Aug 14, 2022
ஃபேஷன்

மேக்கப்-கண்டிஷனர்

நன்றி குங்குமம் தோழி

ஷாம்பூ தொடர்ந்து கண்டிஷனர், ஷாம்பூ + கண்டிஷனர், ஷாம்பூ இல்லாமல் கூட கண்டிஷனர் இப்படி கண்டிஷனர்களில்தான் எத்தனை கண்டீஷன்கள். உண்மையில் கண்டிஷனர்கள் வேலை என்ன? எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? எப்படிப் பயன்படுத்த வேண்டும் விபரமாக சொல்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக். ‘‘பொதுவாகவே ஷாம்பூ பயன்படுத்தும் போது தலையில் இயற்கையாகவே சுரக்கும் சீபம் என்கிற எண்ணெய் பசைத்தன்மை போய் அந்த நிமிஷம் முடி வறண்டு, பறக்க ஆரம்பிச்சிடும்.

இதனால் மேற்கொண்டு சிக்கலாகி வெளியில் போகும் போது மேலும் வறண்டு போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இந்த முடியின் கியூட்டிக்கிள்கள் வறண்டு விரிஞ்சு நுனிகள் வெடிக்கும். இதையெல்லாம் உடனடியாக சரி செய்யக்கூடிய விஷயம்தான் கண்டிஷனர். எந்தெந்த முடிக்கு எப்படிப்பட்ட கண்டிஷனர் தேர்வு செய்ய வேண்டும் என்கிற வரைமுறை இருக்கு...’ தொடர்ந்தார் கீதா அஷோக்.

இரண்டு விதமான கண்டிஷனர்கள் இருக்கின்றன. ஒன்று ஷாம்புவுடன் போடக்கூடிய கண்டிஷனர் மற்றொன்று லீவ் ஆன் (Leave On) கண்டிஷனர். ஷாம்பு போட்டு தலையை அலசிவிட்டு போடக்கூடிய கண்டிஷனர் இரண்டு விதங்களா இருக்கும். ஒன்று க்ரீம் அடிப்படை, மற்றொன்று திரவமாக இருக்கும். லீவ் ஆன் கண்டிஷனர் பொறுத்தவரை எண்ணெயும் சீரமும் கலந்த வகையறாக்கள் ஆக வரும். இந்த வகை நம்முடைய முடி எப்படிப்பட்ட முடி என அதற்கு ஏற்ப இந்த லீவ் ஆன் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சிலருக்கு வறட்சி பிரச்னை இருக்கும், சிலருக்கு பொடுகு பிரச்னை இருக்கலாம், சிலருக்கு முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கும் இப்படி பிரச்சனைகளுக்கு ஏற்ப லீவ் ஆன் கண்டிஷனரை தேர்வு செய்து பயன்படுத்தலாம். இதை எப்படி தலை சீவும் முன்பு எண்ணெய் தேய்ப்பது போல அப்ளை செய்கிறோமோ அந்தப் பாணியில் பயன்படுத்த வேண்டும். போலவே ஷாம்பூ+கண்டிஷனர், ஆயில்+கண்டிஷனர் இப்படியான தேர்வுகள் கூடாது. கண்டிஷனர் எப்போதும் தனியாகத்தான் வாங்க வேண்டும். ஷாம்பூவும் கண்டிஷனரும் ஒரே பிராண்டில் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கூட இல்லை.

ஆனால் ஷாம்பூ+கண்டிஷனர் என சேர்ந்து வரும் ஷாம்புக்களை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை கொஞ்சம் அதிகம் கெமிக்கல்கள் இருக்கும் கண்டிஷனர்களைத் தவிர்ப்பது நல்லது. அதில் கிளிசரின் செட்டரைல் ஆல்கஹால் (Glycerin Cetearyle Alcohol), டிமெதிகோன் (Dimethicone), புரோபிலீன் கிளைகோல் (Propylene Glycol), இவைகள் இல்லாமல் கண்டிஷனர் வாங்குவது கடினம், ஆனால் இதில் ஏதேனும் ஒன்று இரண்டு இல்லாமல் பார்த்து வாங்கலாம். போலவே கிளிசரின் அல்லாத செட்டரைல் ஆல்கஹால் (Cetearyle Alcohol), வைட்டமின் பிஜி கொடுக்கும் பான் தெனோல் (Panthenol - Vitamin BG), செராமைடுகள் (Ceramides), ஷியா வெண்ணெய் (Shea butter) அடங்கியிருக்கும் கண்டிஷனர்கள் முடிக்கு நல்லது செய்யும் கெமிக்கல்கள். இவைகள் இருக்கும் கண்டிஷனர்களை தேர்வு செய்யலாம்’’.

எப்படிப் பயன்படுத்த வேண்டும் :‘‘பொதுவாகவே தலை குளிக்க சுடுதண்ணீரை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் சிறந்தது. தேவைப்பட்டால் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை தான் தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டும். காரணம் உடனடியாக வறண்டு சேதமடையும் விஷயங்களில் முடி தான் முதன்மையானது. ஏனெனில் ஏற்கனவே ஷாம்பூ முடியை வறண்ட தன்மைக்கு மாற்றிவிடும். இதில் சுடுநீரில் ஷாம்பூ பயன்படுத்தி அலசுவது மேற்கொண்டு முடியை வறட்சியாக்கி சேதமாக்கும்.

இன்னமும் சொல்லப்போனால் நன்கு குளிர்ந்த நீரில் தலையை அலசினால் அதுவே கிட்டத்தட்ட ஒரு கண்டிஷனர் போல் செயல்படும். கண்டிஷனரின் மிகப்பெரிய வேலை முடியை மிருதுவாக மாற்றுவது. எனவே தலையின் சருமத்தில் கண்டிஷனர் படாதபடி பயன்படுத்துவது நல்லது. காரணம் கண்டிஷனரில் உள்ள மிருதுவாக்கும் தன்மை முடியின் ஆணிவேரை மேற்கொண்டு மிருதுவாக்கி விரியச் செய்துவிடும். இதனால் முடியின் ஆணிவேர் பிடித்திருக்கும் சருமம் இலகுவாகும் வாய்ப்புகள் அதிகம்.

போலவே தலைச் சருமத்தில் கண்டிஷனரின் சில கெமிக்கல்கள் படும்பொழுது பொடுகுத் தொல்லை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் கண்டிஷனர்கள் முடி உதிர்வதற்கு காரணமாக இருப்பதில்லை. ஆனால் ஒருசில கண்டிஷனர்கள் உருவாக்கும் பொடுகு பிரச்சனைதான் அடுத்து வரக்கூடிய முடி உதிர்தலுக்கு காரணமாகிறது.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்