Jan 30, 2023
இந்தியா

குஜராத் முதல்வராக மீண்டும் பூபேந்திர பட்டேல்: டிச.12ல் பதவி ஏற்பு: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்கிறார்கள்

குஜராத் தேர்தலில் பா.ஜ இமாலய வெற்றி பெற்றுள்ளது. பூபேந்திரபட்டேல் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். டிச.12ம் தேதி பதவி ஏற்பு விழா நடக்கிறது. இதுபற்றி மாநில பா.ஜ தலைவர் சி.ஆர். பாட்டில் கூறியதாவது: குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக பா.ஜ வரலாற்று சாதனை வெற்றி படைத்துள்ளது. முதல்வர் பூபேந்திரபட்டேல் மீண்டும் டிச.12ம் தேதி நடக்கும் விழாவில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கிறார்கள். குஜராத் மக்களை மோசமான அரசியலால் இழிவுபடுத்த ஆம்ஆத்மி முயற்சி செய்து.  

குஜராத் மக்களின் பெருமையை பற்றி ஆம்ஆத்மி ஒருபோதும் நினைக்கவில்லை. அதனால் தான் குஜராத் மக்களின் ஆன்மாவுடன் அவர்களால் ஒருபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. குஜராத்திற்கு எதிரான சக்திகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில்  மீண்டும் பா.ஜவுக்கு வாக்களிப்பது பற்றி மக்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டனர். இது மத்தியிலும், குஜராத்திலும் உள்ள பாஜ   அரசின் நல்லாட்சிக்கு  கிடைத்த வெற்றி. காங்கிரஸ் கட்சியினர் ஏன் மக்கள் ஆதரவை இழக்கிறார்கள் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். சில கட்சிகள் ஒருபோதும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து குஜராத் மக்களை முட்டாளாக்க முயன்றன. ஆனால் அவர்களுக்கு தகுந்த பதில் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

* மோடிக்குத்தான் ஓட்டு பூபேந்திர படேல் பேச்சு
குஜராத்தில் பா.ஜவின் அமோக வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம். சட்டசபை தேர்தலில் தேச விரோதிகளை மக்கள் நிராகரித்துள்ளனர் என்று முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: குஜராத் மக்கள் மீண்டும் பிரதமர் மோடி, பாஜ தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். குஜராத்தில் உள்ள மக்கள் தொடர்ந்து பாஜவை  தேர்ந்தெடுப்பதால், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் நடக்க வேண்டும். குஜராத் மக்கள் இந்தத் தேர்தலில் தேசவிரோத சக்திகளை நிராகரித்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கான பாஜவின் சாதனைக்கு வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* மோடி புகழால் வரலாற்று வெற்றி
ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடியின் தலைமை மீதும், அவரது புகழ் மற்றும் நம்பகத்தன்மையின்  மீதும் பொதுமக்களின் நம்பிக்கைதான் இந்த வெற்றியின் மிகப்பெரிய பெருமை.  அவருக்கு வாழ்த்துகள். பொதுமக்களுக்கு நன்றி. ஜேபி நட்டா, அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், குஜராத் மாநில தலைவர் சிஆர் பாட்டீல் ஆகியோரின் அயராத உழைப்பால், எல்லா சாதனைகளையும் முறியடித்து பாஜக புதிய வரலாற்றைப் படைத்துள்ளது’ என்று தெரிவித்து உள்ளார்.

* நாட்டின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை
தேசியவாத காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சரத்பவர் பேசுகையில், ‘ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் நலனுக்காக முழு அதிகார இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு, திட்டங்கள் அங்கு மாற்றப்பட்டதால் குஜராத் தீர்ப்பு எதிர்பார்த்த நிலையில் உள்ளது. குஜராத் முடிவுகள் நாட்டின் மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை. டெல்லி உள்ளாட்சி தேர்தல் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் பாஜக தோற்கடிக்கப்பட்டதை நிரூபிக்கின்றன’ என்று தெரிவித்தார்.

* காங்கிரஸ் வீழ்ச்சியை பற்றி கவலைபடுங்க...
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் தொகுதியில் ஆற்றின் உடைப்பால் ஏற்பட்ட சேதம் குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். இதற்கு, ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதிலில், ‘ஆற்றின் உடைப்பால் ஏற்பட்ட சேதத்தைப் பற்றி கவலைப்படுவதை விட, காங்கிரஸின் வீழ்ச்சியைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

* 10 ஆண்டில் தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற ஆம்ஆத்மி
குஜராத் தேர்தலில் 13 சதவீத வாக்குகள் பெற்றதன் மூலம் கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் தேசிய கட்சி அந்தஸ்தை ஆம்ஆத்மி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆம்ஆத்மி கட்சி 2012ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தொடங்கப்பட்டது.  2013ல் முதல் தேர்தலை எதிர்கொண்டு டெல்லியில் ஆட்சி அமைத்தது. அதை தொடா்ந்து 2015, 2020ம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்றது. 2017ல் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 20 இடங்களை கைப்பற்றிய ஆம்ஆத்மி 2022 சட்டசபை தேர்தலில் 92 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது.

கோவாவிலும் ஆம்ஆத்மி கட்சிக்கு 2 சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது குஜராத்திலும் 5 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் தேசிய கட்சி அந்தஸ்தை ஆம்ஆத்மி கட்சி பெற்றுள்ளது. ஏற்கனவே 10 மாநிலங்களவை எம்பிக்கள், நாடு முழுவதும் 157 எம்எல்ஏக்கள் ஆம்ஆத்மி கட்சிக்கு உள்ளனர். இதுபற்றி டெல்லி துணை முதல்வர் சிசோடியா கூறுகையில்,’ குஜராத் மக்கள் அளித்த வாக்குகளால் ஆம்ஆத்மி கட்சி தேசிய அந்தஸ்து பெற்றுள்ளது. கல்வி, சுகாதாரம் நாட்டில் முதன்முறையாக முத்திரை பதித்துள்ளது. இதற்காக ஒட்டுமொத்த நாட்டிற்கும் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி மாநிலங்களவை  எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில்,’ எங்கள் கட்சி வெறும் 10 ஆண்டுகளில் தேசிய கட்சி அந்தஸ்தை  பெற்றுள்ளது. இதுவே கட்சி வளர்ச்சியின் வேகம். குஜராத்தில் சுமார் 35 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். அனைத்து தலைவர்களும் கடுமையாக உழைத்து குஜராத்தில் உள்ள கிராமப்புறங்களை பார்வையிட்டனர். குஜராத் பாஜவின் சொந்த நிலமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஆம் ஆத்மி 35 லட்சம் வாக்குகளைப் பெற முடிந்தது. அதற்காக குஜராத் மக்களுக்கு நன்றி. இந்த அங்கீகாரத்தை பெற தலைவர்கள் கடுமையாக உழைத்தனர். இருப்பினும் இந்த  அங்கீகாரத்தை பெற்றுத்தந்த குஜராத் மக்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்’ என்று கூறியுள்ளார்.

* ஆம் ஆத்மி-பாஜ மறைமுக புரிதல்
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சியும் மற்ற கட்சிகளும் ஒன்றிணைந்து, கூட்டணி அமைத்திருந்தால் அல்லது புரிந்துணர்வை எட்டியிருந்தால், அது பாஜகவுக்கு கடுமையான போராக இருந்திருக்கும். குஜராத் முடிவுகள் எதிர்பார்த்தபடியே உள்ளன. ஆம் ஆத்மி கட்சி டெல்லியை எடுத்து கொண்டு, குஜராத்தை விட்டுச் சென்றதாக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு மறைமுகமான புரிதல் இருந்தது’ என்றார்.  

* ஒன்றிணைந்தது யாதவ் குடும்பம்
உத்தரப்பிரதே மாநிலம், மெயின்புரி நாடாளுமன்ற தொகுதியாக எம்பியாக இருந்த சமாஜ்வாடி கட்சி நிறுவன தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைந்ததால், அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் முலாயம் சிங் யாதவ்வின் மருமகளும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் பாஜ சார்பில் ரகுராஜ் சிங் சாக்யா என்பவர் போட்டியிட்டார். இந்த தொகுதி சமாஜ்வாடியின் கோட்டை. இதனால், டிம்பிள் யாதவ் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ்வின் சித்தப்பாவும், பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான ஷிவ்பால் சிங் யாதவ் கூறுகையில், ‘ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றுபட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டதால், நாங்கள் ஒரு பெரிய வெற்றியை நோக்கி செல்கிறோம். இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், குடும்பம் ஒற்றுமையாகவும், ஒன்றாகவும் போட்டியிடும்’ என்று தெரிவித்தார். ஷிவ்பாலின் இந்த பேச்சை தொடர்ந்து, அகிலேஷ் மற்றும் ஷிவ்பால ஆகியோர், எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைபாயில் ஒன்றாக அமர்ந்து உரையாடினர். அப்போது, அகிலேஷ் யாதவ் தனது சித்தப்பாவுக்கு கட்சியின் கொடியை வழங்கினார். பின்னர், ஷிவ்பால் சிங் யாதவின் காரில் கட்சித் தொண்டர்களால் இரு கட்சிகளும்  ஒன்றிணைவதைப் பிரதிபலிக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சி கொடியும் பொருத்தப்பட்டது.

* வெற்று வாக்குறுதிகள் இலவசங்கள் நிராகரிப்பு
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த வரலாற்று வெற்றிக்காக குஜராத் மக்களுக்கு சல்யூட். இது, மோடியின் வளர்ச்சி மாடலில் பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில், மோடி தலைமையில், குஜராத்தில் வளர்ச்சியின் அனைத்து சாதனைகளையும் பாஜக முறியடித்தது. இன்று குஜராத் மக்கள் பாஜகவை ஆசீர்வதித்து வெற்றியின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளனர். பெண்கள், இளைஞர்கள் அல்லது விவசாயிகள் என அனைத்து பிரிவினரும் முழு மனதுடன் பாஜகவுடன் இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது. வெற்று வாக்குறுதிகள், இலவசங்கள் போன்ற அரசியல் செய்பவர்களை குஜராத் நிராகரித்தது’ என்று தெரிவித்து உள்ளார்.