Mar 30, 2023
இந்தியா

அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

மும்பை: பங்குச்சந்தை முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில், அதானி குழுமம் ரூ.20,000 கோடி எப்பிஓவை திரும்பப் பெற்றதன் காரணமாக, இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். அதானி குழுமம் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடி செய்து பல்லாயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதற்கிடையே, ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்ட அதானி குழுமம் தனது கூடுதல் பங்குகளை (எப்பிஓ) பொது வெளியில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த பங்குகளை முழுமையாக வாங்கி முதலீடு செய்ய பல அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முன்வந்த போதிலும், எப்பிஓவை திரும்பப் பெறுவதாக அதானி அறிவித்தார். இது பங்குச்சந்தையில் இந்திய நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை பிரதிபலிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக மும்பையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘இதற்கு முன் இந்திய பங்குச்சந்தையில் எந்த எப்பிஓவும் திரும்பப் பெறப்பட்டதில்லையா? அதனால் எத்தனை முறை இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு குறைந்திருக்கிறது?

எனவே, அதானியின் எப்பிஓ திரும்பப் பெறப்பட்டதால், இந்திய பொருளாதாரத்தின் செயல்பாட்டிற்கோ, அதன் மதிப்புக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பங்குச்சந்தையை சிறந்த நிலையில் வைத்திருக்கும் அதிகாரம் செபியிடம் உள்ளது. அதற்கான வேலையை அவர்கள் செய்கிறார்கள். வங்கிகள் நிலை குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்ஐசியும் தனது நிலையை தெளிவுபடுத்தி உள்ளது. அரசின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கட்டுப்பாட்டாளர்கள் அவரவர் வேலையை செய்ய சுதந்திரமாக விடப்பட்டுள்ளனர்’’ என்றார்.

* பழைய வருமான வரி முறை நீக்கம்?
வருமான வரி செலுத்துவோருக்கென பழைய, புதிய என 2 விதமான வரி முறைகள் நடைமுறையில் உள்ளது. இதில் புதிய வருமான வரி நடைமுறையில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை என சமீபத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ‘‘பழைய வருமான வரி முறையை நீக்குவதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தற்போதைக்கு எளிதான வரி விதிமுறையுடன், குறைந்த விகிதங்களுடன் புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.

* அதானி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: நிதிஷ்
அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தினார். இதுபற்றி அவர் கூறும்போது,‘அதானி வணிக மாதிரி கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இப்போது விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், இதை கவனிக்க வேண்டும்’ என்றார்.

*விளக்கம் அளித்தது செபி
அதானி குழும பங்குகள் கடந்த 6 நாட்களில் ரூ.8.5 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், செபி தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் அறிக்கையில், ‘பங்குச்சந்தையின் ஒழுங்கை உறுதிப்படுத்த செபி உறுதிப்பூண்டுள்ளது. பங்குச்சந்தை தடையின்றி வெளிப்படையாக, திறமையான முறையில் செயல்பட தேவையான கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இதில், தனிப்பட்ட பங்குகளில் ஏதேனும் அதிக ஏற்ற இறக்கங்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய தேவையான அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் தாமாகவே மேற்கொள்ளப்படும். தற்போதைய கொள்கையின்படி, ஏதேனும் நிறுவனங்கள் மீது புகார்கள் வரும் பட்சத்தில், அதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது எதிர்காலத்திலும் தொடரும்’ என கூறப்பட்டுள்ளது. ஆனால், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பது தொடர்பாக செபி அறிக்கையில் விளக்கம் தரப்படவில்லை.