Sep 23, 2021
மகப்பேறு மருத்துவம்

கருச்சிதைவின் காரணம்

நன்றி குங்குமம் டாக்டர்

சுகப்பிரசவம் இனி ஈஸி


மனித வாழ்க்கையை ஒரு நீர்க்குமிழிக்கு ஒப்பிடுவது வழக்கம். இந்த பூமியில் சாதாரணமாக 80 வயதைக் கடந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்; எதிர்பாராமல், 20 வயதிலேயே இறக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் கருப்பையில் வாழும், வளரும் கருவுக்கும் இது பொருந்தும். எப்போது வேண்டுமானாலும் இந்த ‘நீர்க்குமிழி’ உடையலாம். மனிதன் இறந்தால், மரணம் என்பது போல, கரு இறந்தால் அபார்ஷன் என்று குறிப்பிடுகிறோம்.

கருப்பையில் வளரும் ஓர் உயிர் முழுவதுமாக வளர்ந்து, அம்மாவின் வயிற்றிலிருந்து வெளிவந்த பின்புதான், அது மனிதனாகவோ, மனுஷியாகவோ ஆக வேண்டும் என்கிற அவசியமில்லை. கருப்பையில் 20 வாரங்கள் அது வளர்ந்துவிட்டாலே, அதற்கு மனிதன் அல்லது மனுஷி என்று அழைக்கும் உயிர்த்தகுதி வந்துவிடுகிறது.

எனவே, 20 வாரங்களில் அது அம்மாவை விட்டுப் பிரிய வேண்டியது இருந்தாலும் அது உயிர் பிழைத்துக் கொள்ளும். ஆனால், அதற்கு முன்பு அது அம்மாவை விட்டுப் பிரிய நேரிட்டால், அது முழு உருவமாகவும் இருக்க முடியாது; உயிர் வாழவும் முடியாது. இதைத்தான் கருச்சிதைவு அல்லது அபார்ஷன் என்கிறோம்.

பெரும்பாலான அபார்ஷன்கள் கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள்ளேயே நிகழ்கின்றன. இரண்டாம் டிரைமெஸ்டரில் ஒரு சிலருக்கு மட்டும் அபார்ஷன் ஆகிறது. இன்னும் சில பெண்களுக்குத் தாம் கருவுற்றிருப்பது தெரிவதற்குள் அபார்ஷன் ஏற்பட்டுவிடுவதும் உண்டு. இந்தியப் பெண்களில் கருத்தரித்தவர்களில் 10 முதல் 15 சதவீதம் வரை பல்வேறு காரணங்களால் அபார்ஷன் ஆகிறது.

பொதுவான காரணங்கள்

கர்ப்ப காலத்தில் கடுமையான காய்ச்சல், மலேரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மைத் தொற்றுகள் அபார்ஷன் ஆவதைத் தூண்டுவதுண்டு. நீரிழிவு, குறை தைராய்டு, இதயநோய், சிறுநீரக நோய் என அம்மாவின் உடலில் நோய்கள் ஏதாவது இருந்து சரியாக கவனிக்கப்படாமல் இருந்தால் அபார்ஷன் ஆகலாம்.

புற்றுநோய்க்குத் தரப்படும் மருந்துகள் போன்ற கடுமையான மருந்துகளைச் சாப்பிடுபவர்களுக்கு அபார்ஷன் ஏற்படலாம். புகைபிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் உள்ள பெண்களுக்கு அபார்ஷன் ஆகும் வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, மது அருந்தும் பழக்கம் வேலைக்குச் செல்லும் இன்றைய இளம் பெண்களிடம் அதிகரித்து வருவதால் இந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது. பல சமயங்களில் காரணமே தெரியாமல் அபார்ஷன் ஆவதும் உண்டு என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிகுறிகள் என்ன?

எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு அல்லது ரத்தப்போக்கு ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறி. சிலருக்கு ரத்தம் கட்டி கட்டியாகவும் வெளியேறும். அப்போது அடிவயிறு வலிக்கும். சிலருக்கு குளிர்காய்ச்சல் வரும். வயிற்றை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்த்தால், கரு கலைந்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அபார்ஷன் வகைகள்

தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous abortion), மருத்துவக் காரணங்களுக்கான அபார்ஷன் (Medical Termination of Pregnancy  MTP), செப்டிக் அபார்ஷன் (Septic abortion) என அபார்ஷனில் மூன்று வகை உண்டு. தானாக ஆகும் அபார்ஷன் கீழ்க்காணும் விதங்களில் ஏற்படுகிறது

அச்சுறுத்தும் அபார்ஷன் (Threatened abortion)

திடீரென்று ரத்தப்போக்கு ஏற்படும். ஆனால், கருப்பையின் வாய் மூடியபடி இருப்பதால் அபார்ஷன் ஆகாது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டால் இது சரியாகிவிடும். தவிர்க்க முடியாத அபார்ஷன் (Inevitable abortion).

திடீரென்று கருப்பையின் வாய் திறந்து, கரு கலைந்து வெளியேற தயாராக இருக்கும் நிலைமை இது. வெளியேறும் ரத்தப்போக்கை வைத்து இதைக் கண்டுபிடிக்கலாம். மருத்துவரிடம் சென்று கருப்பையை முழுவதுமாகச் ‘சுத்தம்’(D&C) செய்துகொள்ள வேண்டும்.

அரைகுறை அபார்ஷன் (Incomplete abortion)

கரு கலைந்து அரைகுறையாக வெளியேறும் நிலைமை இது. கருவின் மிச்சம் கருப்பையிலேயே தங்கியிருக்கும். இதற்கும் மருத்துவரிடம் சென்று கருப்பையை முழுவதுமாகச் ‘சுத்தம்’ செய்துகொள்ள வேண்டும்.

முழுமையான அபார்ஷன் (Complete abortion)

கரு கலைந்து தானாகவே முழுமையாக வெளியேறிவிடும். அப்போது கருவானது முழுவதுமாக வெளியேறிவிட்டதா என்பதைத் தெரிந்துகொண்டால் போதும்.

கவனிக்கப்படாத அபார்ஷன் (Missed abortion)

கருப்பைக்குள் குழந்தை இறந்திருக்கும். ஆனால், ரத்தப்போக்கு இருக்காது. இதனால், அபார்ஷன் ஆகியிருப்பது அம்மாவுக்கே தெரியாது. இதற்கும் கருப்பையை முழுவதுமாகச் ‘சுத்தம்’ செய்துகொள்ள வேண்டும்.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual abortion)  

சில பெண்களுக்கு கரு உருவாகித் திரும்பத் திரும்ப அபார்ஷன் ஆகிவிடும். இது பெரும்பாலும் இரண்டாவது டிரைமெஸ்டரில்தான் ஏற்படும். இவ்வாறு மூன்று முறைக்கு மேல் நிகழ்ந்தால், இதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்தமுறை அபார்ஷன் ஆகாது. என்ன காரணம்?

கருப்பையில் உருவான கருவில் குரோமோசோம்களில் குறைபாடு இருந்தால் கரு சரியாக உருவாகாது. இதனால், இயல்பாகவே கருப்பை அதை ஏற்றுக்கொள்ளாமல் அபார்ஷன் ஏற்பட்டுவிடும். அம்மாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த ‘ஆன்டிபாஸ்போலிப்பிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம்’, ‘திராம்போபிலியா’ போன்ற நோய்கள் இருந்தாலும் அபார்ஷன் ஆகிறது.

அம்மாவின் கருப்பையில் பிறப்பிலிருந்தே சில குறைபாடுகள் இருக்கலாம். இவை கருப்பையில் வளரும் கருவுக்குப் பிரச்னை ஆகி, அபார்ஷன் ஆகலாம். அம்மாவின் கருப்பை ஒரு தசையின் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை (Septate uterus) இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். சிலருக்குக் கருப்பையின் வாய்ப்பகுதி திறனில்லாமல் (Cervical incompetence) இருக்கலாம். இதனால் கரு உருவான ஆரம்பத்திலேயே இந்த வாய்ப்பகுதி திறந்துவிட்டால் அபார்ஷன் ஆகிவிடும். இது பெரும்பாலும் இரண்டாவது டிரைமெஸ்டரில்தான் ஏற்படும்.

கருப்பையில் முக்கியமான இடத்தில் ஃபைப்ராய்டு கட்டி உருவாகி இருந்தாலும் சிலருக்கு அபார்ஷன் ஆவது உண்டு. கருப்பை பின்னோக்கி வளைந்திருந்தாலும், அதில் கரு தங்காது: கலைந்துவிடும். இந்தக் குறைபாடுகளைக் கலைந்துவிட்டால் கரு தங்கும். உதாரணமாக, கருப்பையின் வாய்ப்பகுதி திறனில்லாமல் இருப்பவர்களுக்கு ‘செர்விக்கல் செர்க்ளேஜ்’ (Cervical cerclage) எனும் அறுவை சிகிச்சை செய்துகொண்டால், அடுத்தமுறை கரு தங்கிவிடும்.

மருத்துவக் காரணங்களுக்கான அபார்ஷன்கருவில் வளரும் குழந்தையால் அம்மாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை இருந்தால், அப்போது பெற்றோரின் சம்மதத்துடன் குழந்தையை அபார்ஷன் செய்துவிடுவது வழக்கம். அதுபோல், இயற்கையிலேயே கருவில் வளரும் சில குழந்தைகளுக்கு இதயம், சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புகள் சரியாக உருவாகாமல் போய்விடும்.

சரிப்படுத்தவே முடியாத அளவுக்குக் குறையுள்ள இந்தக் குழந்தைகளை வயிற்றில் இருக்கும்போதே மருத்துவர்கள் அபார்ஷன் செய்துவிடுவார்கள். அதேசமயம், இந்த முறையைப் பயன்படுத்தி கருவில் உருவான பெண் குழந்தைகளை அழித்துக்கொள்ளும் கொடுமையும் இங்கு நிகழ்கிறது என்பதுதான் மனதைப் பிழியும் சோகம்.

செப்டிக் அபார்ஷன் தானாக ஆகும் அபார்ஷன், மருத்துவக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் அபார்ஷன் ஆகிய இரண்டிலும் சுகாதாரமற்ற முறையில் கருப்பையை சுத்தப்படுத்த முனையும்போது, இது ஏற்படுகிறது.

வேகத்தில் விவேகத்தை இழந்து கர்ப்பமாகும் திருமணமாகாத பெண்களும், வேண்டாத கர்ப்பத்தைச் சுமக்கும் பெண்களும் கருவைக் கலைப்பதற்காக சுகாதாரமற்ற, தகுதியில்லாத இடங்களைத் தேடிப்போய் கருவைக் கலைத்து உயிருக்கே ஆபத்தை வரவழைத்துக்கொள்வதும் நம் சமூகத்தில் நடக்கிறது.

இது தேவையில்லை. இப்போது அரசாங்கமே கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிவிட்டதால், எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக இதைச் செய்துகொள்ள முடியும். தகுதியான மருத்துவர்களால், சுகாதாரமான முறையில் இதைச் செய்துகொள்ளும்போது அம்மாவின் உயிருக்காவது பாதுகாப்பு கிடைக்குமல்லவா?

(அடுத்த இதழில் பயணம் முடியும்)