Jul 29, 2021
இந்தியா

இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து பொருட்களின் விற்பனை கடந்த ஓராண்டில் மட்டும் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்து பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

ரெம்டெசிவிர், ஃபவிபிரவிர், அஷித்ரோமைசின் உள்ளிட்ட மருந்து பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை மருந்து மற்றும் வேதிப்பொருட்களுக்கான அகில இந்திய அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 2020 ஜூன் மாதம் முதல் 2021 மே மாதம் வரையிலான காலத்தில் ஃபவிபிரவிர் மருந்து 1,200 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை ஆகியுள்ளது. இதேகாலத்தில் ரெம்டெசிவிர் மருந்து 883 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. அஷித்ரோமைசின் கடந்த ஆண்டை விட 38 விழுக்காடு அதிகமாக அதாவது 992 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை ஆகியுள்ளது. டாக்ஸிசைக்ளின் மருந்து 85 கோடி ரூபாய் அதாவது முந்தைய ஆண்டை விட மும்மடங்கு விற்பனை ஆகியுள்ளது. ஐவர்மெக்டின் மருந்து விற்பனை 10 மடங்கு அதிகரித்து 237 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் விட்டமின் உள்ளிட்ட மருந்து பொருட்கள் 14,587 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 விழுக்காடு அதிகமாகும். குறிப்பாக வைட்டமின் டி மருந்து பொருட்கள் மட்டும் 817 கோடி ரூபாய் அளவிற்கு அதாவது 40 % அளவு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. ஷிங்க் மருந்து பொருட்கள் சுமார் மும்மடங்கு அதிகமாக அதாவது 183 கோடி ரூபாய்க்கு கடந்த ஓராண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.