Mar 22, 2023
ஆரோக்கிய வாழ்வு

முதுமையை வெல்ல!

நன்றி குங்குமம் தோழி

*புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கு மிகவும் தேவையான சவால் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

*இளைஞர்களோடு பழகுங்கள், 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு  மீளக் கிடைக்கும்.

*எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள்  புதிய  மனிதர்களிடம்  பேசிப் பழகுங்கள்.

*எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள   கடினமான  இலக்கை  முன்னிலைப்படுத்தி  அதனை  நோக்கி  நிதானமாக , ஆனால்  உறுதியோடு  செல்லுங்கள்.

*புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கு மிகவும் தேவையான சவால் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

*அழகான உடைகளை  ரசனையுடன்  தேர்வு  செய்து,  மிடுக்காக  உடுத்துங்கள். 50 வயதில் நரையும்,  திரையும்  வழுக்கையும்  அழகுதான்.

*உலகின்  மிகப்பெரிய  சாதனைகளைச் செய்தவர்கள்  பலரும் 50+காரர்கள்தான். அவ்வப்போது உங்களுடன் ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் புதிய இடங்களுக்குப் புதிய  அனுபவங்களைத் தேடிப் பயணம் செய்யுங்கள்.

*வேறுபட்ட  மனிதரோடு  உரையாடுங்க.. திசையறியா  ஆர்வமூட்டும்  பயணங்கள்  நம்மை பள்ளிப்  பருவத்திற்கு  இட்டுச் சென்று  துள்ளிக்  குதிக்க  வைக்கும்.

*புதிய நவீன  சிந்தனையாளரா்களின்  புத்தகங்களைத் தேடி  நிறைய  படியுங்கள்.  உங்கள்  மூளைக்குத்  தீனி போட நிறைய, நிறைய  புதிய  விஷயங்களைத்  தேடிப் படியுங்கள்.

*நகைச்சுவைக் கதைகளை,  நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக்  காணுங்கள். சிரித்துப் பேசுங்கள்,  பிறர் சிரிக்கப் பேசுங்கள்,  உங்களைச் சுற்றி  ஒரு ஒளி வட்டம்  நிலையாகும்.

* விரோதிகளை  விலக்குங்கள்,  பெருமைக்காரர்களை,  பொறாமைக்காரர்களைக் கால விரயம்  கருதி  ஒதுக்குங்கள்.  மன ஆரோக்கியம்  உடல் ஆரோக்கியம்  பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சிறு சிறு  ஆசனங்கள்  தவறாது  செய்யுங்கள்.வாரம்  ஒரு  முறையாவது  உங்கள்  இணையுடன் சிரித்து,  மகிழ்ந்து  உண்டு  மகிழுங்கள்.

* பொதுச்சேவையில்  நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை  காத்தலில்  ஆர்வம்  கொள்ளுங்கள்.

* உங்களின்  இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்அனைவரையும் பாராட்டுங்கள். அவர்களிடம்  நிரந்தரமாக, தொடர்பு வைத்திருங்கள்.

*வாழ்வின் உன்னதம்  என்பது ஏற்கெனவே  உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம்  வந்துவிட்டது என்று நம்புங்கள்.

*உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை  எதுவாக  இருந்தாலும்  அவைகளிடம் இருந்து  விலகி  ஓடிவிடுங்கள்.

*யாரிடமும்  அதிகளவில்  கோபப்படாதீர்கள்.  மகன், மகள்  மற்றும்   குறிப்பாக  மருமகளைத் திட்டாதீர்கள். முதலில்  நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர்  அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப்படுபவர்களுக்கு, உங்களால்  இயன்ற   வகையில்  உதவுங்கள்.  அவர்கள்  நன்றியில் உங்களை  நீங்களே  புதிதாக  ரசித்து  மகிழ்வீர்கள்.

*மற்றவர்களுடைய  வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை  ஒப்பிட்டு  உங்களை  தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

*தினமும்  10லிருந்து 30 நிமிடங்கள்  கட்டாயம்  நடைப்பயிற்சி  செய்யுங்கள்.  அவ்வாறு  செல்லும்போது  சிரித்த  முகமாகச் செல்லுங்கள்.

*எப்போதுமே முதல் பகுதியைவிட  இரண்டாம்  பகுதிதான்  நாம் வாழ்ந்த  வாழ்வின் அர்த்தங்களை  நிர்ணயிப்பதில்  பெரும்பங்கு  வகிக்கிறது.

*நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து,  சுத்தமான  ஆடையை  அணிந்துகொள்ளுங்கள்.தினசரி  மற்றவருக்குப்  பயனளிக்கும்  வகையில் ஒரு சிறிய  செயலையாவது  செய்யுங்கள்.

*மறந்தும்  சாய்வு  நாற்காலிவாசிகள்  பக்கம் ஒதுங்கி  விடாதீர்கள், உங்களை அவர்கள்  பக்கத்திலேயே  படுக்க வைத்துவிடுவார்கள்.பேகக் குழந்சைகளுடன் கொஞ்சி விளையாடி, நேரத்தைச் செலவிடுங்கள். அது உங்களை உற்சாகமாக  வைக்கும்.

*தினமும்  ஒரு 10 நிமிடமாவது  எந்த சிந்தனைகளும்  இல்லாமல்  அமைதியாக  கண்ணை மூடி  அமருங்கள். எப்போதும்  இரக்கம், உற்சாகம், ஊக்கம் , கருணை ஆகிய குணங்கள் மனதில்  நிறைந்திருக்குமாறு  பார்த்துக் கொள்ளுங்கள்.

*மூளையும், மனசும், உடலும் சரியாக  இயங்க  ஏற்பாடு செய்துவிட்ட  பிறகு  ஆரோக்கியத்தில்  என்ன பிரச்னை  வந்துவிடப் போகிறது. மேற்சொன்ன விஷயங்களைச் சரியாகச் செய்தால் 50+ யிலும் ஆரோக்கியம்  பற்றிக் கவலைப்படத்  தேவையே  இல்லை.. முதுமையை  வென்று சாதிக்கலாம்.

தொகுப்பு : பொ.பாலாஜிகணேஷ்