Sep 19, 2021
இந்தியா

மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய ஆசிரியர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படங்களையும், வீடியோக்களையும் அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் செல்போன் எண், சம்பந்தப்பட்ட ஆன்லைன் வகுப்பிற்காக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு வழங்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் அவர் அந்த மாணவிக்கு ஆபாச படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் போலீசார் கூறுகையில், ‘ஃபதேபூரின் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு, ஆபாச படங்களை அவரது பள்ளி ஆசிரியர் அனுப்பி உள்ளார்.

அதனால் ஆவேசமடைந்த மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, அங்கிருந்த ஆசிரியர் சுரேஷ்குமாரை பிடித்து சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு தாக்கப்பட்ட நிலையில் இருந்த ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.