Sep 30, 2022
கர்ப்பகால கவனிப்பு

இன்னும் இரண்டு காய்ச்சல்கள்!

கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வருவது இயல்பானது என்பதையும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் கடந்த இதழில் விரிவாகவே பார்த்தோம். வழக்கமாக வரும் அந்த சாதாரண காய்ச்சலைத் தாண்டி, இன்னும் இரண்டு முக்கியமான காய்ச்சல்களும் இருக்கின்றன. கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அந்த இரண்டு காய்ச்சல்கள் பற்றியும் பார்த்துவிடலாம்...

சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது கர்ப்பிணிக்கோ, கருவில் வளரும் சிசுவுக்கோ அவ்வளவாக ஆபத்து ஏற்படுவதில்லை. அப்படியே ஆபத்து இருந்தாலும், இன்றைய நவீன சிகிச்சைகளால் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும். ஆனால், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் கர்ப்பிணிகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கர்ப்பத்தின் காரணமாக இவற்றின் விளைவுகள் கடுமையாகிவிடும் என்பதால் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது.

* பன்றிக்காய்ச்சல்
இன்ஃபுளுயன்சா A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் இந்த நோய் வருகிறது. நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியை காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி அடுத்தவர்களுக்குத் தொற்றும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு,  தலையணை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால், அவற்றின் மூலம் அடுத்தவர்களுக்கும் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. 6 அடி தூரத்துக்கு இந்தக் கிருமிகள் பரவும் தன்மை உடையது.  

அறிகுறிகள்
உடலுக்குள் வைரஸ் புகுந்த ஒரு வாரத்துக்குள் நோய் தொடங்கிவிடும். கடுமையான காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், மார்புச்சளி, மூச்சுவிடுவதில் சிரமம், வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, சோர்வு போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். இவை ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கும்.

சிக்கல்கள்

கர்ப்பிணிகளை இது பாதித்தால், காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா, சுவாசத்தடை நோய்(ARDS), மூச்சுச்சிறுகுழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு வந்துவிடும். இது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக, கருச்சிதைவு ஏற்படலாம். குறைப்பிரசவம் நேரலாம். குழந்தை இறந்தும் பிறக்கலாம். குழந்தைக்கு நரம்பு மண்டலத்தில் பிறவி ஊனங்கள் உண்டாகலாம்.

என்ன பரிசோதனை?
நோயாளியின் தொண்டையிலிருந்து சளியை எடுத்து ரியல் டைம் பி.சி.ஆர்(Real Time PCR) எனும் பரிசோதனை செய்து இந்த நோய் உறுதி செய்யப்படுகிறது.

என்ன சிகிச்சை?
நோயாளிக்கு வந்துள்ளது பன்றிக்காய்ச்சல்தான் என்பது உறுதியானால், ஐந்து நாட்களுக்கு டாமிஃபுளு(Tamiflu) மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். ஓசெல்டாமிர்(Oseltamivir) எனும் மருந்தின் வியாபாரப் பெயர்தான் டாமிஃபுளு. காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற மற்ற நோய் அறிகுறிகளைக் குறைக்கவும் மருந்துகள் தேவைப்படும். குளுக்கோஸ், சலைன் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவையும் செலுத்தப்பட வேண்டியது வரலாம். இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டும்.

தடுப்பது எப்படி?
இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கர்ப்பிணிகள் முகத்தை மூடிக்கொள்வதற்கு முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடி அணிந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

தடுப்பூசி உண்டா?
வீரியம் குறைக்கப்பட்ட மூவகை நுண்ணுயிரித் தடுப்பூசி(Trivalent inactivated vaccine - TIV) பன்றிக்காய்ச்சலைத் தடுக்கிறது. கர்ப்பம் ஆவதற்கு முன்பும் இதைப் போட்டுக் கொள்ளலாம்; கர்ப்பம் ஆன பிறகும் இதைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடா வருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க ‘நேசல் ஸ்பிரே தடுப்பு மருந்து’ ஒன்று உள்ளது. இதை கர்ப்பிணிகள் பயன்படுத்தக் கூடாது.

* டெங்கு காய்ச்சல்
டெங்கு(Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது டெங்கு காய்ச்சல். ஏடிஸ் எஜிப்தி(Aedes Aegypti) எனும் கொசுக்கள் கடிக்கும்போது, இது வருகிறது. குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகம். என்றாலும், கர்ப்பிணிகளுக்கு இது ஏற்பட்டால் ஆபத்துகள் அதிகம். திடீரென்று கடுமையான காய்ச்சலுடன் நோய் ஆரம்பிக்கும். தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, இருமல் ஆகிய அறிகுறிகள் சேர்ந்துகொள்ளும். மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தொடர்  வாந்தியும் வயிற்று வலியும் ஆபத்தான அறிகுறிகள். இவற்றோடு உடலில் அரிப்பு ஏற்படும். சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். பல் ஈறுகள், இருமல், சிறுநீர், மலம் போன்றவற்றில் ரத்தம் வெளியேறலாம். ஏனெனில், இவர்களுக்கு ரத்தம் உறைவதைத் தடுக்கும் ரத்தத் தட்டணுக்கள் குறைவதால், ரத்தக் குழாய்களிலிருந்து ரத்தக்கசிவு உண்டாகிறது.  பெரும்பாலானவர்களுக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சி நிலை(Dengue Shock Syndrome) உருவாகும். இவர்கள்தான் ஆபத்து மிகுந்தவர்கள். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப் போகும்; சிறுநீர் பிரிவது குறையும்; சுவாசிக்க சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

என்ன பரிசோதனை?
நோயை உறுதி செய்ய டெங்கு என்.எஸ்.1 ஆன்டிஜன்(NS 1 Antigen), டெங்கு ஐ.ஜி.எம் (Dengue IgM), எலிசா(Elisa),ஆர்.டி பிசி.ஆர்(RT-PCR) ஆகிய பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பு உள்ளது தெரிய வரும்.

என்ன சிகிச்சை?
டெங்கு காய்ச்சலுக்கு என தனி சிகிச்சை எதுவுமில்லை. காய்ச்சலைக் குறைக்கவும், உடல் வலியைப் போக்கவும் மட்டுமே மருந்துகள் தரப்படும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிர்ச்சி நிலை ஏற்பட்டவர்களுக்கு குளுக்கோஸ் சலைன் செலுத்தப்பட  வேண்டும். அடிக்கடி ரத்த அழுத்தப் பரிசோதனையை மேற்கொண்டு, ரத்த அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் சிலருக்கு தட்டணுக்கள் மோசமாக குறைந்துவிடும். அதை ஈடுகட்ட தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்த வேண்டும். இதற்கு உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.

என்ன பாதிப்பு?
குறைப்பிரசவம் ஆகவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்புண்டு. கர்ப்பிணியிடமிருந்து சிசுவுக்குக் கிருமிகள் பரவி, பிறக்கும் போதே குழந்தைக்கு டெங்கு வரலாம். கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம். கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து வரலாம். எனவே, தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, இந்த விபரீத விளைவுகளைத் தடுப்பதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.