May 09, 2021
இந்தியா

கோடைவெயில் தாக்கம் எதிரொலி: மண்பானைகள் விற்பனை அமோகம்

மாலூர்: கோடை வெயில் தாக்கம் காரணமாக குளுமையான தண்ணீரை குடிக்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் மண்பானை விற்பனைகள் அதிகரித்துள்ளது. கோலார் மாவட்டத்தின் மாலூர் தாலுகா தமிழகத்தை ஒட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்ன கோடை வெயில் இருக்குமோ ? அதே வெயில் தாக்கம் மாலூர் தாலுகாவிலும் உள்ளது. காலை 7 மணிக்கு பகல் 12 மணிக்கு இருக்கும் வெயில் போல் உள்ளது. மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமல் குளிர்பானங்கள் குடித்து வருகிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் என்னதான் பைபர் பிரிட்ஜ், ஏர்கூலர்கள் இருந்தாலும் பழங்காலத்தில் மக்கள் மண்பாண்டங்களில் தண்ணீர் சேமித்து வைத்து குடித்து தாகம் தணித்து வந்ததுபோல் தற்போது மக்கள் தொழில்நுட்பத்தை நாடாமல் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய மண்பானைகளை தேடி செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் மாலூர் தாலுகாவில் சில  நாட்களாக மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

மண்பானைகளில் நிரப்பி வைக்கும் தண்ணீர் சில மணி நேரத்தில் குளிர்ச்சியாகி விடும். பிரிட்ஜிகளில் வைக்கும் தண்ணீரை விட குளிர்ச்சியாக இருக்கும். மக்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டுள்ள குயவர்கள் நகர பகுதியில் பானைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் பானை செய்யும் இடத்திற்கே சென்று பானைகள் வாங்கி செல்கிறார்கள்.