Jul 02, 2022
பிரசவ கால ஆலோசனை

தாய்ப்பாலும் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கிறது!

நன்றி குங்குமம் டாக்டர்

விழிப்புணர்வு

அனைத்து பாலூட்டிகளுக்கும், தான் ஈன்றெடுத்த குட்டிகளுக்கு பாலூட்டும் கலையை இயற்கை சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஆனால், ஆறறிவு படைத்த  மனிதனுக்கோ அதற்கான விழிப்புணர்வு இன்று தேவைப்படுவது வினோதமான விஷயம். இதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரத்தை தாய்ப்பால்  வாரமாகக் கொண்டாடி வருகிறோம். ஆனாலும், விழிப்புணர்வு இன்னும் போதுமானதாக இல்லை. தனிப்பட்ட மனிதராகவோ அல்லது குடும்ப உறுப்பினராகவோ  நாம் ஒவ்வொருவரும் இதில் பங்காற்ற வேண்டிய அவசியத்தைப்பற்றி அறிய, பிரத்யேக தாய்ப்பாலூட்டுதல் ஆலோசகரான ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணனிடம்  பேசினோம்...

‘‘தாய்ப்பால் கொடுக்காததன் பாதிப்புகள் உலகளாவிய அளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதையொட்டி உருவாக்கப்பட்டதுதான் WABA (World  Alliance for Breastfeed Action). இந்த அமைப்பு 2016-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலகத்தாய்ப்பால் வாரமாக  ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் தாய்ப்பால் கொடுக்காததன் செலவு, தாய்ப்பால் கொடுப்பதில் அப்பாக்களின் பங்களிப்பு  மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு, உலகளாவிய தரவுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை மையக்கருத்தாக எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக  செயல்படுத்தி முடித்திருக்கிறது.

WABA அமைப்பில் தாய்ப்பால் ஆதரவுக்குழு, பரிந்துரையாளர்கள், கல்வியாளர்கள், ஆலோசகர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஒரு  பரந்துவிரிந்த உறுப்பினர்கள், தாய்ப்பால் கொடுப்பதற்கான ஆதரவு சங்கிலி பிணைப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த முயற்சிக்குப் பின்னரும் ஊட்டச்சத்து  குறைபாட்டினால், ‘தாய், சேய் உடல்நல பாதிப்புகளும், தாய்ப்பால் கொடுக்காததினால் விளையும் பொருளாதாரச் சுமைகளும் உலக அளவில் அதிகரித்துக்  கொண்டுதான் இருக்கின்றன’ என்பதற்கு சாட்சியாக சர்வேக்கள் கொடுக்கும் தரவுகள் நிரூபித்திருக்கின்றன. இந்தியாவை எடுத்துக் கொண்டால், தாய்ப்பால்  கொடுக்கப்படாததால் அரசாங்கத்தின் மருத்துவச்செலவு ஓராண்டிற்கு, ரூ.727.18 கோடி என்றும், தனிப்பட்டவரின் வீட்டுச் செலவு ரூ. 25393.77 கோடி எனவும்  மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்படைந்தவர்களின் புள்ளி விவரம்


வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள்     3,47,91,524
நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள்         24,70,429
உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள்     40,382
மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்     7,976
கருப்பைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்     1,748
டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள்     87,855

இவையெல்லாம் தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்பட்ட பாதிப்புகள் என்பதும், குறிப்பாக இந்த மதிப்பீடுகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜூலை 16-ம்தேதி  எடுக்கப்பட்ட சர்வேயில் வெளியான தகவல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் செயல்பாட்டைப் பொருத்து WABA மதிப்பெண்  கொடுக்கும். அதில் இந்தியா பெற்றுள்ள மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? 45/100. உலக நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் இந்தியா பெற்றுள்ளது 78-வது இடம்.  இதெல்லாவற்றையும் விட மோசமான செயல்பாட்டிற்காக இந்தியாவிற்கு ‘ரெட்’ குறி வேறு கொடுத்திருக்கிறார்கள். 2025-க்குள் எட்டவேண்டிய நிலைக்கான  செயல்திட்டத்தையும் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் பிரசவகால பயிற்சிகள், ஆலோசனைகள் கொடுத்துக் கொண்டிருந்த எனக்கு குழந்தை பெற்ற பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பார்த்து,  அதற்கும் ஆலோசனை சொல்ல ஆரம்பித்து, அதில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. அதன்விளைவாக, ‘ஹேப்பி மாம்’ என்ற பெயரில் தாய்ப்பால் ஆதரவுக் குழு  ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் உறுப்பினர்கள் இணைந்து பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும்  கொடுக்கிறோம். இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் பெண்களுக்கு தாய்ப்பால் ஊட்ட பயிற்சி கொடுக்கிறார்கள். இதற்காக ஒரு வாட்ஸ் அப் குரூப் ஒன்றையும்  உருவாக்கியிருக்கிறோம்.

அதில் தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகள் பற்றி நிறைய சந்தேகங்களை இளம் தாய்மார்கள் கேட்பார்கள். அவர்களுக்கு  உடனுக்குடன் ஆலோசனைகள் கொடுத்து வருகிறோம். இந்த வருட மையக்கருத்தான பொருளாதாரச் சுமையையே எடுத்துக் கொள்வோம். பவுடர் பாலின் விலை  1 டின் ரூ.500 என்று வைத்துக் கொண்டால், முதல் 2, 3 மாதங்களுக்கு ஒரு வாரத்திற்குத்தான் வரும். ஒரு மாதத்திற்கு 2000; ஒரு வருடத்திற்கு  கணக்குப்போட்டால் எவ்வளவு ஆகும்? பணம் இவ்வளவு செலவாவது தெரியாமலேயே வாங்கிக் கொண்டிருப்பார்கள். பால் பவுடரை அடைத்து விற்கும்  கன்டெய்னர்களின் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும், அதை அப்புறப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவு என பாதிப்புகளின்  பட்டியல் நீள்கிறது.

6 மாதம் வரை ஒருவகை பவுடர். 6 மாதத்திற்குப்பிறகு ஒருவகை என்று வேறு விற்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு  வயிறு உப்பசம், வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் என்று அடிக்கடி நோய்கள் வருவதால் அதற்காக அடிக்கடி மருத்துவமனைகளில் அனுமதிக்கும் செலவும்  கூடுதல் சுமையாகிறது. இந்தக் குழந்தைகளுக்கு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் வெளியேறுவதால் அடிக்கடி பசி வந்து அழ ஆரம்பிப்பார்கள்.  செயற்கை பால் பவுடரில் சோயா, சோளம், வெஜிடபிள் ஆயில் போன்றவற்றை கலந்து செய்வதால், வயிறு உப்பசம் வந்து குடித்தவுடன் தூங்கிவிடும்.  இதைப்பார்த்து, குழந்தைக்கு வயிறு நிரம்பி நிம்மதியாகத் தூங்குகிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

பார்க்க வேண்டுமானால் குழந்தை புஷ்டியாக இருப்பதுபோல் தெரியும். ஆனால், சுறுசுறுப்பாக விளையாட மாட்டார்கள். ஆனால் தாய்ப்பாலில், நன்மை செய்யும்  பாக்டீரியாக்கள் இருப்பதால் குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், குழந்தை சுறுசுறுப்பாக விளையாடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு  இருந்தால் மட்டுமே ஒரு தாய் தன் குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுப்பதை உற்சாகப்படுத்த முடியும். முதல் 3 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே  குழந்தைக்கு உணவு என்பதால், இரவு, பகல் என நாள் முழுவதும் தாய்ப்பால் கொடுப்பது, குழந்தையைப் பார்த்துக் கொள்வது என்ற நிலையில்  பிரசவத்திற்குப்பிறகான மனஅழுத்தம் ஏற்படுகிறது.

ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தையை கவனித்துக் கொள்வதன் மூலம், பிரசவித்த பெண்ணுக்கு கணவனும், குடும்ப உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து  ஆதரவளித்தால் அவர்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கு ஊக்கமளிக்க முடியும். பொருளாதார சுதந்திரம் அடைந்த பெண்கள் குழந்தை வளர்ப்பில் தன் கணவனின்  பங்கையும் எதிர்பார்க்கிறார்கள். இதை கருத்தில் கொண்டே, இந்த வருட மைய கருத்தில் தாயை மட்டுமல்லாது, அப்பாக்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும்  பொறுப்புணர்வு ஏற்படுத்துவதை வலியுறுத்துகிறது. நம்மூர்களில், சுற்றியும் உள்ள உறவினர்களே ஆலோசகர்களாக மாறிவிடுகிறார்கள். சிசேரியன் பிரசவம்  என்றால் பால் கொடுக்க முடியாது, இன்றைய பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில்லை போன்று ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லும்போது முதன்முறை  குழந்தை பெற்ற அந்த இளம் தாய் குழம்பிவிடுகிறாள்.

எந்தப் பெண்ணிற்கும் தாய்ப்பால் சுரக்காது அல்லது போதாது என்ற நிலையே கிடையாது. தாய் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவும், ஆரோக்கியமான  மனநிலையும்தான் அவளின் தாய்ப்பாலின் தரத்தையும், சுரக்கும் அளவையும் தீர்மானிக்கிறது. அடுத்து, நம் நாட்டைப் பொருத்தவரை, இளம் தாய்மார்கள் தங்களது  தாய்ப்பால் குறித்த சந்தேகங்களுக்கு ஆலோசனை பெற, குழந்தைகள் நல மருத்துவரையோ அல்லது பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மகளிர்நல  மருத்துவரையோ தான் அணுகும் நிலை உள்ளது. அதுவும் பிஸியான டாக்டர் என்றால், கிடைக்கும் 5 நிமிடங்களில் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க  முடியாது.

தாய்ப்பால் ஊட்டுதலுக்கான தனிப்பட்ட ஆலோசகர்கள் எண்ணிக்கை குறைவு. இந்த நிலையில், WABA வரையறுத்துள்ள இலக்கை 2025-ம் ஆண்டில்  அடைவதற்கு பிரத்யேக ஆலோசகர்களும், ஆதரவுக் குழுவும் அதிகம் தேவைப்படுகிறது. தற்போது நாங்கள் ஏற்படுத்தியுள்ள ‘ஹேப்பி மாம்’ குழுவில் 200-க்கும்  மேற்பட்ட இளம் தாய்மார்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாங்கள் ஆரம்பித்து 3 மாதங்களுக்குள்ளாகவே, அத்தனை பேரையும் பவுடர் பாலிலிருந்து  தாய்ப்பாலுக்கு மாற்றிவிட்டோம். அதன் மகிமையை உணர்ந்த அவர்களே தங்கள் வட்டத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசகர்களாகிவிட்டார்கள் என்றால் பார்த்துக்  கொள்ளுங்கள்’’ என்கிறார்.

- என்.ஹரிஹரன்