Aug 14, 2022
இயற்கை மருத்துவம்

தேங்காய் இயற்கையின் ஆசீர்வாதம்!

நன்றி குங்குமம் டாக்டர்

தேங்காய் இயற்கையின் ஆசீர்வாதமாகவும், செழுமையின் சின்னமாகவும், விழாக் காலங்களில் ஒரு மங்களகரமான பொருளாகவும், கைவினைப் பொருளாகவும், சமையலுக்கு இன்றியமையாதப் பொருளாகவும் கொண்டாடப்படுகிறது.உலகெங்கிலும் உள்ள இந்துக் கோயில்களில் தெய்வங்களுக்கு தேங்காய் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பல புனித நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் தேங்காய் உடைத்துத் தொடங்கப்படுகின்றன.

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில், மீனவர்கள் கடலுக்கு செல்லும் முன்  அதிக அளவில் மீன் கிடைக்க வேண்டும்  என எதிர்பார்த்து, கடலுக்குத் தேங்காயை   படைக்கிறார்கள்.தேங்காய் ‘கல்பவ்ரிக்ஷா’  என்றும் கூறப்படுகிறது. ‘அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்ய  கூடிய  மரம்’ என்று பொருள்படும்.தேங்காய், நாம்  தினமும்  உபயோகப்படுத்தும் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. பசிபிக் மற்றும் ஆசிய பிராந்தியங்களில் பல பாரம்பரிய உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.  

உலகம் முழுவதும் மற்றும் உலகின் மொத்த தேங்காய் உற்பத்தியில் 90% இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்  மற்றும் தாய்லாந்து  ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் ஆசியா முதன்மையான இடத்தில் உள்ளது. தேங்காய் ஐந்து வகையான உணவுப் பொருட்களை வழங்குகிறது.தேங்காய் தண்ணீர், தேங்காய் பால், சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொப்பரை ஆகும். தேங்காயின் கொப்பரை, தேங்காய் எண்ணெய், தேங்காய் பால்,  இளநீர்  ஆகியவற்றை நமது சமையலில் நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம்.

தேங்காய்  நமது ஆயுர்வேத மருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் கூட தனி இடம் வகிக்கிறது.

தேங்காய் கொப்பரையின் சத்து, அது வளரும் இடம், காயின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு மாறுபடும். தேங்காய் கொப்பரையில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன, அதே சமயத்தில்  கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம்  மிதமான அளவில் உள்ளது.கொப்பரையின் கொழுப்பு சத்தில்   89% சாச்சுரேட்டட் கொழுப்பாகும். இந்த கொழுப்புகளில் பெரும்பாலானவை  மீடியம் செயின்  ட்ரைகிளிசரைடுகள் (MCTகள்), அவை  சிறுகுடலில் எளிதாக  உறிஞ்சப்பட்டு, நமது உடலுக்கு மிக சுலபமாக ஆற்றலைத் தருகிறது. தேங்காய்  கொப்பரை கேக், மிட்டாய்கள், கறி மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

*தேங்காய்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.  குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கிறது.  கேண்டிடா எனப்படும் தீங்கு விளைவிக்கும் காளானை எதிர்ப்பு சக்தி தந்து, நோய் தொற்றை தடுக்கிறது.

*தேங்காயில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே உள்ளிட்ட கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்  உற்பத்தி  செய்வதற்கும், நமது  குடல் உறிஞ்சுவதற்கும்  உதவுகிறது.

*தேங்காயில் உள்ள மாங்கனீசு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,  நோய் எதிர்ப்பு சக்தியை  மேம்படுத்துகிறது. Tumour கட்டிகளை வளரவிடாமல் சிதைக்கிறது.

*தேங்காயில் உள்ள MCTகள்  மூளை ஆரோக்கியத்துக்கு  பெரிதும் உதவுகிறது. ஞாபக மறதியை சரி செய்யவும்  அல்சைமர் நோய்க்கு  சிகிச்சையாகவும் திகழ்கிறது.

*தேங்காய் தண்ணீர்,  தேங்காய்  எண்ணெய்  மற்றும்   தேங்காய்ப் பால் மூன்றுக்கும்   வெவ்வேறு  குணாதிசியங்கள் காணப்படுகிறது. தேங்காய்ப் பால், கொப்பரையில் இருந்து எடுக்கப்படுவதால் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளது. தேங்காய்ப் பால் பல்வேறு இனிப்பு வகைகளை தயாரிக்க பயன்படுகிறது.

*இளநீர் குறைந்த கலோரியை கொண்ட  பானமாகும். 94 % நீர்ச்சத்து உடையது. சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை கொண்டு உள்ளது. அதிக வெப்பத்தில்  உடல் நீரை இழக்கும் போது,  நீரிழப்பை சரி செய்ய உதவுகிறது

*இளநீரில் உள்ள நீர் மிகவும் தூய்மையானது. கிட்டத்தட்ட நமது மனித ரத்தத்தின் அமைப்பை கொண்டது. அதனால் இரண்டாம் உலகப் போரின் போது    காயமடைந்த வீரர்களுக்கு ரத்த பிளாஸ்மா குறைந்த   போது உடலில் இளநீர் செலுத்தப்பட்டதாகத் தகவல் உண்டு.

*பண்டைய காலங்களிலிருந்து , தென்னிந்தியாவிலும் தென்கிழக்கு நாடுகளிலும்  தேங்காய் எண்ணெய் சமையலுக்கு  பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காயில் இருந்து செய்யப்படும் சைவ வெண்ணெய் குழந்தைகளுக்கான  பால்பவுடர் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

*மனிதனுக்குத் தெரிந்த மிக வலிமையான (Antimicrobial) நுண்ணுயிர் கொல்லி, லாரிக் ஆசிட். இந்த கொழுப்பு அமிலம் தேங்காய் மற்றும் தேங்காய்ப் பாலில் மட்டுமே உள்ளது. தாய்ப் பாலுக்கு அடுத்த படியாக தேங்காயில் மட்டுமே இந்த லாரிக்  ஆசிட் உள்ளது.

*முதிர்ந்த தேங்காயை முளைக்க விடும் போது பஞ்சு போன்ற மிருதுவான சதை  தேங்காய் மூடிக்குள் வளர்கிறது. இதை அப்படியேவும் உண்ணலாம் அல்லது தேங்காயை சுட்ட பிறகும் உண்ணலாம்.

*தேங்காயில் இருந்து எடுக்கப்படும்  சர்க்கரை,  குறைந்த கிளைசெமிக்  குறியீட்டு  மற்றும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.  வெள்ளை மற்றும் பழுப்பு சர்க்கரைக்கு மாற்றாக காபி, தேநீர், பேக்கிங் மற்றும் சமையலுக்கு   பயன்படுத்தலாம்.  தேங்காய் சர்க்கரையில்  அதிக பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு உள்ளது. இதில் வைட்டமின்கள்  
B1,B2, B3 மற்றும் B6  உள்ளன.

அளவோடு பயன்படுத்துங்கள்

அதிகமாக தேங்காயைத் பயன்படுத்தும்போது அதில்  உள்ள அதிக saturated  கொழுப்பு இதய நோய் வர காரணமாகிறது. மேலும், கலோரி அதிகமாக இருப்பதால், உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

தொகுப்பு: எஸ்.கே.ஞானதேசிகன்