Sep 23, 2021
ஆலோசனை

நாம் புதிதாய் வாங்கும் பொருட்களுக்குள் எதற்கு சிலிக்கான் பாக்கெட்?

நன்றி குங்குமம் தோழி

நாம் வாங்கும் புதுத் துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், குறிப்பாய் ஹேண்ட் பேக், சூட்கேஸ், காலணிகள் போன்றவற்றை வாங்கும்போது அத்துடன் உள்ளே வெள்ளை நிறத்தில் ஒரு சிறிய பாக்கெட் போடப்பட்டிருக்கும். நாம் அந்த பாக்கெட்டை எதற்கு எனத் தெரியாமலே குப்பையில் தூக்கி எறிந்துவிடுவோம். அந்த சிறிய பாக்கெட்டின் பெயர் சிலிக்கான். புதிதாய் நாம் வாங்கும் பொருட்களுக்குள் சிலிக்கான் பாக்கெட் எதற்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

சமையலறையில்…

முக்கியமாக வீட்டில் சமையலறை எப்போதுமே ஈரப்பதத்துடன் காணப்படும். இதன் காரணமாய் நாம் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், வெல்லம், சர்க்கரை போன்றவை ஈரப்பதத்தில் கெட்டியாகி, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் சமையலறையில் உண்டாகும். சமையலறையில் உணவுப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்திற்கு அருகே இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்துவிட்டால், சமையலறையின் ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொண்டு, உணவுப் பொருட்ள்களை எப்போதும் ஃப்ரஷ்ஷாக வைத்திருக்கும்.

மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டால்…

இது செல்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் அடிக்கடி நிகழும் பிரச்சனை. எதிர்பாராமல் மொபைல் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால், மொபைல் பேட்டரி, மெமரி கார்டு, சிம் கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, சிலிக்கான் ஜெல் பாக்கெட்டு களுடன் ஈரமான மொபைலைப் போட்டு வைத்துவிட்டால், மொபைலுக்குள் இருக்கும் ஈரத்தை சிலிக்கான் ஜெல் உறிஞ்சிவிட்டு, மொபைலை புதிதாக மாற்றிவிடும். பிறகு மொபைலை ஒரு நாள் முழுவதும் காற்றோட்டமாக வைத்தபின் பின் சார்ஜில் போடுவது நல்லது.

ஆவணங்கள் பாதுகாப்புக்கு…

வீட்டில் இருக்கும் முக்கிய ஆவணங்கள், சான்றிதழ், சொத்து பத்திரங்கள், ஆதார் அட்டைகள் போன்றவை செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து ஆவணங்கள் வைத்திருக்கும் பெட்டி அல்லது பையில் போட்டு வைக்கலாம்.

துணிகளை விரைந்து காயவைக்க..

ஈரமாக இருக்கும் துண்டு அல்லது மற்ற துணிகளை உடனடியாய் உலர்த்த நினைத்தால், ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு ஈரத் துணிகளை அத்துடன் போட்டு வைத்தால் துணிகள் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு விரைவாய் காய்ந்துவிடும்.

கூர்மையான பொருட்கள் மழுங்காமல் பாதுகாக்க..

பயன்பாட்டில் இருக்கும் கத்தி, பிளேடு, கத்திரிக்கோல், ரேசர்கள் போன்ற பொருட்கள் ஈரம்பட்டு மழுங்கிப் போகாமல் கூர்மையாக இருக்க வேண்டுமென்றால், அவற்றைப் போட்டு வைத்திருக்கும் டப்பாக்களில் கூடவே சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கூர்மை மழுங்கிப் போய்விடாமல் அப்படியே இருக்கும்.

துர்நாற்றம் குறைய…

எப்போதாவது பயன்பாட்டில் இருக்கும் உடற்பயிற்சி தொடர்பான பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்களில் ஒருவித துர்நாற்றம் எப்போதும் இருக்கும். அவற்றில் துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்கவும், சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களை அத்துடன் போட்டு வைக்கலாம்.

வளர்ப்புப் பிராணிகள்…

வீடுகளில் வளர்ப்புப் பிராணிகளுக்காக வைத்திருக்கும் பிஸ்கட் மற்றும் வேறு சில உணவுகளை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயற்சி செய்வதில்லை. கவர்களில் போட்டு வைத்திருக்கும் அவை விரைவில் கெட்டுப்போகும். அதை தவிர்க்க அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைக்கலாம்.

ஆபரணங்கள்…

தங்கம், வெள்ளி ஆபரணங்கள் சிலவற்றை தினமும் பயன்படுத்தாமல் பெட்டிக்குள் வைத்து பூட்டி வைப்போம். அது நாளடைவில் மங்கியது போன்ற தோற்றம் தரும். நகை இருக்கும் பெட்டிக்குள் ஒருசில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகைகள் எப்போதும் புதுசு போலவே பளபளப்பாய் இருக்கும்.

வீட்டு அலங்காரப் பொருட்கள்…

வீட்டில் கொலு போன்ற சில முக்கிய பண்டிகை தினங்களில் மட்டும் பயன்படுத்துகிற பொம்மைகள், அலங்காரப் பொருட்கள், தோரணங்கள் ஆகியவற்றை அடுத்த ஆண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறம் மங்கியிருக்கும். எனவே மறக்காமல் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களை அதே அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசு போலவே பொருட்கள் காட்சி தரும்.

மர ஜன்னல் மற்றும் கதவுகள்…

நம்முடைய வீட்டின் ஜன்னல், நிலைப்படி, கதவு போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை ஒட்டி வைத்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் சேராமல் கதவு ஜன்னலை காக்க முடியும்.

காலணிகளில் துர்நாற்றம் நீங்க..

என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் வேர்வையால் ஷூக்கள், சாக்ஸ்களில் உள்ள துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க காலணிகளை வைக்கும் இடங்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளைப் போட்டு வைத்தால் காலணிகள் துர்நாற்றங்களில் இருந்து விடுபடும்.நமது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பல்வேறு விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் இந்த சிலிக்கான் ஜெல்களை ஒருபோதும் பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்தக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியேதான் பயன்படுத்த வேண்டும்.

தொகுப்பு: மணிமகள்

படங்கள்: ஜி.சிவக்குமார்