Sep 28, 2022
சிறப்பு கட்டுரைகள்

ஆளுமைப் பெண்கள்!

நன்றி குங்குமம் தோழி

தொழில்முனைவோர் சாந்தி பிரின்ஸ்

மறைந்த மாமனிதர் அப்துல் கலாம், ஜனாதிபதியாக பதவி காலத்தில் இருந்த போது, தென் கொரியாவுக்கு ஒரு முறை சென்றுள்ளார். அங்கு தென்னிந்திய உணவகத்திற்கு சென்றவர், அங்குள்ள உணவினை மிகவும் விரும்பி ருசித்தார், ‘‘இங்கு யார் இவ்வளவு அற்புதமாக அமுதம் படைக்கிறார்கள்?’’ என வியந்தார். அப்போது அவருக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் தான் சாந்தி பிரின்ஸ். பின்னர் சாந்தியை வரவழைத்து நேரில் பாராட்டு தெரிவித்தார் கலாம். அது மட்டுமன்றி சில ஆண்டுகளுக்குப் பின்  மீண்டும் தென் கொரியா சென்ற போது, அதே உணவகத்தை நினைவுக்கூர்ந்து, உணவினை மீண்டும் வரவழைத்து சாப்பிட்டார்.

வியாபாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தென் கொரியா செல்பவர்கள் பலருக்கும், அங்கு சென்ற சில மணி நேரத்திலேயே இதென்ன.. சென்னையிலா இருக்கிறோம் எனும் நினைப்பு நிச்சயம் ஏற்படும். அப்படி அந்நாட்டில் தமிழ் ஊடுருவி இருப்பதில் சாந்தியின் பங்களிப்பு போற்றத்தக்கது.

20 ஆண்டுகளால் தென் கொரியாவில் தனக்கென்று ஒரு தொழிலை துவங்கி அதில் ஆளுமை செலுத்தி வருகிறார் சாந்தி பிரின்ஸ்.  ‘‘சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். எங்க குடும்பம் சாதாரண நடுத்தர குடும்பம். என்னுடன் கூட பிறந்தவர்கள் மூன்று பேர். நான் தான் மூத்த பெண். எங்க குடும்பத்தில் யாருக்கும் வியாபாரம் சார்ந்த அனுபவம் கிடையாது மற்றும் அதில் ஈடுபடவும் இல்லை. எங்க தலைமுறையில் வியாபாரத்தில் அடியெடுத்து வைத்த முதல் பெண் நான் தான்.

கல்லூரியில் இரண்டு முதுகலைப்பட்டம் பெற்றேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதலாம்னு அதற்கான பயிற்சி எடுத்தேன். ஆனால் என்னால் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை. சரி வேறு வேலையில் சேரலாம்னு விண்ணப்பித்துக் கொண்டு இருந்த சமயத்தில் தான் பிரின்சின் அறிமுகம் கிடைத்தது. நட்பு, காதலாகி... எங்க இருவருக்கும் 1997ம் ஆண்டு திருமணமானது.

அவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். அவரிடம் தான் வியாபாரம் என்றால் என்ன? என்று தெரிந்து கொண்டேன். அவருடன் பயணிக்க ஆரம்பித்த நாட்கள் முதல் எனக்கு வர்த்தகத்தில் நாட்டம் ஏற்பட்டது. எனது ஆர்வத்தை புரிந்து கொண்டவர், தொழில் யுத்திகள்,  நுணுக்கங்கள் பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்தார். ஒரு வியாபாரம் நஷ்டத்தில் தள்ளப்படுவதை தவிர்த்து, அதை லாபகரமாக எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை அவரிடம் தான் கற்றுக் கொண்டேன்’’ என்றவர் கணவரின் ெதாழில் காரணமாக தென்கொரியாவில் குடிபெயர்ந்துள்ளார்.

‘‘திருமணமாகி நான்கு ஆண்டுகளில் நாங்க குடும்பத்துடன் கொரியாவில் செட்டிலாயிட்டோம். எனக்கு இரண்டு மகள்கள். இருவரும் அமெரிக்கா, கனடா நாடுகளில் தற்போது உயர் கல்வி படிக்கின்றனர். அவர்கள் சிறியவர்களாக இருந்த வரை அவர்களை பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.

அவர்கள் வளர்ந்து பள்ளிக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. நேரத்தை வீணடிக்கிறோமோன்னு தோன்றியது. எனக்கு தெரிந்த விஷயத்தைக் கொண்டு ஒரு தொழில் செய்யலாம்னு முடிவு செய்தேன். கணவரிடம் பேசிய போது, அவரும் என் தோள் தட்டி ஊக்கமளித்தார். அப்படித்தான் ‘சக்ரா இந்திய உணவகம்’ என்ற பெயரில் தென் கொரியா தலைநகரான சியோலில் 2001ல் ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில் உலகமயமாக்கல் மற்றும் தாராள மயமாதல் கொள்கைகள், தென் கொரியாவில் உச்சத்தில் இருந்ததால் சியோல் உள்ளிட்ட கொரியா நகரங்களுக்கு வருகை தரும் இந்தியர்களுக்கு நம்மூர் உணவு கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது அங்கிருந்த ஒரே தென்னிந்திய ஓட்டல் சக்ரா என்பதால், இந்தியர்கள் பலர் வர ஆரம்பித்தார்கள்.

ரெஸ்ட்டாரன்ட்டுக்கு ஏற்பட்ட அங்கீகாரத்தை அடுத்து சியோல் உள்பட தென் கொரியாவின் பல்வேறு பெரிய நகரங்களில் எங்க உணவகத்தின் கிளை முளைத்தது. இப்போது சங்கிலித்தொடர் உணவகமாகவும் செயல்பட்டு வருகிறது. என்னுடைய இந்த வளர்ச்சியின் பின்னணியில் உள்ள ரகசியம்.. ஆரோக்கியமான, சுகாதாரமான, உயர்தர உணவுகளை தயாரிப்பது தான்’’ என்றவர் இந்த மூன்றிலும் எப்போதும் காம்பிரமைஸ் ஆகக்கூடாது என மிகவும் தீவிரமாக இன்று வரை செயல்பட்டு வருகிறார்.

‘‘இருபது ஆண்டு கால ஓட்டல் தொழிலில், தொடக்கமே அபாரமாக இருந்தாலும், அதில் நான் சந்தித்த சவால்களும் சாதாரணமானவை அல்ல. மொழி புரியாத நாட்டில், இந்திய உணவகம் தொடங்குவதற்கு உரிமம் பெறுவது தொடங்கி, ஓட்டலுக்கான இடம் பிடிப்பது, மின்சார இணைப்பு, ஓட்டலில் தயாராகும் உணவுகளின் வகை மற்றும் இதர விவரங்களை அரசுக்கு முறைப்படி தெரிவித்தால் தான் ஓட்டல் நடத்த உரிமம் கிடைக்கும். இந்த ஒவ்வொன்றையும் கடந்து வருவது எனக்கு மிகப்பெரிய சவாலாக தான் இருந்தது.

அதற்கும் ஒரு படி மேலாக, ஒவ்வொரு வியாபாரத்திலும் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் துணிச்சலுடன் நானே எதிர்கொண்டேன். என்னுடைய உணவகத்தின் சிறப்பு இந்திய உணவுகள். ஆனால் இந்த உணவினை இப்போது கொரியா மக்களும் விரும்பி சாப்பிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இதனை ஒரு நல்ல மாற்றமாக தான் நான் உணர்கிறேன்’’ என்றவர் உணவகத்தை தொடர்ந்து ‘எக்ஸ்பேட் மார்ட்’ எனும் பலசரக்கு மளிகைக் கடையும் ஆரம்பித்துள்ளார்.  

‘‘இந்தியாவில் இருந்து கொரியா வரும் விஐபிக்கள், தொழிலதிபர்கள், சாஃப்ட்வேர் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் இங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் எங்களின் உணவகம் மற்றும் மளிகை கடைக்கு வராமல் நாடு திரும்பமாட்டார்கள். அப்படித்தான், ஜனாதிபதியாக இருந்த போது, கலாம் அவர்கள் தென்கொரியாவிற்கு 2006ம் ஆண்டு வந்தார். தென்னிந்திய உணவினை சாப்பிட விரும்பியதால், அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டனர். நானும் தயாரித்துக் கொடுத்தேன்.

உணவை ருசி பார்த்தவர், ‘‘சூப்பர், எக்ஸ்லண்ட்.. உணவக உரிமையாளரை பாராட்ட வேண்டும்’’எனக் கூறியவர் என்னை நேரில் அழைத்து பாராட்டவும் செய்தார். அந்த நாளை என் வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது. அவரை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் உள்பட இந்திய அரசின் உயர் பிரதிநிதிகள் யார் வந்தாலும் எங்க உணவகத்தில் இருந்து தான் உணவு சப்ளை செய்யப்படும்.

சமையலில் எனக்கு இருந்த ஈடுபாடு தான் என்னை இந்தளவுக்கு முன்னேற்றி உள்ளது. எனக்குத் தெரிந்ததை, நான் கற்றுத் தேர்ந்த பன்னாட்டு உணவுகளை என்னோடு குறுக்கிக் கொள்ளாமல், கொரிய மக்கள் உட்பட பலருக்கும் கற்பித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னிடம் தொழில் பயின்ற பலரும் இப்போது இங்கு புதிதாக ரெஸ்ட்டாரன்ட் திறந்துள்ளனர்’’ என்றவர் கொரிய தமிழ் சங்க மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியேற்று, தமிழின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் கொரிய மாணவர்களுக்கும் தமிழ் கற்பித்துள்ளார்.

‘‘தமிழ் மற்றும் கொரியா இரண்டு மொழிகளில் உள்ள வார்த்தைகள் மற்றும் இலக்கணங்கள் இரண்டும் ஒருமித்து இருப்பதால், கொரியா மாணவர்கள் தமிழை மிகவும் ஆர்வமாக கற்றுக்கொள்ள முன்வருகிறார்கள். மேலும், இந்திய மாணவர்களுக்கு கொரியாவின் கல்வி வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுப்பதிலும், இந்தியாவில் பல்நோக்கு கொரிய மருத்துவமனை அமைப்பது தொடர்பாகவும் ஈடுபட்டு வருகிறேன். எல்லா வகையிலும் என் கணவரும், எனது சகோதரியும்  எனக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

அதுபோல, சரும பராமரிப்பு பொருட்கள் கொரியாவில் மிகவும் பிரபலமானவை. அவற்றை இந்தியாவிலும், உலகளவிலும் வியாபாரம் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபாடு செலுத்தி வருகிறேன். தொழில் முனைவோராக ஆசைப்படும் இளம் பருவத்தினருக்கு அதற்கான பயிற்சி அளிக்கவும் என்னை தயார் செய்து கொண்டுள்ளேன்.

எதிர்மறை கருத்துகளுக்கு மனதில் ஒரு போதும் இடம் கொடுக்காதீர்கள் என பெண்களை அறிவுறுத்துகிறேன். வெற்றி சுலபத்தில் கிடைக்காது. அதற்கு பொறுமையும், கடின உழைப்பும், ஸ்மார்ட் நடவடிக்கைகளும் அவசியம். துணிச்சலாகவும், அதே சமயம் பிறருக்கு மதிப்பளித்து பழகவும் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் உங்கள் வாழ்வில் வசந்தம் எப்போதும் வீசும்’’ என்றார் சாந்தி பிரின்ஸ்.

தொகுப்பு: தி.ஜெனிஃபா