Jul 26, 2021
சிறப்பு கட்டுரைகள்

உலக வர்த்தக சபையின் முதல் பெண் தலைவர்!

நன்றி குங்குமம் தோழி

நைஜீரியாவைச் சேர்ந்த கோஸி ஒகேஞ்சோ இவியாலா (Ngozi Okonjo-Iweala) உலக வர்த்தக சபையின் தலைவராக (World Trade Organization) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 66 வயதான அவர் மார்ச் 1-ஆம் தேதி முறைப்படி உலக வர்த்தக சபையின் தலைவராக பதவியேற்க உள்ளார். அன்றைய தேதியில் இருந்து அப்பதவியில் நான்கு ஆண்டுகள் பணியாற்ற உள்ளார்.

உலக வர்த்தக சபையில் உறுப்பினர்களாக இருக்கும் 164 நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் ஒருமித்த ஆதரவை கோஸி ஒகேஞ்சோ இவியாலாவுக்கு தெரிவித்துள்ளனர். இதன்மூலம், உலக வர்த்தக சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண், முதல் ஆப்பிரிக்கர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை குடியுரிமையையும் வைத்திருப்பதால் உலக வர்த்தக சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் அமெரிக்கர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். கொரோனா வைரஸால் உலகளவில் மிகப்பெரிய பொருளாதார சரிவு நீடித்து வருகிறது. உலகமயமாக்கம் மற்றும் முதலாளித்துவத்துக்கு ஆதரவாக உலக வர்த்தக நிறுவனத்தின் செயல்பாடுகள் இருப்பதாக வளரும் நாடுகள் தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.

இத்தகைய சவாலான சூழ்நிலையில், உலகின் மிகப்பெரிய அமைப்பின் தலைமை பொறுப்பை கோஸி ஒகேஞ்சோ ஏற்றுள்ளார். இதுகுறித்து பேசிய ஒகேஞ்சோ, “கொரோனா வைரஸ் தொற்றுகளினால் ஏற்பட்ட விளைவுகளில் முழு கவனத்தையும் செலுத்துவேன். குறிப்பாக பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா தடுப்பூசிகள் அனைத்து நாடுகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்காக தடைகளாக இருக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்படும். தடுப்பூசிகள் தயாரிப்பை பல நாடுகளில் தயாரிக்க உலக வர்த்தக அமைப்பு ஊக்குவிக்கும்.  

அதேவேளையில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் இருக்கும் ஏற்றுமதி கட்டணங்கள் மற்றும் வர்த்தக தடைகளை நீக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்த கோஸி ஓகேஞ்சோ இவியாலா பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

நைஜீரியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பதவி வகித்த அவர், அந்த பதவியில் தொடர்ந்து 2 முறை இருந்தவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். அதன்படி 2003 முதல் 2006 வரை 3 ஆண்டுகளும், 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளும் நைஜீரியாவின் நிதியமைச்சராக இருந்தார். அந்நாட்டின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அந்த பதவியில் சுமார் 2 மாதங்கள் மட்டுமே இருந்தார்.

அவரின் திறமையான நடவடிக்கையால் நைஜீரியாவின் கடன் குறைந்தது.உலக வங்கியுடனும் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள கோஸி ஒகேஞ்சோ இவியாலா, அதன் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அவருடைய பணிக்காலத்தில் 181 பில்லியன் டாலர் நிதியை பல்வேறு திட்டங்களுக்காக கையாண்டிருக்கிறார்.

GAVI (Global Alliance for Vaccines and Immunisation) எனப்படும் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்புக்கான உலகளாவிய கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றி, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு சாதனங்கள் அதிகளவு சென்று சேர காரணமாகவும் இருந்துள்ளார். இத்தகைய அனுபவங்களை கொண்ட கோஸி ஒகேஞ்சோ இவியாலா, உலக வர்த்தக சபையின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றுவார் என நம்பலாம்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்