May 09, 2021
இந்தியா

தேர்தல் ஆணையம் அதிரடி மம்தா பிரசாரத்துக்கு 24 மணி நேரம் தடை

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய 24 மணி நேரத்துக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில், 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிவடைந்துள்ளன. இங்கு, ஆட்சியை தக்க வைத்து கொள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்க பாஜ.வுக்கும் இடையே கடுமையான இருமுனை போட்டி நிலவுகிறது. இதனால் முதல்வர் மம்தா பாஜ.வையும், பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா மம்தாவையும் கடுமையாக விமர்சித்து வருவதால், ஒவ்வொரு கட்ட தேர்தல் பிரசாரத்திலும் அனல் பறக்கிறது.

இந்நிலையில், கடந்த 7, 8ம் தேதிகளில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது விதிமுறைகளை மீறி முதல்வர் மம்தா, மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களை போராட தூண்டியதாகவும், முஸ்லிம் வாக்குகள் குறித்து விமர்சித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி முதல்வர் மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன்பு, கடந்த வாரத்தில், முதல்வர் மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் 2 முறை நோட்டீஸ் அனுப்பியது. மம்தா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை அவர் பிரசாரம் செய்யக் கூடாது என்று 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், ‘‘மம்தாவின் பேச்சுகள் மாநிலம் முழுவதும் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதற்கு ஆணையம் கண்டனம் தெரிவிக்கிறது. தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற பகிரங்கமான பேசுவதை மம்தா தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தலையொட்டி, மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாக திரிணாமுல் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையே, 4ம் கட்ட தேர்தலின் போது கூச் பெகாரில் உள்ள சிதல்குச்சியில் மத்திய பாதுகாப்பு படையினருடன் கிராமமக்கள் திடீர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலியாயினர்.

* தர்ணாவில் ஈடுபடுவேன்
தேர்தல் ஆணையத்தின் தடை குறித்து மம்தா தனது டிவிட்டரில், ‘‘ஜனநாயகத்திற்கு எதிரான, அரசியலமைப்புக்கு எதிரான தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்துவேன். கொல்கத்தாவின் காந்தி மூர்த்தி சிலை முன்பாக நாளை (இன்று) பகல் 12 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்’’ என அறிவித்துள்ளார்.