்துகளை தேவையான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும். மருந்துகளை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதைவிட உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். இரண்டாம் அலையில் நாம் கவனிக்காமல் விட்ட மற்றொரு பிரிவினர் கர்ப்பிணிப் பெண்கள். இந்தமுறை அவர்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டால், கொரோனாவைக் கட்டுப்படுத்தி, அதே சமயத்தில் வேறு பாதிப்புகள் இல்லாமல், குழந்தைக்கு தொற்றுப் பரவாமல் சிகிச்சையும் அளிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாவிட்டாலும் பள்ளி, கல்லூரிகளை நாம் திறந்தே ஆகவேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளையும் திட்டமிட வேண்டும். அதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதத்தில் பள்ளிகளையும் வகுப்புகளையும் மாற்றியமைக்க வேண்டும். பொதுவாக அம்மை நோய்கள் ஒருமுறை வந்தால் அதற்கான எதிர்ப்பு சக்தி உடலில் தோன்றி அடுத்தமுறை வராமல் தடுக்கும்.

ஆனால் கொரோனா வந்து குணமானவர்களுக்கு கிடைக்கக் கூடிய எதிர்ப்பு சக்தி, குறைந்த காலம் வரை மட்டுமே நீடிக்கிறது. கொரோனா உருமாறிக் கொண்டே வருவதால் அதற்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசி மட்டுமே கை கொடுக்கும். ஒவ்வொரு முறை கொரோனா உருமாறி தாக்கும் போதும், அதை சமாளிக்க ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலை உருவாகலாம். இதே நிலை தொடரும்போது அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பட்சத்தில், சில வருடங்கள் கழித்து கொரோனாவும் சாதாரண சளி இருமல் போன்று வலுவிழந்து போகும். கொரோனா உருமாற்றம் அடைவது போல், நாமும் அதற்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அதனுடன் வாழப் பழகுவதே இதற்கான தீர்வாகலாம்” என்கிறார்.

மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கி விடுமோ என்று பயப்படுவதை விட்டு அதற்கான முன்னேற்பாடுகளில் பெற்றோர்கள் ஈடுபடவேண்டும். சிலர் அதீத பயத்திலும், சிலர் நமக்கு வராது என்ற தைரியத்தில் எலட்சியமாகவும் இருக்கிறார்கள். அதன் விளைவுகளை இரண்டாம் கொரோனா அலையில் நாம் பார்த்தோம். எனவே விழிப்புணர்வுடன் அரசாங்கமும், மருத்துவர்களும் தரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒன்றிணைந்து கொரோனாவை ஒழிக்க போராடுவோம்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்