Jul 26, 2021
சிறப்பு கட்டுரைகள்

பெண் வலிமையானவள்…

நன்றி குங்குமம் தோழி

‘மானுனு நினச்சு வேட்டை ஆடிட்ட... ஆனா மானும் வேட்டை ஆடும்...’ என்கிற வசனம், சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘வதம்’ என்ற தமிழ் வெப் சீரிஸில் இடம்பெற்றிருந்தது. வசனத்தின் மைய கருவே இந்த வெப் சீரிஸ். அதாவது பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள், வழக்கமாக ஆண் காவலர்களை நாயக பிம்பமாக்கி அதற்கான தீர்வுகளை காண முனைந்திருக்கும் இதுவரை பார்த்த திரைப்படங்கள். ஆனால், முழுக்க முழுக்க பெண் காவலர்களை கொண்டு அதை அந்த பெண்களாலே எதிர்கொண்டு அதற்கான தீர்வு காணும் படியாக அமைத்திருக்கும் இந்த வெப் சீரிஸின் இயக்குநர் வெங்கடேஷ் பாபு, இந்த கோணத்தில் வெப் சீரிஸ் எடுக்கக் காரணம் மற்றும் இதில் பணிபுரிந்த அனுபவங்களை
பகிர்ந்து கொண்டார்.

“பத்து வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். அதில் நான் வேலை செய்த படங்கள் போலீஸை மையமாக கொண்ட ‘சிங்கம் 3’, ‘தனி ஒருவன்’. இது ஒரு காரணம். மற்றொன்று என்னுடைய அம்மா முப்பது வருஷமா ஜுடிஷரியில் இருந்திருக்காங்க. சிறு வயதிலிருந்தே கோர்ட், போலீஸ், லாயர்ஸ் என எல்லாமே பரிட்சயமான களம்.

எனவே அந்த களத்தை பெரிசா எக்ஸ்போஸ் பண்ண வேண்டுமென்கிற ஒரு விஷயம். இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் நான் வளர்ந்த சூழல்… என் பாட்டியிலிருந்து அம்மா, மனைவி, தங்கை, மகள் என எல்லோருமே ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங். இவர்களைப் போல் எனக்கு அமைந்த பெண் தோழிகளும் அப்படியே. இவங்க சாலையில் போகும் போது யாராவது கை பிடிச்சு இழுத்தா ஆணான நான் தான் காப்பாற்ற வேண்டுமென்பதில்லை. அவங்களே திருப்பி அடிப்பாங்க.

ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதி, பாலியல் சீண்டல்கள் போன்ற விஷயங்களிலிருந்து ஆண்கள் தான் போய் காப்பாற்றணும்னு கிடையாது. அவர்களே வலிமையானவர்கள். அவர்களால் எதிர்த்து நிற்க முடியும் என்று எப்போதுமே உணர்கிறேன். இது போன்ற விஷயங்களை ஏன் யாருமே காண்பிக்கவில்லை என்று உள்ளுக்குள் இருந்தது. நிறைய போலீஸ் கதை பார்த்திருக்கிறோம். அது எல்லாம் ஆண்களை முன்னிலைப்படுத்தியிருக்கும். ஆனால், பெண் போலீஸும் இருக்கிறார்கள்.

அவர்களும் பல சவால்களான விஷயங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை ஏன் நாம் ஏற்றுக் கொள்வதில்லை? இதன் அடிப்படையில், ஒரு பெண்ணுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை வழக்கை கையில் எடுத்து, பல சமூக அதிகார அழுத்தங்களை கடந்து அதற்கான தீர்வினை எவ்வாறு காண்கிறார்கள் என்பதை  சொல்லி இருக்கிறோம். குறிப்பாக இதுவரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை இதுவரை யாரும் காட்டியதில்லை என்று நினைக்கிறேன். இதன் களமே அதுதான்” என்று கூறும் வெங்கடேஷ் பாபு, என்னதான் பெண்கள் உயர் பொறுப்புகளில் வெளியே வேலைக்கு வந்தாலும் வீட்டில் அவர்களுக்கு இருக்கும் அழுத்தங்கள் இன்னும் குறையவில்லை என்கிறார்.

“பொதுவாக ஆண்கள் வெளியே வேலைக்கு சென்றால் அங்கு மட்டும்தான் அவர்களுக்கான வேலை இருக்கிறது. ஆனால், ஒரு பெண் வேலைக்கு சென்றாலும் மறுபடியும் வீட்டிற்கு வந்து வழக்கமான வீட்டு வேலைகளை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இன்று ஒரு சில வீடுகளில் வேலைகளை பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும், அது சொற்பமே. இந்த கதையிலும் இதை இணைத்திருப்பேன்.

வீட்டிலும் வேலை செய்து கொண்டு, அடுத்து காவல் நிலையத்திலும் மேலிடம், அரசியல் போன்ற நிறைய அழுத்தங்களை சமாளித்து, நியாயத்தை தட்டிக் கேட்க முடியாத சூழலையும் மீறி நல்லது செய்ய வேண்டும் என்று நான்கு பெண் காவலர்கள் கதாபாத்திரத்தினை வடிவமைத்தோம். ஒரு வலிமையான விஷயத்தை பெண் தான் பண்ண வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்” என்று கூறும் வெங்கடேஷ் பாபு, இந்த வெப் சீரிஸில் இடை இடையே சமகால அரசியலையும் தொட்டுள்ளார்.

“தினமும் செய்தித் தாள்கள் படிக்கிறோம், நாட்டு நடப்புகள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறோம். ஒவ்வொரு கலைஞனும் கண்ணாடி மாதிரிதானே. நடக்கும் எல்லாவற்றையும் எவ்வளவு சுவாரசியமாக, எதார்த்தமாக பிரதிபலிக்க முடியும்னு கொஞ்சம் முயன்று பார்க்கிறேன். நிறைய விஷயங்கள் தொட்டிருந்தாலும் இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் விஷயங்களை முன் வைத்திருக்கிறோம்.

ஏனெனில், இங்கு ஒரு பெண் பாதிக்கப்பட்டு புகார் அளிக்க சென்றால், குற்றவாளியை விட்டு; புகார் அளித்த பெண்ணை குற்றவாளியாக சித்தரிக்கும் சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் சிஸ்டமும் அவ்வாறுதான் இருக்கிறது. இது போன்ற வழக்குகளை கண்ணியத்தோடும், கரிசனத்தோடும் அணுக வேண்டுகோள் விடுக்கிறோம். என் அனுபவத்தில் நிறைய நல்ல போலீஸ் ஆபீசர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்களை சுற்றி இருப்பவர்களும் அவ்வாறு இருக்க ஆசைப்படுகிறோம்.

இதில் இளமாரன் என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர், உண்மையிலேயே அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். என் நெருங்கிய நண்பர். அவரிடம் கதை சொன்ன போது, பிடித்து போக, எனக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். இவர் மூலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருக்கும் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் பயிற்சியும் அளித்தார். அவர் கொடுத்த பயிற்சியில்... ஒரு நாள் ஷூட் முடிச்சுட்டு அடுத்த லொக்கேஷன் போயிட்டு இருந்தோம். அப்போது முன் இருக்கையில் ரமணி இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் அமர்ந்திருந்தார்.

அவர் உண்மையான போலீஸ் என்று நினைத்து டோல்கேட்டில் உள்ளவர்கள் அவருக்கு சல்யூட் அடிச்சாங்க” என்று கூறும் வெங்கடேஷ் பாபு, ஓ.டி.டி தளங்களில் உள்ள சவால்கள் பற்றி பேசினார். ‘‘ஒரு சினிமாவை வெளியிடுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஓ.டி.டி தளம் என்பது பெரிய கடல். அதில் நீந்தி முத்தெடுப்பது அவ்வளவு சுலபமில்லை. ரொம்பவே கஷ்டமான விஷயம். ஒரு கதையை திரைக்கதை வடிவமாகுவதற்கே நேரம் அதிகம் செலவிடவேண்டும். அந்த கால நேரத்தில் ஒரு படமே எடுத்துவிடலாம்.

அதனோடு, படக்குழுவினரோடு தயாரிப்பு குழுவையும் கையாள வேண்டியிருக்கும். புதிதாக வருபவர்கள், ஓ.டி.டி தளம் எளிதுன்னு நினச்சுட்டு இருக்காங்க. ஆனால், இதை கையாள அனுபவம் அவசியம். இன்னும் சொல்லப் போனால் கொரோனாவிற்கு பிறகு தான் ஓடிடி-க்கு ஒரு பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது.

இப்போது இதிலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பதாக சொல்கிறார்கள். அப்படி வரும் போது நல்ல கதைகளை கேட்பதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயமும் இருக்கிறது. ஒரு விஷயத்தை பார்க்கவும், பார்க்கக் கூடாது என்று முடிவு செய்வது அவரவர் கையில் இருக்கிறது. நம் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்கப் போவதில்லை” என்று கூறும் வெங்கடேஷ் பாபு, தன் குழுவினரை அறிமுகம் செய்தார். ‘‘கிருஷ்ணன் வசந்த் ஏற்கனவே ஐந்து படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அற்புதமான ஒளிப்பதிவாளர்.

கோ டைரக்டர் மணி பாஸ்கர் 25 வருட சினிமா அனுபவம் கொண்டவர். டயலாக் ரைட்டர் பாஸ்கர் தனி ஒருவன், ஜில்லா போன்ற படங்களுக்கு டயலாக் எழுதியவர். எடிட்டர் மணிகண்டன், மனிதன், என்றென்றும் புன்னகை போன்ற படங்கள் செய்தவர். இசையமைப்பாளர் பிரித்விக் ஏ.ஆர்.ரஹ்மான் உதவியாளர். ஸ்டண்ட் டைரக்டர் பி.சி., நடிகைகள் ஸ்ருதி ஹரிகரன், அஷ்வதி, பிரித்திக்‌ஷா, செம்மலர் அன்னம்... மற்ற நடிகர்கள் எல்லோருமே  ‘வதத்தின்’ பலம்” என்கிறார் இயக்குநர் வெங்கடேஷ் பாபு.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்