Aug 14, 2022
கர்ப்பகால கவனிப்பு

சின்னச்சின்ன தொந்தரவுகள்

நன்றி குங்குமம் டாக்டர்

சுகப்பிரசவம் இனி ஈஸி


கர்ப்பிணிக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமஸ்டரில் ஏற்படும் பெரிய பாதிப்புகள் குறித்து கடந்த பல இதழ்களில் பார்த்துவிட்டோம். இனி இந்த இதழில் கர்ப்பிணிக்கு ஏற்படும் சின்னச்சின்ன தொந்தரவுகள் குறித்து தெரிந்துகொள்வோம்...

நெஞ்செரிச்சல்


இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக்கோட்டைக் கடந்து உணவுக்குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான் நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உணவுக்குழாயின் தசைகள் காரமான, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் அழற்சி ஏற்பட்டு நெஞ்செரிச்சல்(Heart burn) உண்டாகும்.

மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், உணவுக்குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப் போன சல்லடை வலைபோல ‘தொளதொள’ வென்று தொங்கி விடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல் நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவுக்குழாயின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். ‘அல்சர்’ எனப்படும் இரைப்பைப்புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.வயிற்றில் அதிக அழுத்தம் இருந்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உடல்பருமனாக உள்ளவர்கள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட இதுவே காரணம். வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

கர்ப்பிணிகளுக்கு புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இது உடலில் உள்ள பல தசைகளைத் தளர்த்திவிடும். அதுபோல், உணவுக்குழாய் தசைகளையும் கீழ் முனைக்கதவையும் அது தளர்வுறச் செய்வதால், நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க கர்ப்பிணிகள் உணவை சிறுசிறு இடைவெளிகளில் பிரித்துச் சாப்பிட வேண்டும். அதிக காரம், மசாலா, இனிப்பு மற்றும் வறுத்த உணவுகளைக் குறைத்து கொள்ள வேண்டும். உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மலச்சிக்கல்

நம் தவறான உணவுமுறையும், கொழுப்புமிகுந்த மேற்கத்திய உணவுகளும்தான் மலச்சிக்கலுக்கான முக்கியக் காரணிகள். பால் சார்ந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவுவகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது, காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப்பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.

கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, இரண்டாம் டிரைமஸ்டரிலிருந்து கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அதீதமாகச் சுரப்பது, ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.

அப்போது அவர்கள் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைக்குத் தண்ணீர் அருந்த வேண்டும். சின்னச்சின்ன உடற்பயிற்சிகள் அல்லது யோகா செய்யலாம். மலச்சிக்கலுக்கு சுய மருத்துவம் மேற்கொள்ளக் கூடாது. மருத்துவர் பரிந்துரைக்கும் மலமிளக்கி மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மூலம்


உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லும் சிரை ரத்தக்குழாய்களில்(Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. இவை சிரைக்குழாய்களில் ரத்தம் தேவையில்லாமல் தேங்கி நிற்பதைத் தடுக்கின்றன.

ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்குச் செல்லும் சிரைக்குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையிலேயே அமையப் பெறவில்லை. இதனால் அவற்றில் சாதாரணமாகவே புவிஈர்ப்பு விசை காரணமாக அழுத்தம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் ஏதாவது ஒரு  காரணத்தால் இந்த அழுத்தம் கொஞ்சம் அதிகமானால் கூட அவற்றில் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் மாதிரி வீங்கிவிடும். இம்மாதிரியான ரத்தக்குழாய் வீக்கத்தைத்தான் ‘மூலநோய்’(Piles) என்கிறோம்.

கர்ப்ப காலத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் ரத்தம் வழங்குவதற்காக பொதுவாகவே கர்ப்பிணியின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது ரத்தக்குழாய்கள் விரிவடையும். மேலும் குழந்தையின் எடை கர்ப்பிணியின் அடிவயிற்றை அழுத்துவதாலும், ஆசனவாயில் ரத்தக்குழாய்கள் விரிவடையும். அப்போது ரத்தம் அங்கு தேங்கிவிடும், இது மூலப்பிரச்னையை உருவாக்கும், மலச்சிக்கலுக்குச் சரியான சிகிச்சை பெறத் தவறினாலும் மூலம்
எட்டிப் பார்க்கும்.

மூலத்தைக் கட்டுப்படுத்த உணவுகளை முறைப்படுத்தி, மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டியது முதல் கட்ட சிகிச்சை. முறையான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். போதுமான ஓய்வு தேவை.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மூலம் பெரும்பாலும் தற்காலிகமானதுதான்; பிரசவத்துக்குப் பிறகு மறைந்துவிடும். மலத்தில் ரத்தப்போக்கு, ஆசனவாயில் தாங்க முடியாத அளவுக்கு எரிச்சல், வலி என மூலம் கடுமையான பாதிப்புகளைத் தருகிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து சாப்பிடுவது நல்லது. மூலத்துக்கு ‘வால் போஸ்டர்’ மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது ஆபத்து.

மூச்சிளைப்பு


மூன்றாம் டிரைமஸ்டரில் பல கர்ப்பிணிகளுக்குத் தொல்லைதரும் பிரச்னை மூச்சிளைப்பு. குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்ததும் கர்ப்பிணியின் வயிற்றை மட்டுமல்லாமல், நுரையீரல்களையும் அது அழுத்துவதால், கர்ப்பிணிக்கு மிகச்சிறிய அளவில் மூச்சுத்திணறல் ஏற்படும்.

மூச்சுப்பயிற்சிகள் மூலம் இதை ஓரளவு கட்டுப்படுத்தி விடலாம். உறங்கும்போது சிறிய தலையணையைத் தோள்பட்டைக்கு அடியில்வைத்துக் கொண்டால் மூச்சுத்திணறல் குறையும், காற்றோட்டமான இடத்தில் உறங்க வேண்டியது முக்கியம். முகத்துக்கு நேராக காற்றாடி சுழல்வதைத் தவிர்க்க வேண்டும்.

முதுகுவலி


மூன்றாம் டிரைமஸ்டரில் குழந்தை முழு வளர்ச்சியை நெருங்குவதால் கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிக்கிறது. கர்ப்பிணியின் வயிறு முன்னோக்கித் தள்ளப்படுகிறது. இவற்றால் இடுப்பில் உள்ள தசைகள் சற்றே விரிந்து தளர்வடைகின்றன.

இதனால் முதுகுவலி ஏற்படுகிறது. உட்காரும்போது நேராக உட்காருவது, நாற்காலியில் உட்காரும்போது, முதுகுக்குத் தலையணை வைத்துக் கொள்வது, உறங்கும்போது, கால்களுக்கு இடையில் மெல்லிய தலையணையை வைத்துக்கொள்வது, ஹைஹீல்ஸ் காலணிகளைத் தவிர்ப்பது போன்றவற்றால் முதுகுவலியைக் குறைத்துக் கொள்ள முடியும்.

உடல்சோர்வு

மூன்றாம் டிரைமஸ்டரில் கர்ப்பிணிக்கு உடல் சிறிது சோர்வாக இருக்கும். இதற்கு உடல் எடை அதிகரிப்பது, இரவு உறக்கம் கெடுவது என பல காரணங்கள் உண்டு. முக்கியக் காரணம், பிரசவத் தேதி நெருங்குவதால் ஏற்படும் மனப்பதற்றம்தான். ஆரோக்கிய உணவு, தேவையான உடற்பயிற்சிகள், போதிய ஓய்வு, நல்ல இசை கேட்பது, புத்தகம்  படிப்பது போன்ற மனதுக்கு  உற்சாகம் தரும் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் உடல் சோர்வை விரட்டி விட முடியும்.

விரிசுருள் ரத்தக்குழாய் நோய்


கால்களில் அசுத்த ரத்தக் குழாய்கள் விரிந்தும் சுருண்டும் காணப்படுவதை ‘வேரிகோஸ் வெய்ன்ஸ்’ (Varicose veins)- அதாவது விரிசுருள் ரத்தக்குழாய் நோய்  என்கிறோம். இது கர்ப்ப காலத்தில் புதிதாகவும் ஏற்படலாம்.

 ஏற்கனவே உள்ளவர்களுக்கு இது அதிகப்படலாம். குறிப்பாக, மூன்றாம் டிரைமஸ்டரில் குழந்தையின் எடை அதிகமாக இருந்து, கர்ப்பிணியின் அடிவயிற்றை அதிகமாக அழுத்தும்போது, வயிற்றுக்குக் கீழுள்ள அசுத்த ரத்தக்குழாய்களும் அழுத்தப்படுகின்றன. இதன் விளைவால் ஏற்படுவதுதான் விரிசுருள் ரத்தக்குழாய் நோய். இதுவும் தற்காலிகமானதுதான். பிரசவத்துக்குப் பிறகு மறைந்து விடும்.

அதிக நேரம் கால்களைத் தொங்கப்போடுவதைத் தவிர்ப்பது, ‘ஸ்டாக்கிங்ஸ்’ எனப்படும் கால் மீளுறைகளை அணிந்துகொள்வது, அமரும்போது இடுப்பு உயரத்துக்குக் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்வது, உறங்கும்போது கால் பாதங்களை அரை அடி உயரத்துக்குத் தூக்கி வைத்துக் கொள்வது போன்றவற்றால், ஓரளவு இதைக் கட்டுப்படுத்தலாம்.

( பயணம் தொடரும் )