Jan 30, 2023
சுயத்தொழில்

தமிழ் மொழியில் வீட்டை அலங்கரிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

விருதுநகரைச் சேர்ந்தவர் பிரியங்கா ராமன். பொறியியல் பட்டதாரியான இவர், கலை மீது இருக்கும் ஆர்வத்தில், தன் ஐடி வேலையை உதறி இப்போது அழகு தமிழில் பாரதியாரின் கவிதைகள், ஆத்திச்சூடி என பல நீதி நூல்களில் இருக்கும் தமிழ் பழமொழிகளை அழகிய எழுத்துருவில் எழுதி அதை கஸ்டமைஸ்டு பரிசுகளாகவும், ரிட்டன் கிஃப்ட்களாகவும், பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கொடுக்கும் பண்டிகைகால பரிசாகவும் மாற்றி தன் தொழிலை விரிவுப்படுத்தி வருகிறார்.

அவரிடம் அடுத்து வரும் தீபாவளி, கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகால திட்டங்கள் பற்றி பேசினோம். ”சிறுவயதில் இருந்தே எனக்கு கலையில் ஆர்வம் இருந்தாலும், திருமணத்திற்கு பின் என் கணவர் கொடுத்த ஆதரவால், என்னால் அதில் மீண்டும் கவனம் செலுத்த முடிந்தது. நானே வீட்டில் கிடைக்கும் நேரத்தில் கேலியோகிராஃபி கற்று பெயிண்டிங்கும் செய்து வந்தேன். இதை கவனித்த என் கணவர் தான் என்னை இதில் முழு நேரம் கவனம் செலுத்த ஊக்குவித்தார். ஐ.டி வேலையை விட்டு, புதிதாக கலை சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம் என முடிவு செய்தேன். ஆனாலும் எனக்குள் ஒரு தயக்கம் இருந்து வந்தது. அந்த சமயத்தில் தான் தமிழக அரசு சார்பாக ஒரு போட்டி நடைபெற்றது.

அதில் கலைஞர்கள் தங்களுக்கு விருப்பமான கலையில் பங்குபெற்று போட்டியிட முடியும். நான் எனக்கு மிகவும் பிடித்த முரல் ஓவியம் வரைந்தேன். அதற்காக எனக்கு ‘நெக்ஸ்ட் ஜென்’ எனும் விருது கொடுத்தாங்க. சரியாக என்னுடைய சிறு தொழிலை ஆரம்பிப்பதற்கு முன் இந்த விருது கிடைத்ததால் எனக்குள் நல்ல உத்வேகமும் நம்பிக்கையும் பிறந்தது. இன்ஸ்டாகிராமை எனக்கான மார்கெட்டாக கொண்டு தி லிட்டில் ஹாண்மேட் ஸ்டோர் (The_little_Handmade_Store ) எனும் பக்கத்தை ஆரம்பித்தேன்.

மரப்பலகையில் ஆங்கிலத்தில் தான் முதலில் பெயர்களும் பழமொழிகளும் எழுதி வந்தேன். ஆனால் இப்போது பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரும் தமிழ் மொழியில் வீட்டு அலங்காரங்களை விரும்புவதால், நானும் தமிழில் பெயர்பலகைகள், பழமொழிகள், ஆத்திச்சூடி, வடிவேலு காமெடி லைன்கள் என வெரைட்டியாக பொருட்கள் செய்தேன். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெயர்பலகைகள், பழமொழிகளை தாண்டி கீ ஹோல்டர்ஸ், ஃப்ரிட்ஜ் மேக்நெட்ஸ் மற்றும் வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற அலங்காரங்களையும் செய்து கொடுக்கிறேன். அதாவது சமையலறை என்றால் அது சம்பந்தமான தீமில் தமிழிலோ ஆங்கிலத்திலோ கோட்ஸ் இருக்கும். அதே போல குழந்தைகள் அறை, தோட்டம் என வீட்டின் ஒவ்வொரு மூளையையும் கூட வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப டிசைன் செய்து கொடுப்பேன்.

இதை தவிர கமர்ஷியல் இடங்களான உணவகங்கள், கஃபே, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என பலதரப்பட்ட துறையிலும் மரப்பலகையில் அலங்காரங்கள் செய்து கொடுத்திருக்கிறேன். வாடிக்கையாளர்கள் பலரும், ஒவ்வொரு நாளும் என் வீட்டில் நீங்கள் செய்து கொடுத்த இந்த பெயர் பலகையை அல்லது அலங்கார பலகையை பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது, சந்தோஷமாக இருக்கிறது என்பார்கள். அதுவே எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை கொடுக்கும்.

என்னுடைய பொருட்கள் எல்லாமே கொஞ்சம் பட்ஜெட்டிற்குள் இருப்பதால் பலரும் என்னிடமிருந்து ரிட்டர்ன் கிஃப்ட் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு நம் பண்டிகைகள் மீதும் தமிழ் மொழி மீதும் ஒரு தனி ஆசை இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்கா, மலேசியா, கனடா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். அதற்கு ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கும் போது அது நம் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனால் இங்கு தமிழ்நாட்டில் விருதுநகரில் இருக்கும் என்னிடம் ரிட்டர்ன் கிஃப்ட் செய்ய சொல்லி கேட்டு வாங்குகிறார்கள்.

கீ ஹோல்டர்ஸ் ஐம்பது ரூபாயில் இருந்து தொடங்குகிறது, பெயர் பலகைகள் எல்லாம் 300 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. கேட்கும் நேரத்தில் கஸ்டமைஸ்ட் ஆர்டர்கள் செய்து கொடுப்பதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து என்னிடம் வாங்குகிறார்கள். பல பிரபலங்களும் கூட என்னிடம் ரிட்டர்ன் கிஃப்ட் வாங்கி அதை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதால், எனக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறது.

அடுத்ததாக தீபாவளியை தொடர்ந்து கார்த்திகை தீபத்திற்கும் விளக்கு ஹோல்டர்கள் செய்து வருகிறேன். பல தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு பண்டிகை கால பரிசாக இந்த தீபாவளி தீம் ரிட்டர்ன் கிஃப்ட்ஸை ஆர்டர் கொடுத்துள்ளனர். இதை தாண்டி கஸ்டமைஸ்டு ஆர்டர்களும் எடுக்கிறோம்” என்கிறார் பிரியங்கா. இன்ஸ்டாகிராமில் சுமார் 10,000 ஃபாலோவர்சை கொண்டுள்ள பிரியங்கா இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்டர்களை செய்து கொடுத்துள்ளார்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்