Jan 29, 2022
கோலிவுட் செய்திகள்

எதற்கும் துணிந்தவனுடன் மல்லுக்கட்ட தயாராகும் யானை..!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு போட்டியாக அருண் விஜய்யின் ‘யானை’ படம் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக வினய் நடிக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு போட்டியாக அருண் விஜய்யின் ‘யானை’ படம் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யானை படத்தை ஹரி இயக்கி உள்ளார். இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.