Jan 29, 2022
அரசியல்

சன்சாத் டிவி.யில் இருந்து சிவசேனா பெண் எம்பி. விலகல்: வெங்கையாவுக்கு கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் நடந்து வருகிறது. இதில், மாநிலங்களவையில்  முதல்நாளே அமளியில் ஈடுபட்ட   6 காங்கிரஸ் எம்பி.க்கள் உட்பட 12 எம்பி.க்களை தொடர் முழுவதும் அவை தலைவர் வெங்கையா நாயுடு  சஸ்பெண்ட் செய்துள்ளனர். இவர்கள் மன்னிப்பு கேட்காத வரையில், இந்த நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என்று அவர் உறுதியாகி கூறியுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி.க்களில் சிவசேனாவை சேர்ந்த பெண் எம்பி பிரியங்கா சதுர்வேதியும் ஒருவர்.

நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும், ‘சன்சாத் டிவி’யில், ‘மேரி கஹானி’ என்ற நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து, இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெங்கைய நாயுவுக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘நான் சஸ்பெண்ட் செய்யபட்டதின் மூலம், அவைக்குள்  எனது குரலும், எனது கட்சியின் குரலும் ஒலிக்க முடியாமல் நெரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் எனக்கு வழங்கியுள்ள உரிமை பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சன்சாத் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன்,’ என்று கூறியுள்ளார்.