Jan 30, 2023
கர்ப்பகாலம்

பெண்கள் தேர்ந்தெடுக்கும் தண்ணீர் பிரசவம்

நன்றி குங்குமம் தோழி

கடந்தாண்டு நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி இருவரும் வாட்டர் பர்த் எனும், நீர் தொட்டியில் குழந்தை பெறும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களுக்கு இயற்கை பிரசவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது. இப்போது சுமார் ஓராண்டிற்குப் பின், பெண்கள் பலரும் இயற்கை முறை பிரசவத்தை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த கொரோனா லாக்டவுனில் பலருக்கும் இந்த இயற்கை முறை பிரசவம் என்றால் என்ன என்பதை படித்து புரிந்துகொள்ள நேரம் கிடைத்துள்ளது.

இதையடுத்து பல தாய்மார்கள் இயற்கை முறை தண்ணீர் பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுள்ளனர்.  பெண்கள் பிரசவ வலி தாங்க முடியாமல், அழகு போய்விடும் என சிசேரியனை தேர்ந்தெடுப்பதாக இங்கு பல தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் இன்று படித்த பெண்கள் பலர், பிரசவம் குறித்த பல தகவல்களை தாமாகவே சேகரித்து தகவலறிந்து முடிவுகளை எடுக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

வெளிநாடுகளில் பிரபலமான தண்ணீர் பிரசவம் இப்போது நம் சென்னையிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவர் நந்தினி ஏழுமலை சில முக்கிய தகவல்களை நம்முடன் பகிர்கிறார்.‘‘இயற்கை பிரசவம் என்றால், எந்த மருத்துவ உதவியும் இல்லாமல் அல்லது குறைந்த மருத்துவ உதவிகளுடன் குழந்தை பெறுவதாகும். இப்போது இயற்கை பிரசவம் என்ற சொல் ‘வாட்டர் பர்த்’ அதாவது நீர்த்தொட்டி பிரசவத்தையே குறிக்கிறது.

மருத்துவமனை படுக்கையில் நடக்கும் அதே பிரசவம், 32 முதல் 36 டிகிரி செல்சியஸ் சூடு இருக்கும் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் நடக்கும். வலி ஆரம்பித்து கடைசியாக குழந்தை வெளியே வரும் வரை சிலர் தண்ணீர் தொட்டியில் இருப்பார்கள். சிலர் வலி வந்த சில மணி நேரங்கள் மட்டும் தண்ணீர் தொட்டியிலிருந்து, சரியாக குழந்தை பெறுவதற்கு முன் படுக்கைக்கு மாறிவிடுவார்கள்.

பொதுவாகவே மருத்துவமனை என்றாலே பலருக்கும் ஒரு வித அச்சம் இருக்கும். இயற்கை பிரசவ நிலையங்கள் வீடு போன்ற அமைப்புகளில் இருப்பதால், மருத்துவமனையில் இருக்கும் உணர்வு ஏற்படாது. இந்த சூழலே பலருக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் தருவதாக கூறுகின்றனர். வயிற்றில் இருக்கும் குழந்தை, ஏற்கனவே தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன் போன்ற ஒரு சூழலில் தான் இருக்கும்.

ஒன்பது மாதம் கழித்து அதே தண்ணீர் போன்ற சூழ்நிலைக்குள் அது வெளியே வரும் போது, குழந்தைக்கும் தாய்க்கும் அந்த மாற்றம் எளிதாக நடக்கும் என்பதுதான் தண்ணீர் பிரசவத்தின் கோட்பாடு. ஆனால் இது வெறும் யுடியூபைப் பார்த்து செய்யக்கூடிய விஷயமல்ல. இந்த தண்ணீர் பிரசவத்தை முறையான பயிற்சிப் பெற்று நல்ல அனுபவமுள்ளவர்களே செய்ய வேண்டும்.

என்னதான் பிரசவம் இயற்கையான ஒரு நிகழ்வாக இருந்தாலும், தாய்க்கும் குழந்தைக்கும் திடீரென உதவி தேவைப்படலாம். அல்லது உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். பயிற்சிப் பெற்றவர்களால் மட்டுமே இதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ற உதவியை செய்ய முடியும்.
தண்ணீர் பிரசவத்தில் பல பயன்களும் இருக்கிறது.

வெதுவெதுப்பான தண்ணீரில் தாய் இருப்பதால் வலிக்குறைந்து, பயமும் நீங்கும். நீருக்குள் உடலின் எடை குறைவதால், அம்மாவால் சுலபமாக நீரில் நகரமுடியும். இதன் மூலம் தனக்கு வசதியான ஒரு நிலையில் அவளால் பிள்ளைப் பெற முடியும். நீருக்குள் இருக்கும் போது தாய்க்கு மிதப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது, இது கருப்பைக்கு செல்லும் ரத்தவோட்டத்தை அதிகரிக்கும். கருப்பைக்கு அதிக ரத்தவோட்டம் கிடைக்கும் போது, அது வலியின் தன்மையை அதிகரித்து பிரசவத்திற்கான நேரத்தை குறைத்துவிடுகிறது.

கருப்பை வாயில் ஏற்படும் அழுத்தத்தையும் தண்ணீர் குறைக்கிறது. தண்ணீருக்குள் ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் கூட குறைந்து சீரான நிலையில் இருக்கும். குழந்தை வெளியே வர தசைகள் விலகி சுலபமான பாதையை உருவாக்கும். அதேப் போல, குழந்தை வெளியே வரும் போது கீழே சில தசைகளை கிழித்துக்கொண்டு வரும். இதை Perineal Tears - பெரினியல் டியர் என்பார்கள்.

இதன் பாதிப்புகள் தண்ணீர் பிரசவத்தில் குறைவாக இருக்கும். இதில் பல நன்மைகள் இருந்தாலும், அனைவருக்கும் இந்த தண்ணீர் பிரசவம் பொருந்தாது. 37 வாரங்கள் தாண்டிய கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பிரசவ முறை சுலபமாக இருக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் இருக்கக்கூடாது. குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குழந்தையின் தலையும் கீழே இருக்க வேண்டும். இது போன்ற எந்த பிரச்சனைகளும் இல்லாத ஆரோக்கியமான அம்மாக்கள் தாராளமாக இந்த தண்ணீர் பிரசவத்தை எந்த தயக்கமும் இன்றி தேர்ந்தெடுக்கலாம்.

இந்த மாதிரியான வாட்டர் பர்த் நிலையங்களில் மருத்துவச்சி எனப்படும் midwifes இருப்பார்கள். அவர்கள் ஒரு பெண் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை அவர்களை அரவணைத்து வழிகாட்டி நம்பிக்கை அளித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களைத் தாண்டி பெண்ணின் கணவர், தாய், தோழி என குடும்பத்தினரும் பெண்ணுடன் பிரசவத்தின் போது பக்கத்தில் இருக்கலாம்.

நீர்த்தொட்டி பிரசவத்தை தேர்ந்தெடுக்கும் போது அதற்கு சரியான திட்டம் வேண்டும். தேவையான விழிப்புணர்வும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும் அவசியம். இயற்கை பிரசவம் வேண்டும் என அதற்கான அனைத்து முயற்சிகள் எடுத்தாலும், சில சமயம் சிசேரியன் செய்யும் நிலையும் ஏற்படலாம். சிசேரியன் தவறான பிரசவ முறை அல்ல. அது உயிர்காக்கும் சிகிச்சை முறை என்பதை மனதில் வைத்து, தாய் அதற்கும் தயாரான நிலையில் இருக்க வேண்டும்.

இந்த தயாரிப்புகள் பிரசவத்திற்கு முன் சில வகுப்புகள் மூலம் தாய்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த வகுப்புகளில் தாயும் தந்தையும் கலந்து கொள்வது முக்கியமாகும். அருகிலேயே மருத்துவமனை இருப்பதும் அவசியமாகும். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், உடனே தாயை நீர் தொட்டியிலிருந்து தூக்கிச் சென்று, மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் தயாராக இருக்க வேண்டும்” என்றவர் தண்ணீர் பிரசவ முறையில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் விவரித்தார்.

‘‘இதில் அரிதான சில ஆபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை வெளியே வந்ததும் முதலில் தலையை பிடித்து வெளியே எடுப்போம். அப்போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கும். நஞ்சுக்கொடி திடீரென முறிந்துவிடவும் வாய்ப்புள்ளது. மேலும் தண்ணீரை எவ்வளவு முறை மாற்றிக்கொண்டே இருந்தாலும், அதில் தாயும் இருப்பதால் சில தொற்றுக்கள் உருவாகலாம்.

பொதுவாக மருத்துவமனையில் நடக்கும் பிரசவத்தில், மருத்துவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். எந்த ஆபத்து வந்தாலும் தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், தண்ணீர் பிரசவத்தில் தாய் நிம்மதியாக இருந்தாலும், சுற்றியிருப்பவர்கள் பதட்டத்திலேயே இருப்பார்கள்.

அதனால் இந்த நீர் தொட்டி பிரசவம் இப்போது சில மருத்துவமனைகளிலும் அறிமுகமாகியுள்ளது. மருத்துவமனைகளுடன், இயற்கை பிரசவ முறைகளையும் சேர்க்கும் போது, அவசர கால ஆபத்துக்களை தடுக்க முடியும். பெண்கள் வலி எடுக்க ஆரம்பித்ததும் நீர் தொட்டிக்குள் சென்று, பின் குழந்தையின் தலை வெளியே தெரிய ஆரம்பித்ததும் படுக்கைக்கு மாற்றி பிரசவம் செய்யலாம். அதே போல தாய்/குழந்தையின் இதய துடிப்பு திடீரென குறைந்தால், உடனே அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க முடியும்.

இந்த ரிஸ்க்குகளை எடுக்கலாமா வேண்டாமா என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் பொருத்தது. அதே போல வலி தாங்கும் சதவீதமும் ஒவ்வொருவருக்கும் மாறும். பர்திங் பார்ட்னர் எனப்படும் கர்ப்பிணியின் கணவர் அல்லது அவரது அம்மா தோழியை கண்டிப்பாக சில மருத்துவமனைகள் உள்ளே இருக்க சொல்லி கேட்கின்றனர். தனக்கு தெரிந்த ஒருவர் உடனிருக்கும் போது, பெண்ணின் மன வலிமை அதிகரிக்கும்” என்கிறார் மருத்துவர் நந்தினிமருத்துவர்களோ அல்லது கருவுற்ற தாய்மார்களோ யாருமே சிசேரியன் வேண்டும் எனக் கேட்பதில்லை.

அனைவரும் சுகப்பிரசவத்திற்குதான் தயாராகுகிறார்கள். சில சமயம் ஏதாவது ஆபத்து இருக்கும் பட்சத்தில் மட்டுமே சிசேரியனை தேர்வு செய்கிறார்கள். வெளிநாடுகளில் இது மிகவும் சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். இங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாக சாதாரணமாகி வருகிறது. ஆனால், இதை அனைவரும் முயற்சிக்க முடியாது என்பதையும் பலர் நினைவில் கொள்ள வேண்டும்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்