Jul 26, 2021
சிறப்பு கட்டுரைகள்

கமகமக்கும் வேளச்சேரி… சைகையில் வரவேற்று உபசரிக்கும் பெண்கள்

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையை கடக்கும் ஒவ்வொருவரும் அந்த கமகமக்கும் வாசனை வரும் திசையினை ஒரு முறையாவது திரும்பிப் பார்க்காமல் கடந்து இருக்கமாட்டார்கள். அந்த வாசனை அந்த சாலையில் உள்ள ஒரு டிபன் கடையில் இருந்து வெண்புகையுடன் வருகிறது என்று தெரியும். டிபன் கடைக்குள் நுழைந்தபோது, எதிரே 2 பெண்கள் சைகையால் உள்ளே வரவேற்றனர். அங்கு சாப்பிட வந்தவர்கள் அனைவரும் சைகையால் டிபன் வகைகளை ஆர்டர் செய்ய, அவர்களும் புரிந்துகொண்டு தலையசைத்து ஆர்டர் செய்த உணவான இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை சைடு-டிஷ்களுடன் சுடச்சுட டேபிளுக்கு கொண்டு வருகின்றனர்.

அவர்களைப்பற்றி விசாரித்தபோது, அந்த 2 பெண்களும் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரத்னம், பிரமிளா என்பதும், இவர்களுக்கு காது கேட்காது, வாய் பேச வராது. ஆனால், இருவரும் சமையலில் எக்ஸ்பர்ட் எனத் தெரியவந்தது. இவர்களைக் குறித்து பட்டினப்பாக்கத்தில் உள்ள காது கேளாதோர் அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கும் சித்ரா  பேச துவங்கினார். ‘‘நான் இங்கு இந்த 2 பெண்களுக்கும் சைகை மொழி பெயர்ப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். கடந்த ஆண்டு துவக்கத்தில் பிழைப்புக்காக சென்னை வந்த ரத்னமும் பிரமிளாவும் எங்கள் சங்கத்துக்கு வந்து, தங்களுக்கு நன்றாக சமைக்கத் தெரியும்.

எங்களின் பிழைப்புக்கு உதவி செய்யும்படி கேட்டனர். அவர்களை மாற்றுத் திறனாளிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் பிரபாகரன், கற்பகம் ஆகியோரிடம் அழைத்துச் சென்றேன். அவர்களின் ஆலோசனைப்படி நாங்கள் 3 பேரும் சேலம் ஆர்.ஆர். பிரியாணி உணவகத்தின் அதிபர் தமிழ்ச்செல்வனை சந்தித்து பேசினோம். தள்ளுவண்டி அமைத்துக்  கொடுத்தால் போதும் என்றவர்களிடம்... அவர் ‘தள்ளு வண்டி வேண்டாம்… அதற்கான கஷ்டங்கள் என்னவென்று எனக்கு தெரியும். எங்கள் உணவகத்தின் கிளை ஒன்றில் டிபன் கடைக்கான இடம் உள்ளது. மேலும் சமையலுக்கான பாத்திரங்களும் இருப்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றார்.

கடந்த ஜூலை மாதம் முதல் இருவரும் இங்கு டிபன் கடையைத் துவங்கி நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 10 மணிவரை இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி போன்ற டிபன் வகைகளும், மாலை 5 முதல் 9 மணிவரை இட்லி, தோசையுடன் பரோட்டா, ஃபிரைடு ரைஸ் வகைகளையும் தரமாக தயாரித்து, நியாயமான விலையில் வழங்கி வருகின்றனர். தற்போது இக்கடையில் அவர்களைப் போலவே மேலும் 7 மாற்றுத்திறனாளி பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு குறித்து செஃப் வினோத்ப் பயிற்சியினை அளித்து வருகிறார்.

என்னைப் பொறுத்தவரை, காது கேளாதோர் பேசுறதை மொழிபெயர்த்து கடந்து போறதை விட, அவர்களுடனே இருந்து உதவுறதுதான் சிறப்பு. ஒரு சைகை மொழி பெயர்ப்பாளராக மட்டுமின்றி, இவர்களை போன்ற இன்னும் பலருக்கு என்னால் முடிந்த உதவியினை செய்துவருகிறேன். காது கேளாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அவர்களுக்கான பயிற்சி தொடர்பாகவோ, வேலைவாய்ப்பு தொடர்பாகவோ என்றென்றும் உதவி செய்ய நான் தயார்!” என்றார் சித்ரா.