Sep 30, 2022
கர்ப்பகால கவனிப்பு

ப்ரக்னன்ஸி ப்ரிஸ்க்ரிப்ஷன் - சுகப்பிரசவம் இனி ஈஸி

டாக்டர் கு.கணேசன்

கர்ப்பிணிகள் என்னதான் எச்சரிக்கையுடன் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் உடலுக்குத் தொந்தரவு வந்துவிடும். அப்போது மருந்து அல்லது மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியமும் வந்து சேரும். அதே வேளையில், கர்ப்ப காலத்தில் மாத்திரையோ மருந்தோ சாப்பிட்டால், கரு கலைந்துவிடும்; குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும் எனும் எச்சரிக்கை உணர்வும் பயமுறுத்தும்.

எனவே, கர்ப்பிணிகள் எந்த மாத்திரையைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது எனும் விவரம் தெரிந்தால், இந்த அச்சம் தேவைப்படாது. அதற்கான சிறு வழிகாட்டிதான் இது. என்றாலும், இந்த மருந்துகளை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும். நீங்களாக மருந்துக்கடைகளில் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். முக்கியமாக, மாத்திரைகளின் ஜெனரிக் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது; பிராண்டுகள் சொல்லப்படவில்லை.

வாந்தி வந்தால்?

கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் ஏற்படும் மசக்கை காரணமாக குமட்டலும் வாந்தியும்தான் கர்ப்பிணிகளைப் பெரிதும் துன்பப்படுத்தும். இதற்கு டாக்ஸிலமின், பைரிடாக்சின், மெக்கிளசின் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தலாம். இவை ஓரளவுக்குப் பாதுகாப்பானவை. சாதாரண வாந்திக்கு ஆன்டன்செட்ரான் மருந்தைப் பயன்படுத்தலாம். இவை மாத்திரை மற்றும் ஊசி மருந்தாகக் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.

தடுமம், சளி, இருமல், தொண்டை கமறல் ஏற்பட்டால்?

சாதாரண தடுமத்துக்கு குளோர்பெனிரமின் மாத்திரை அல்லது திரவ மருந்து போதும். ஆவி பிடிப்பது, தலைக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது போன்ற வீட்டுச் சிகிச்சைகளில் சமாளித்துக் கொள்ளலாம். இருமல் கடுமையாக இருந்தால், டெக்ஸ்ட்ரோமெத்தார்பின் மருந்து நல்ல பலன் தரும். கியாபெனிசின் மற்றும் சீடோஎஃபிட்ரின் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 சளி பிடித்த உடனேயே ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் சளி பிடிப்பதுதான் நடைமுறை. அதற்கு ஆன்டிபயாடிக் தேவையில்லை. பாக்டீரியா காரணமாக சளி பிடிக்கும்போது மட்டுமே ஆன்டிபயாடிக் தேவைப்படும். பெனிசிலின், ஆம்பிஸிலின், அமாக்ஸிசிலின், குளாவுலனிக் ஆசிட், செபலோஸ்போரின் மருந்துகள், எரித்திரோமைசின், பிப்ரஸிலின் ஆகிய மருந்துகள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானவை.

இவற்றைத் தேவையான அளவுக்கு, தேவையான காலத்துக்கு முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். மருந்தின் அளவு குறைந்தாலும் சளி குறையாது. தேவைக்கு அதிகமாகவோ, அடிக்கடியோ எடுத்தால், அந்த மருந்துக்கு கிருமிகள் எதிர்ப்பாற்றலைப் பெற்றுவிடும். பிறகு அந்த மருந்துகள் எதிர்காலத்தில் பலன் தராது. இவற்றைவிட வீரியம் மிகுந்த மருந்துகளைத்தான் அப்போது பயன்படுத்த வேண்டியது வரும். அந்த மருந்துகளால் அதிக பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே, சளி மற்றும் தொண்டை கமறலுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவரின் மேற்பார்வையில் முறைப்படி சாப்பிட வேண்டியது முக்கியம்.

டெட்ராசைக்ளின், சிப்ரோபிளாக்சசின், ஓஃபிலாக்சசின், நார்ஃபிளாக்சசின், அமிக்கசின், டேப்ராமைசின், ஜென்டாமைசின், சல்பா மருந்துகள் ஆகியவற்றைக் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவற்றில் பல மருந்துகள் பல சமயங்களில் சாதாரணமாக அனைவருக்கும் பயன்படுத்தக்கூடியவை. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரிடம் செல்லும்போது, தாங்கள் கர்ப்பமாகி இருப்பதை முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.

உடல்வலி, தலைவலி, காய்ச்சலுக்கு என்ன மாத்திரை?

கர்ப்பகாலத்தில் உடல்வலி, தலைவலி, காய்ச்சல், தசைவலி போன்ற சாதாரண வலிகளுக்கு அஸிட்டமினோபென் மருந்து பாதுகாப்பானது. இபுபுரோஃபென், டைக்லோஃபினாக், அசிக்குளோஃபினாக், நெப்ராக்சின், பைராக்சிகம் ஆகிய மருந்துகளை மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் பாராசிட்டமால் மாத்திரை மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தலாம். ஆனால், இதை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. ஒற்றைத் தலைவலிக்கு சுமாடிரிப்டான் மாத்திரை பாதுகாப்பானது.

பொதுவாக, காய்ச்சல், உடல்வலி, தசைவலி ஆகியவை நோயின் அறிகுறிகளே தவிர அவையே நோய்கள் அல்ல. எனவே, கர்ப்பிணிக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அதற்குக் காரணம் தெரிந்து சரியான சிகிச்சையைப் பெற வேண்டும். உதாரணமாக, டைபாய்டு காரணமாக காய்ச்சல் வந்தால், அதற்குறிய ஆன்டிபயாடிக் தேவைப்படும். மலேரியா காரணமாக காய்ச்சல் என்றால் அதற்கு வேறுவகை மருந்து தேவைப்படும்.

கர்ப்பிணிகள் ஆஸ்பிரின், இன்டோமெத்தசின், கீட்டோரோலாக் ஆகிய வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ஊசிகளைத் தவிர்ப்பது நல்லது. தசைப்பிடிப்பு வலிகளுக்குத் தசைகளில் வெளிப்பக்கமாகப் பூசும் களிம்புகளைப் பயன்படுத்தினால் போதும். இந்த வலிகளைக் குறைக்க ஓய்வும் அவசியம்.

வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி வந்தால்?

வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த லோப்பிரமைடு மாத்திரையைச் சாப்பிடலாம். இத்துடன் வயிற்றுப்போக்குக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். இதுபோல் சீதபேதி என்றால், மலத்தைப் பரிசோதித்து தேவைப்படும் கிருமிக்கொல்லி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிப்ரோபிளாக்சசின், நார்ஃபிளாக்சசின், மெட்ரனிடசோல் ஆகிய மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. வயிற்றுவலிக்கு டைசைக்ளோமின் மாத்திரையைப் பயன்படுத்தலாம்.

அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு...

அலர்ஜி அல்லது ஆஸ்துமா உள்ள கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே தாங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். தேவைப்பட்டால், அந்த மருந்துகளை மாற்ற வேண்டியது வரும் அல்லது குறைத்துக்கொள்ள வேண்டியது  வரும். ஆஸ்துமாவுக்கு மாத்திரை அல்லது மருந்துகளைவிட இன்ஹேலர்கள் பாதுகாப்பானவை. அலர்ஜி உள்ளவர்கள் தங்களுக்கு எந்தப்பொருள் அலர்ஜி ஆகிறது எனத் தெரிந்துகொண்டு அந்தப் பொருளைத் தங்கள் பக்கம் வராமல் தடுத்துக்கொண்டால் மாத்திரை மற்றும் ஊசிகளை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

உயர் ரத்த அழுத்தம் இருந்தால்?

உயர்ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிகள், மகப்பேறு மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளில் பெரும்பாலானவை கருவைப் பாதிக்கக்கூடியவை. முக்கியமாக, கால்சியம் அயனிகளைத் தடை செய்யும் மாத்திரைகளும் (Calcium channel blockers) ஏ.சி.இ தடை மாத்திரைகளும்(ACE inhibitors) மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது. பொதுவாகச் சொன்னால், லெபிட்டலால் மற்றும் ஹைட்ரலசின் மருந்துகள் ரத்த அழுத்த நோயுள்ள
கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானவை.

நீரிழிவு, இதயநோய் உள்ளவர்கள் கவனிக்க!

நீரிழிவு உள்ள கர்ப்பிணிகள் கர்ப்பத்துக்கு முன்னர் சாப்பிட்ட மாத்திரைகளை நிறுத்திவிட்டு, இன்சுலின் ஊசிக்கு மாறிக்கொள்வது நல்லது அல்லது மகப்பேறு மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் ஆலோசனைப்படி மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். அதேபோல், இதயநோய்க்கும் கொழுப்பு குறைவதற்கும் மாத்திரைகளைச் சாப்பிடுபவர்கள் இதயநோய் சிறப்பு மருத்துவரின்
பரிந்துரையைப் பின்பற்ற வேண்டும்.

வலிப்பு நோய், மனநோய் உள்ளவர்கள் கவனிக்க!

இவர்கள் நரம்பியல் நிபுணரையும் மனநோய் நிபுணரையும் சந்தித்து, வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளால், கர்ப்பத்தில் சிக்கல் ஏற்படுமா, பிரசவம் ஆவதில் பாதிப்பு ஏற்படுமா போன்ற விவரங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால், அந்த மாத்திரைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். பல மாத்திரைகளுக்குப் பதிலாக ஒரே ஒரு மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது அல்லது ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் அளவைத் தற்காலிகமாகக் குறைத்துக் கொள்ளவும் முடியும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் வலிப்பு நோய்க்கும் மனநோய்க்கும் சாப்பிடும் மாத்திரைகளைத் திடீரென நிறுத்திவிடக் கூடாது. பிரசவம் முடிந்து கருத்தடை ஆபரேஷன் செய்த பிறகு, மீண்டும் ஒரு முறை மேற்சொன்ன நிபுணர்களைச் சந்தித்து தேவைப்பட்டால் பழைய மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

இரைப்பைப்புண், தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கு...

இரைப்பைப்புண் மற்றும் நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்களுக்கு சுக்ரால்பேட் திரவ மருந்து பாதுகாப்பானது. தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கு லீவோதைராக்சின் மாத்திரை பாதுகாப்பானது. கடைசியாக ஒன்று. ஆல்கஹால் கலந்த மருந்துகள், நாட்டு மருந்துகள், தூக்க மாத்திரைகள் ஆகியவற்றை கர்ப்ப காலத்தில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

(பயணம் தொடரும்)