Jul 26, 2021
சிறப்பு கட்டுரைகள்

படிப்பு சாலையாக மாறிய மாட்டுக் கொட்டகை!

நன்றி குங்குமம் தோழி

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் சோனல் ஷர்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சோனலின் தந்தை, வீட்டில் மாட்டுப் பண்ணை நடத்தி, பால் விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். எனவே சோனலின் பெரும்பாலான நாட்கள் மாட்டுக் கொட்டகையிலேயே கழிந்தது. பால் கறப்பது, சாணம் அள்ளுதல், வீடு வீடாகப் பாலை சைக்கிளில் விநியோகம் செய்வது போன்ற பணிகளோடு தனது படிப்பிலும் கவனம் செலுத்தியவராக இருந்துள்ளார் சோனல். இப்படியாக அவரின் பள்ளி, கல்லூரி காலங்கள் கடந்தன. சோனலின் மீது எப்போதும் மாட்டுக் கொட்டகையின் வாசமும், செருப்பில் மாட்டுச் சாணத்தின் சுவடுகளும் காணப்பட்டதால், சக மாணவர்களின் கேலி கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்.

‘‘பெரும்பாலும், நான் அணியும் செருப்புகளில் மாட்டுச் சாணம் எங்காவது மூலையில் இருக்கும். பள்ளியில் படிக்கும் போது, ஒரு பால்காரரின் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதை என் தோழிகளிடம் சொல்ல வெட்கப்பட்டேன். ஆனால், இப்போது என் பெற்றோரைப் பற்றி பெருமைப்படுகிறேன்” என்கிறார் சோனல்.   

அப்பாவிற்கு உறுதுணையாக இருந்ததோடு, படிப்பிலும் கெட்டிக் காரியாக இருந்த சோனல், பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். சிறு வயதிலிருந்தே அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட சோனல், உயர் கல்வி செல்லும் சமயத்தில் மனம் மாற்றம் கொண்டுள்ளார். அதாவது சமூகத்துடன் சேர்ந்து பணியாற்ற விரும்பியுள்ளார். இதனால் சட்டப்படிப்பை தேர்வு செய்து படிக்க ஆரம்பித்துள்ளார். சட்டப் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்க ஆரம்பித்தார்.

இதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பார்கள். அவர்களிடம் பரிச்சயமாகக் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையே தனது கடின உழைப்பால் பி.ஏ.பி.எல். எல்.எல்.பி ஆகிய படிப்புகளில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் ராஜஸ்தான் ஜூடிஷியல் சர்வீஸ் தேர்வில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தேர்வின் முதல் முயற்சியில் மூன்று புள்ளி குறைவாக இருந்ததால் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டார். எனவே, அடுத்த ஆண்டு மீண்டும் தேர்வெழுத முயற்சி செய்தார். இந்த முறையும் ஒரு புள்ளி குறைவானதால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். எனினும் தன்னம்பிக்கையைத் தளரவிடாத அவர் பொறுமையுடன் காத்திருந்தார். அதன் பயனாக அதிர்ஷ்டம் அவரை தேடி வந்தது.

ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலர் நேர்காணலுக்கு வருகை தரவில்லை. ஆகவே, காத்திருப்போர் பட்டியலில் இருப்போரை உடனே தேர்வு செய்யும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஏழ்மையில் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்த சோனல், ராஜஸ்தான் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

தேர்வில் கவனம் செலுத்தியவர் அதற்காக எந்த ஒரு தனி பயிற்சிக்கோ, வகுப்புகளுக்கோ செல்லவில்லை. விலை உயர்ந்த புத்தகங்களை வாங்க முடியாததால், தனது சைக்கிளிலேயே கல்லூரிக்கு சென்று மணிக்கணக்கில் நூலகத்தில் நேரத்தை செலவழித்துள்ளார்.

“எனக்கு சிறந்த கல்வியை வழங்க என் பெற்றோர் கடுமையாக உழைத்துள்ளனர். எனக்கு கல்வி கற்பதற்கான செலவுகளைச் சமாளிக்க என் தந்தை ஏராளமான கடன்களை பெற்றார். ஆனால், அது சுமையாக இருக்கிறது என்று ஒரு போதும் என்னிடம் புலம்பியது இல்லை. இப்போது நான் அவர்களுக்கு ஒரு வசதியான வாழ்க்கையை வழங்க முடியும்” என்று சோனல் தெரிவித்துள்ளார்.மாட்டுக் கொட்டகையில் தகரப் பெட்டிகளை மேஜையாக்கியப் படித்தவர், இன்றைக்கு ஜனநாயகத்தின் முதல் தூண்எனப்படும் சட்டத்திற்கு நீதிபதியாகிஇருக்கிறார்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்