Jun 18, 2021
ஃபேஷன்

லெஹெங்கா அணிவது ஒரு கலை!

நன்றி குங்குமம் தோழி

சரியான வார்த்தை ‘ஆம்! லெஹெங்கா அணிவது ஒரு கலை'… ஆரம்பமே உற்சாகமாக பேசினார் காஸ்டியூம் டிசைனர் விக்கி கபூர்.

‘‘தை, மாசி வந்துடுச்சு கல்யாண சீசனும் கூடவே வந்திடும். காலம் காலமாக தென்னிந்திய பட்டுப் புடவைகளுக்கு வடக்குப் பெண்களும், வட இந்திய லெஹெங்காக்களுக்கு தென்னிந்தியப் பெண்களும் ஆசைப்படுறது புதுசு இல்லை. ஆனால் எதை எப்படி அணியணுமோ அதை அப்படி அணியணும். எப்படி முகூர்த்தப் பட்டுப்புடவைகள்ல பெய்ஜ், பீச், பேஸ்டல் இப்படி அணியறது அவ்வளவு பிரைட் லுக் கொடுக்காதோ அதே போல் லெஹெங்காவிலும் சில ரூல்கள் இருக்கத்தான் செய்யும். நம்மூர் பெண்கள் பெரும்பாலும் கோதுமை கலர் அல்லது டஸ்கி, டார்க் பியூட்டிகள்.

அந்தப்  பெண்கள் லெஹெங்கா அணியும் போது ரொம்பவே கவனமா இருக்கணும். முக்கியமா நிறங்களை தேர்வு செய்யும் போது, அவசியமா கவனிக்கணும். கிளிப்பச்சை, அடர்ந்த சிவப்பு, மெரூன் சிவப்பு பயன்படுத்தலாம். சிக்னல் லைட் சிவப்புக்கு நிச்சயம் நோ. அதே போல் பிரைட் பஞ்சுமிட்டாய் நிற பிங்க் மாதிரியான ரேடியம், லேசர் லைட் நிறங்கள் அறவே கூடாது. கரும்பச்சையிலேயே கொஞ்சம் மங்கலான பச்சை, பிரவுன் நிறம் இவைகளையும் தவிர்க்கறது நல்லது’’ என்னும் விக்கி கபூர் லெஹெங்கா ஸ்டைலிங் குறித்து மேலும் விவரித்தார்.

‘‘பொதுவாகவே தென்னிந்தியப் பெண்களுக்கு இடைப்பகுதி கொஞ்சம் நீளம் குறைவுதான். அதேபோல் பின்பக்கமும் கொஞ்சம் பருமனா இருக்கும். அடிப்படையிலேயே புடவைக்கும், தாவணிக்குமான உடல்வாகு தென்னிந்தியப் பெண்களுக்கு உண்டு. மார்பு, இடைப்பகுதிகள் கொஞ்சம் பப்ளியாக இருக்கும். லெஹெங்காவை அந்த அழகை ஹைலைட் செய்யற மாதிரி டிசைன் செய்து கிட்டா அழகோ அழகுதான். உதாரணத்துக்கு லெஹெங்கா போடணும் ஆனாலும் இடுப்பை அவ்வளவா காட்ட முடியாது அல்லது காட்டினா வீட்டிலே திட்டுவாங்கற மாதிரியான பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு லெஹெங்காவையே தாவணி ஸ்டைலில் போட்டுக்கொள்வது.

அடுத்த தீர்வு இடைப்பகுதியில் கொஞ்சம் லேஸ் அல்லது வலை மாதிரியான துணி கொடுத்து மேலும் அழகு சேர்க்கலாம். சராரா ஸ்டைலில் லெஹெங்கா அல்லது கிராண்ட் ஓவர் கோட் போலவும் தைச்சிக்கலாம். இதில் பிரச்னை என்னன்னா தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்களை பொருத்தமட்டில் லெஹெங்கா கட்டிக்கொண்டு எந்த ஃபங்ஷனுக்கும் போறதில்லை. அதனாலேயே வீட்டில் இருக்குற பெரியவங்க பெரும்பாலும் லெஹெங்கா வேண்டாம்னு சொல்வாங்க.

ஒருதடவ பயன்படுத்த எதுக்கு அவ்வளவு செலவு என பல்லைக் கடிப்பாங்க. அதிலும் முகூர்த்தங்களுக்கு குறைஞ்சது ரூ. 20,000 கொடுத்தால் கூட நல்ல பட்டுப் புடவை கிடைச்சிடும். ஆனால் லெஹெங்காக்களுக்கு ரூ.30,000வது செலவழிச்சாதான் கிராண்ட் லுக் கிடைக்கும்.   லெஹெங்காக்களுக்கு பேடட் பிளவுஸ் பயன்பாடுதான் நல்ல லுக் கொடுக்கும். தாவணி மாதிரி லெஹெங்காக்களில் மார்புப் பகுதியை முழுமையா கவர் செய்ய மாட்டோம். அதனாலேயே பேடட் பிளவுஸ் தான் லெஹெங்காக்களுக்கு நல்லது. நகைகள் தேர்வும் ஃபேன்ஸியாக இருக்கணும்’’ என்று விக்கி கபூர் முடிக்க மேக்கப் குறித்து பேசத் துவங்கினார் ஜெயந்தி.

‘‘டிரெடிஷனல் புடவைக்கு உரிய மேக்கப் வேறு, லெஹெங்காவிற்கு உரிய மேக்கப் வேறு. தென்னிந்திய புடவைன்னாலே பேபி பிங்க் அல்லது ஸ்கின் டோன் லிப்ஸ்டிக்குகளுடனான லைட் மேக்கப்தான் போடணும். நயன்தாரா போடுவாரே அப்படியான மேக்கப். லெஹெங்கா என்றால் கொஞ்சம் இண்டோ - வெஸ்டர்ன் டார்க் நிற லிப்ஸ்டிக், மினுமினுக்கும் ஐ-ஷேடோஸ், பிளஷ், குளோ இப்படி எல்லாமே பளிச்சென்று மேக்கப் செய்யலாம்.
இதையெல்லாம் சொன்னா மேக்கப் போடாத மாதிரி போடுங்கனு நமக்கு செக் வைப்பாங்க.

அணிகலன்களை பொறுத்தவரை, லெஹெங்காக்களுக்கு சிங்கிள் பீஸ் கிராண்ட் நெக்லெஸ் கூட கிராண்ட் தோடு போதும். அத்தையோ, சித்தியோ வந்து கல்யாணப் பொண்ணு என்ன நகையே இல்லாம நிக்கிறான்னு முகூர்த்தத்துக்கு பயன்படுத்தின நகைகள்ல ஒண்ணு ரெண்டை சேர்க்கச் சொல்லி அடம் பிடிப்பாங்க. இதிலே சிலர் தங்க நகையைப் போட்டுக்கச் சொல்வாங்க. சில ஊர்களில் தாய்மாமன் வளையல் என்கிற முறை வேற இருக்கு. ஒரே பொன் வளையல்தான் அதை திருமணமாகி மூன்று நாட்கள் வரையிலும் கழட்டவே கூடாது.

லெஹெங்காவுக்கு வளையல் தேடும் படலம் போயி போடப்போகும் வளையலுக்கு மேட்சிங்கான லெஹெங்கா தேர்வு செய்ய ஆரம்பிப்போம். லெஹெங்காவிற்கென அத்தனை டிரெண்டையும் பயன்படுத்த எந்த கட்டுப்பாடுகளும் வராதுன்னா ஜாலியா பயன்படுத்தலாம். இல்லைன்னா யோசிக்காம நம்மூர் ஸ்டைல் பட்டுப் புடவைக்கே போயிடுங்க... அதுதான் நல்லது’’ என்றார் ஜெயந்தி.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: கார்த்திக் சுப்ரமணி