Oct 23, 2021
ஆலோசனை

பிரீ பிரைடல் மேக்கப் அவசியமா?

நன்றி குங்குமம் தோழி

ஆணின் திருமண வயது 28, பெண்ணின் திருமண வயது 21... இதுதான் காலம் காலமாக அரசாங்கம் சொல்லி வரும் திருமணத்திற்கான வயது. ஆனால் இப்போது காலம் எவ்வளவோ மாறிவிட்டது. வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்த பெண்கள் படிப்பு, வேலை, சம்பளம் என அவர்களும் பல கனவுகள் சூழ முன்னேறி வருவதால் பல பெண்களும் 25 வயதில்தான் திருமணம் குறித்த யோசனையே செய்கின்றனர். அதிலும் 27, 29 வயதில் நடக்கும் திருமணங்கள் அதிகரித்து வர அவர்களுக்கான மேக்கப், உடையலங்காரம் என எல்லாவற்றிலும் கூட மாற்றங்கள் தேவைப்படுகிறது.

‘‘இளம் பெண்களாக இருக்கும் போது அவர்கள் தோற்றம் வேறு, அதே பேரிளம் பெண்களாக மாறும் போது அவர்களின் தோற்றம் வேறு. அதற்கான மேக்கப் மற்றும் உடைகளும் கூட வேறு’’ என்கிறார்கள் மேக்கப் ஆர்டிஸ்ட் பிரீத்தி ஜோஷி மற்றும் டிசைனர் விக்கி கபூர்.‘‘இன்னைக்கு பெண்கள் நிறைய படிக்கவும், கத்துக்கவும் ஆசைப்பட ஆரம்பிச்சிட்டாங்க. மேலும் தனக்குன்னு ஒரு அடையாளம், வேலை, சம்பளம் இதெல்லாம் இன்னைக்கு ஆண்களை விட பெண்களுக்கு மிகப்பெரிய தேவையா மாறிட்டு வருது. அப்படி இருக்கும் போது திருமணம் பெரும்பாலும் 25 அல்லது அதுக்கு மேலதான் நடக்குது.

ஆனால் பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு குறிப்பிட்ட வயதிலேயும் உடல் எடை, தோற்றம், அவங்க சருமம் எல்லாவற்றிலும் மாற்றம் நடக்கும். ஆண்கள்ல 30க்கு அப்பறம்தான் இந்த மாற்றங்கள் ஆரம்பிக்கும், பெண்களுக்கு 16 வயசுல இருந்தே மாற்றங்கள் ஒவ்வொரு ரெண்டு வருஷத்துக்கும் ஒவ்வொரு முறை உண்டாகும். 25 வயசுக்கு மேலே என்னதான் நாம டயட், ஆரோக்கியமான உணவு இதெல்லாம் எடுத்துக்கிட்டாலும் கன்னம், கழுத்து, கைகளுடைய அடிப்பகுதி, கைகளின் மேற்பகுதி , இடைப்பகுதிகள்ல வயதுக்கான மாற்றங்கள் உண்டாகும். அதனாலேயே இன்னைக்கு மேக்கப்பும் அதன் அடிப்படையிலே போட வேண்டிய சூழல் இருக்கு’’ என்னும் பிரீத்தி 15 வருடங்கள் அழகுக் கலை துறையில் அனுபவம் வாய்ந்தவர்.

‘‘இன்றைய காலத்தில் மேக்கப் இல்லாமல் பெண்கள் வெளியே செல்வதில்லை. குறைந்தபட்சம் பேஸ் கிரீம் மற்றும் ஃபவுண்டேஷன், லிப்ஸ்டிக் அவசியமாக உள்ளது. 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் என்றால் அவர்களுக்கு சாதாரணமாக போடக்கூடிய மேக்கப் எல்லாம் சரியாக இருக்காது, குறிப்பாக மணப்பெண் மேக்கப். அதற்கென சில டெக்னிக்குகளை நாங்க கடைப்பிடிக்கிறோம். அதில் முதலில் சரும பராமரிப்புக்கான டீஹைடிரேஷன் டெக்னிக். அதாவது சருமத்தின் வயதை குறைச்சுக் காட்டும் செயல்முறை. இதற்கு சருமத்தை மாய்ச்சுரைஸர் பண்ணுவோம். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே ஃபேஷியல், மசாஜ்னு ஆரம்பிக்கிற காரணம் இதுதான்.

அதிலேயே கொஞ்சம் பளபளப்பு, மென்மை இதெல்லாம் அதிகரிச்சிடும், அடுத்து முகப் பொலிவு அல்லது  ஒல்லியான பெண்களுக்கு பூசினார் போல மேக்கப். இதுக்கு வைட்டமின் சி, ஹையலுரானிக் ஆசிட் இருக்கற பிரைமர், கன்சீலர்கள், ஃபவுண்டேஷன் பயன்படுத்துவோம். பெரும்பாலும் பவுடர் பயன்பாடு லைட் டச்சப்கள்தான். காரணம் பவுடர் பூசும் போது சுருக்கங்கள், கோடுகளை உண்டாக்கும். அதீத ஆயில் லுக் கட் செய்ய மட்டுமே இப்போதெல்லாம் பவுடர் பயன்படுத்துறோம். ஹெச்.டி புகைப்படங்களுக்கு ஆயில் அல்லது பளபள லுக்தான் கச்சிதமா இருக்கும்’’ எனத் தனக்குத் தானே மேக்கப் போட்டுக் கொண்டே பிரைடல் மேக்கப் வெரைட்டிகள் குறித்து விவரித்தார்.

‘‘இப்போதெல்லாம் பிரைடல் லுக்குக்கு முன்னாடி பிரீ பிரைடல் மேக்கப் செய்துக்கறாங்க. அதிலேதான் நிறைய மேக்கப் சோதனைகள் செய்வோம். உடைகள் கூட போட்டுப் பார்ப்பாங்க. அதிலே எந்த மேக்கப் மற்றும் உடை செட் ஆகுதோ அதுதான் பிரைடல் மேக்கப் ஆக இருக்கும். மேக்கப் பொறுத்தவரை ஏர்பிரஷ் மேக்கப், ஹெச்.டி மேக்கப் , சாதாரண மேக்கப். தோலில் அதிகமா சரும துவாரங்கள் இருந்தாலோ அல்லது சீரான நிறம் இல்லாம இருந்தாலோ ஏர்பிரஷ் மேக்கப் பயன்படுத்துவோம். ஹெச்.டி மேக்கப், புகைப்படங்கள், வீடியோக்களுக்காகவே போடுறது. இதெல்லாம் அவ்வளவு தேவையா, 25 முதல் 30 வயதுக்கே அவ்ளோ மாற்றங்கள் வந்திடுமான்னு கேட்டா, முன்னாடி 35 முதல் 40 வரைக்கும் கூட பெண்களுக்கு தோல், உடல் மாற்றங்கள் வராது. காரணம் அன்னைக்கு பெண்கள் வீட்டிலேயே இருந்தாங்க. உணவும் ஆரோக்கியமா இருந்துச்சு.

இன்னைக்கு படிப்பு, வேலை இப்படி பெண்களும் ஆண்களுக்கு சரிசமமா இன்னும் சில பெண்கள் ஆண்களை விட அதிகமா கூட வெளியே அலைய வேண்டி இருக்கு. சாப்பாடு, சுற்றுப்புற மாசு, பயன்படுத்துற சோப், ஷாம்பு எல்லாமே நம் தோலின் தன்மையை தீர்மானிக்கிது. அதன் காரணமே இன்னைக்கு 20 வயது பெண்களுக்கு கூட தோல்ல வறட்சி, பரு பிரச்னை, கருவளையம், சரும  சுருக்கங்களை பார்க்க முடியுது. இதனால்தான் மேக்கப்கள்லயும் இன்னைக்கு நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கு’’ என்றார் பிரீத்தி ஜோஷி.

‘‘உடைகள்ல இன்னைக்கு நிறைய பெண்கள் கை முட்டி வரை மறைக்கிற பிளவுஸ்கள் தான் விரும்புறாங்க’’ என சின்ன ஆலோசனைகளுடன் தொடர்ந்தார் டிசைனர் விக்கி கபூர். ‘‘கழுத்து, கைகள், இடைப்பகுதி இப்படி எல்லாவற்றிலும் டிசைனர்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இன்றைய தலைமுறை பெண்கள் பலர் ஒபீசிட்டி பிரச்னைக்கு ஆளாகிறார்கள். அல்லது ரொம்ப ஒல்லியாக இருப்பாங்க.

குண்டா இருக்கிறவங்கள ஒல்லியா காட்டணும், ஒல்லியா இருப்பவர்களை பருமனா காட்டணும். ஒல்லியான பெண்கள்னா வலை, ஆர்கான்ஸா மாதிரியான துணிகளில் உடைகள் அமைத்தால் கொஞ்சம் பூசினால் போல் தெரிவர், பருமனான பெண்கள்னா ஜியார்ஜெட், சாட்டின் மாதிரியான உடைகள் பயன்படுத்துவோம். இதுவே புடவைன்னா பிரச்னையே இல்ல, பிளவுஸ்ல மட்டும் கவனம் செலுத்தினா போதும், லெஹெங்கா, கவுன், மிடி இப்படியெல்லாம் போகும் போது பிரீ பிரைடல் மேக்கப் அவசியம்’’ என்றார் விக்கி கபூர்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: கார்த்திக் சுப்ரமணியம்