Aug 14, 2022
கர்ப்பகாலம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்களும் தீர்வுகளும்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை அடைகின்றனர். சிலநேரத்தில் அம்மாற்றங்கள் சாதாரணமாக தோன்றி மறையும், சில மாற்றங்கள் பிரச்சனைகளை உருவாக்கும். ஆயுர்வேதம் இவ்வாறாக வரும் நோய்களை விரிவாக விளக்கி அதற்கான தக்க சிகிச்சைகளையும் மிகவும் நுட்பமாக கூறியுள்ளது. அத்தகைய விளக்கங்களை பற்றி  நாம் இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம். கர்ப்ப காலத்தில் பொதுவாக நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் உணவு முறைகளை சென்ற இதழில் பார்த்தோம் என்பதை நினைவில் கொள்ளவும். குறிப்பு: கீழே கொடுக்கப்பட்ட மருந்துகளை தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே கொடுக்க வேண்டும்.

 1.மசக்கை (HYPEREMESIS GRAVIDUM)

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் குமட்டல், வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் வரும், நாள் செல்ல செல்ல மறைந்து விடும். சிலருக்கு இது அதிகமாகி சோர்வு, எடை குறைதல், தூக்கமின்மை, பதட்டம், உடலில் நீர்ச்சத்து குறைவு போன்ற உபாதைகள் உண்டாகும்.

மருத்துவம் மற்றும் உணவு முறை

ஏலக்காய் விதைகளை வறுத்து, பொடி செய்து, நாள் முழுவதும் சிறிய அளவில் மெல்லலாம். இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து தேனீர் போட்டு குடிக்க நல்ல பலனைத்தரும். இஞ்சி காபி, சுக்கு மல்லி காபி, இஞ்சி எலுமிச்சை வரக் காபி குடிக்கலாம். சுக்கை சிறு சிறு துண்டுகளாக வாயில் அடக்கி மெல்லலாம். அடிக்கடி மாதுளம் பழச்சாறுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம். ஆயுர்வேதத்தில் பிரசித்திப்பெற்ற மாதிபல ரசாயனம் என்னும் நாரத்தம் பழத்தினாலான மருந்து மற்றும் மாதுலுங்க ரசாயனம்  என்னும்  மாதுளை பழத்தினாலான மருந்தை எடுத்துக் கொள்வதால், குமட்டல் வாந்தி கட்டுப்படுவதோடு இரும்புச்சத்து, போலிக் ஆசிட் சத்தும் தாய்க்கும் கருவிலுள்ள குழந்தைக்கும் கிடைக்கும். மேலும் வில்வாதி கஷாயம், பத்ராதி  கஷாயம், நயோபாய கஷாயம், ஜம்பீர பானகம், தான்வந்திர குடிகா, வில்வாதி குடிகா போன்ற மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

2.நெஞ்செரிச்சல்

இது கர்ப்ப காலத்தில் பொதுவாக எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு வியாதியாகும். உணவுப்பையில் இருக்கும் உணவுகள் மேல்நோக்கி உணவுகுழலுக்கு வருவதால் நெஞ்செரிச்சல் ஏற்படும். சிலருக்கு நெஞ்செரிச்சலுடன் வலி, செரியாமை  போன்றவை ஏற்படும்.

மருத்துவம் மற்றும் உணவு முறை

தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உட்கொள்ள வேண்டும். உணவில் டீ, காபி, அதிக உப்பு, காரம், புளிப்பு, எண்ணெயில்  பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். அதற்காக அடிக்கடி antacid மருந்துகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். லேசாக வறுத்த சீரகத்தையோ, ஏலக்காயில் உள்ள விதைகளையோ அரை ஸ்பூன் அளவு அவ்வப்போது வாயிலிட்டு மென்று அந்த சாறை தொண்டையில் படுமாறு விழுங்கி வர நெஞ்செரிச்சல் குறையும். மேலும் திராக்ஷாதி கஷாயம், இந்துகாந்த கஷாயம், குடிச்சி கஷாயம், அதிமதுர சூரணம், திராக்ஷாதி சூரணம், சதாவரி லேகியம் போன்ற மருந்துகளை சாப்பிடலாம்.

3.குன்மம் (ulcer)

கர்ப்பகாலத்தில் கரு வளர்வதாலும் ஹார்மோன்களினாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்களினாலும், வயிற்றில்  உள்ள அமிலம் அதிகமாக சுரப்பதாலும், உணவு அதிக நேரம் வயிற்றிலேயே தங்குவதாலும் குன்மம் (அல்சர்) ஏற்படுகிறது. சிலநேரங்களில் புகை பிடித்தல், மதுப்பழக்கம், மனஅழுத்தம், பதட்டம், கோபம், குடலிலுள்ள தொற்றுநோய், உணவு சரியான நேரங்களில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது போன்றவற்றாலும் குன்மம் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு விழுங்குவதில் சிரமம், மேல் வயிறுவலி, எரிச்சல், சிலநேரத்தில் வயிறு மற்றும் குடலில் ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

மருத்துவம் மற்றும் உணவு முறை

பொதுவாக கர்ப்பகாலத்தில் 3 வேளை ஒரே அளவாக சாப்பிடுவதை விட பசிக்கும் போது 4-5 முறை கூட சிறிது சிறிதாக சாப்பிடுவது நன்மை தரும். கேழ்வரகு சேர்ந்த உணவுகள், சத்துமாவு கஞ்சி, பழங்கள், சாலட் போன்றவைகள் எடுத்துக்கொள்வது நல்லது.

நீர்மோர், மாதுளை, இளநீர், காரமில்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், வெங்காயம் பூண்டு ஆகியவை பச்சையாக சாப்பிடக்கூடாது. அதிக காரமான உணவுகள், இரவு நேரத்தில் தேங்காய்  சேர்ந்த உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.நெஞ்செரிச்சலுக்கு கூறிய வழிமுறைகள் மற்றும் திக்தக கஷாயம், மகா திக்தக கஷாயம், விதார்யாதி கஷாயம், சுகுமார கஷாயம், தன்வந்திர குடிகா, சங்கவடி, அவிபத்திகர சூரணம் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

4.வயிற்றுப்போக்கு (Diarrhea)

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் உணவுமுறை செரிமான மாற்றங்கள் உண்டாகி வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றெறிச்சல் போன்ற ஜீரண மண்டல நோய்கள் உருவாகும்.

சிலநேரங்களில் வெளி உணவு

உட்கொள்வதாலும், குடல் நுண்கிருமிகளாலும், food poisoning, irritable bowel syndrome போன்ற நோய்களாலும் வயிற்றுப்போக்கு  ஏற்படும். இந்நோயில்  வயிறு வலி, பொருமல், நீர்பேதி, சிலசமயம் வாந்தி, வயிறு உப்பசம், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கும் கூட ஏற்படுவதால் மிகுந்த கவனமுடன் உணவுமுறையை கடைபிடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள உப்பு,  நீர் சத்து குறைவு ஏற்பட்டு மயக்கம் உண்டாகி கர்ப்பிணிகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகையால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவம் மற்றும் உணவு முறை

பழைய உணவுகள், ஊறுகாய், மாமிசங்கள், எண்ணெய் பலகாரங்கள், புளிப்பு போன்றவற்றை இந்நிலையில் தவிர்க்க வேண்டும். எந்த உணவானாலும் இளஞ்சூடாக உட்கொள்ள வேண்டும். இருமுறை வடித்த கஞ்சி, இட்லி, இடியாப்பம், காரமில்லா உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது அவசியம். மாதுளம் பழச்சாறு, காய்ச்சி ஆறிய நீர், நன்கு வேகவைத்த காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம். உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மஹாதிக்தக கஷாயம், புஷ்யானுக சூரணம், முஸ்தரிஷ்டம், வில்வாதி கஷாயம், முஸ்தா கஷாயம், தாடிமாஷ்டக சூரணம், லாக்ஷா சூரணம் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

5.மலச்சிக்கல் மற்றும் மூலம்

பொதுவாக குழந்தை வளர்ச்சியினால் ஆசனவாயில் அழுத்தம் ஏற்பட்டு அதனால் மலச்சிக்கலும் மூல நோயும் வரலாம். இதில் மலச்சிக்கலுடன் பொதுவாக வலி, அரிப்பு, கழலை ரத்தம் வடிதல் ஆகிய அறிகுறிகள் வரலாம். நார்ச்சத்து குறைவான உணவுகள், போதிய அளவு நீர் அருந்தாமல் இருப்பதையும் இதற்கு காரணமாகக் கூறலாம்.  சிலநேரங்களில் தைராய்டு பிரச்னை, சர்க்கரைநோய், கால்சியம் குறைபாடு போன்ற துணை நோய்களாலும் கூட இந்நோய் ஏற்படும். மலச்சிக்கலால் ஆசனவாயில் வலி, எரிச்சல், வயிற்று உப்பசம், பசியின்மை, தலைவலி போன்ற அறிகுறிகள் வரும்.  

மருத்துவம் மற்றும் உணவு முறை

கொட்டை நீக்கிய கடுக்காயை இடித்து சலித்து காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் வெந்நீருடன் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். நார்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள், இளநீர், மோர், குல்கந்து,  தினமும் ஒரு கீரை, 8 கப் தண்ணீர், நடைப்பயிற்சி போன்றவற்றை கடைபிடிப்பதால் நல்ல பலனைத்தரும். பருத்த காராகருணை கிழங்கை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக்கி நிழலில் உலர்த்தி இடித்து சூரணித்து பிட்டவியல் செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் காலை மாலை நெய்யில் குழைத்து சாப்பிட்டு பத்தியத்துடன் இருந்து வர மூலநோய் குணமாகும்.  

ஒரு அவுன்ஸ் வாழைப்பூ சாற்றுடன் விலாமிச்சை வேர் சூரணம் 5 கிராம் சேர்த்து சாப்பிட ரத்த மூலத்தில் குருதிப்போக்கு உடனே நிற்கும்.  பிரண்டை கொழுந்தை அரைத்து  சுண்டைக்காய் அளவு காலை மாலை நல்லெண்ணெயுடன் குழைத்து சாப்பிட எல்லா வகை மூலமும் குணமாகும்.

சிரவில்வாதி கசாயம், கந்தர்வஹஸ்தாதி கஷாயம், திரிபலா சூரணம்,  சுகுமார லேகியம், அபாயாரிஷ்டம், ரத்தம் கசிந்தால் புஷ்யானுக சூரணம் ஆகியவை நல்ல பலன் தரும். வெளிப்புறமாக தடவ பல வர்தி, சததௌதகிருதம் பயன்படுத்தலாம்.   

6.ரத்தசோகை (Anemia)

கர்ப்பமாக இருக்கும்போது பெரும்பாலான பெண்களுக்கு ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. தக்க சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், குறைப்பிரசவம் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு
வழிவகுக்கும்.

கர்ப்ப காலத்தில் ரத்த சோகை உருவாக காரணங்கள்

* இரும்பு, ஃபோலேட் அல்லது வைட்டமின் பி 12 சத்து குறைபாடு
* இடைவேளி இல்லாமல் அடுத்தடுத்து இரண்டு பிரசவங்கள்  
* கர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும்போது
* மசக்கை காரணமாக  அடிக்கடி வாந்தி எடுத்தல்
* மலச்சிக்கல் மற்றும் அதனுடன் கூடிய மூலம், ரத்த மூலம்
* கர்ப்பத்திற்கு முன்பு மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகமாக இருந்திருத்தல்.  
* கர்ப்பத்திற்கு முன் ரத்த சோகை.
* மற்ற இதர காரணங்கள்.  

ரத்தசோகை குறிகுணங்கள்  

* சோர்வு, பலவீனம், அசதி, மூச்சுத் திணறல்
* வெளிர் அல்லது மஞ்சள் நிற தோல், குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள்
* ஒழுங்கற்ற இதய துடிப்பு, நெஞ்சு வலி, தலைச்சுற்றல் மற்றும் லேசான தலைவலி

மருத்துவமும் உணவுமுறையும்

முருங்கைக் கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, பசலைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, உலர் திராட்சை, மாதுளை, பேரீச்சம்பழம், அத்திப்பழம், நார்ச்சத்துள்ள காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். பிரிங்கராஜ சூரணம், குமரியாசவம், நவாயசலோகம், லோக பஸ்பம், திரிபாலா மாத்திரை, வாசாகுடூச்சியாதி கஷாயம் நிலைமைக்கேற்றவாறு வழங்கலாம்.

7.உயர் ரத்த அழுத்தம்

கர்ப்பத்திற்கு முன்னரோ கர்ப்பகாலத்திலோ உருவாகி இறுதியில் வலிப்பு நோயாக (Eclampsia) கூட மாறக்கூடும். மேலும் சிறுநீரகங்கள், கல்லீரல், மூளை போன்ற உறுப்புளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடும்.

* நஞ்சுக்கொடிக்கு ரத்த ஓட்டம் குறைதல்  
* நஞ்சுக்கொடி சீர்குலைவு.
* கருப்பை வளர்ச்சி தடைபடுதல்.
* சிசுவின் உறுப்புகளுக்கு சேதம்.
* குறை பிரசவம்
*இதய நோய் ஆகிய ஆபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் தாய் மற்றும் குழந்தைக்கு பல சிக்கல்களை உண்டாக்கும்.

வலிப்பு நோய் அறிகுறிகள்

*சிறுநீரில் அதிகப்படியான புரதம் (புரோட்டினூரியா).

*கடுமையான தலைவலி.

*பார்வை மங்கல் அல்லது மற்ற பார்வை கோளாறுகள்.

*மேல் வயிற்று வலி, வலது பக்கத்தில் உள்ள  விலா எலும்புகளின் கீழ் வலி.

*குமட்டல், வாந்தி, மூச்சுத் திணறல்

*ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் அளவு குறைதல்.  

*திடீர் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம் (எடிமா) - குறிப்பாக முகத்திலும் கைகளிலும்.

மருத்துவமும் உணவுமுறையும்

*உணவில் உப்பு சற்று குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும், எண்ணெய் பொருட்கள்,  ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.  

*மனஅழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நேரத்திற்கு உறக்கம், தேவையான அளவு ஓய்வு, பிராணாயாமம், யோகாசனம் போன்றவை மருத்துவரின்  அறிவுரைப்படி செய்ய வேண்டும்.

*திராக்ஷாதி கஷாயம், புனர்னவாதி கஷாயம் க்ஷீரபலா தைலம்,  தசமூல ஹரிதகி ஆகிய மருந்துகளும், வலிப்புகள் உண்டாகியிருப்பின் கந்தர்வஹஸ்தாதி கஷாயம், ஜடாமாம்ஸி  சூரணம், அஸ்வகந்தா சூரணம், மகா கல்யாணக  கஷாயம், மகா கல்யாணக  கிருதம், மானசமித்ரவடகம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

*மனதை அமைதிப்படுத்த தலையில் ஆமலகி கல்கம் தடவலாம். மேலும் நடைப்பயிற்சி, பிராணாயாமம், தியானம், பாதத்தில் க்ஷீராபலா தைலம் தடவுவது போன்றவை செய்து வலிப்பு மற்றும் மனரீதியான பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

8.உடம்பு வலிகள் மற்றும் மூட்டு வலி

இது பொதுவாக ஆறு மாதத்திற்கு பிறகு அதிகரிக்கும். முதுகு, இடுப்பு மற்றும் மூட்டுக்களில் வலி வரலாம்.

மருத்துவம்

நொச்சி, ஆமணக்கு இலைகளை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் வலி வீக்கம் உள்ள இடங்களில் ஒத்தடம் தர நல்ல பலனளிக்கும். இதுபோல் கோதுமை தவிடு ஒத்தடமும் கொடுக்கலாம்.

தேங்காய் எண்ணெயை சூடாக்கி சிறிது கற்பூரம் சேர்த்து இளஞ்சூட்டில் மூட்டு வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வரலாம்.

இதற்கு தான்வந்தர கசாயம்,  மகாராஸ்தி கசாயம், ஹிங்குவசாதி  சூரணம், தன்வந்தரம் குளிகா, சஹசராதி தைலம் மேலும் தான்வந்தர தைலம் கொண்டு   வெளிப்புற மசாஜ் கொடுப்பது நல்ல
பலனளிக்கும்.

9.பனிக்குட நீர் குறைவு - Hydramnios - Reduced Amniotic Fluid

பனிக்குடம் தான் கருவை பாதுகாக்கிறது. பனிக்குடத்திலிருக்கும் நீரானது கருவை வளர்க்க உதவுகிறது. இது குறைந்தால் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு, குறைப் பிரசவம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சில நேரங்களில் குழந்தை இறந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. ஆயுர்வேதத்தில் ‘கர்பசொசம்’ என்ற தலைப்பில் இதைப்பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இங்கு விதார்யாதி பால் கஷாயம், சதாவரி பால் கஷாயம், விதார்யாதி கிருதம் ஆகியவை கொடுக்க நல்ல பலன் அளித்துள்ளது. மேற்கூறிய உணவுமுறைகள் மற்றும் மருத்துவ முறைகளை பின்பற்றினால் சுகப்பிரசவம் அடைந்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம். மேலும் குழந்தை பிறந்தபின் செய்யவேண்டியவை பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

தொகுப்பு: உஷா நாராயணன்