May 09, 2021
இந்தியா

திருநங்கைகளுக்கு நல்வாழ்வு வாரியம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் திருநங்கைகளுக்கு என நல்வாழ்வு வாரியம் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில்,‘‘நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளின் பிரச்சனையை தீர்க்கும் விதமாக அவர்களுக்கு என நல்வாழ்வு வாரியத்தை அனைத்து மாநிலத்திலும் அமைக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின்,‘‘திருநங்கைகள் சொந்த வீட்டில் கூட அங்கீகாரம் இல்லாமம் தான் வாழ்ந்து வருகின்றனர். தனிப்பட்ட வருமானமும் கிடையாது. சமுதாயமும் அவர்களை அங்கீகரிக்க மறுக்கிறது.

அதனால் அவர்கள் பொருளாதாரம் என்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். அதனால் அனைத்து மாநிலத்திலும் திருநங்கைகளுக்கு என தனியாக நல்வாழ்வு வாரியம் அமைக்க வேண்டும். இதில் முன்னதாக தமிழகம், மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் திருநங்கைகளுக்கு என தனியாக நல்வாழ்வு வாரியம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்கு என நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை’’ என குறிப்பிட்டார்.  இதைக் கேட்ட தலைமை நீதிபதி இந்த விவகாரம் குறித்து, மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.