Jul 26, 2021
சிறப்பு கட்டுரைகள்

பட்டி பூசும் பெண்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘பட்டி மாவை எடு... மெஷினில் போடு... தண்ணீர் அளவா ஊற்றி கலந்து பட்டி போடு...’ என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார் அந்த பெண். மற்றவர் ஒரு கையில் பிரஷ், மறுகையில் பெயின்ட் டப்பாவுடன் ஏணியில் ஏறி சுவற்றில் வண்ணம் பூசிக் கொண்டு இருந்தார். அந்த வீட்டை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தனர் பெண் பெயின்டர்கள். ‘‘நாங்களும் ஆண்களுக்கு இணையா இந்த தொழிலுக்கு வந்துட்டோம்’’ என்று பேசத்துவங்கினார் வீட்டில் கேட்டிற்கு பெயின்ட் அடித்தபடி பெயின்டர் லலிதா.

‘‘நான் பிறந்தது சீர்காழியில் உள்ள சின்ன கிராமமான அண்ணப்பம்பேட்டை. பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். 22 வயசில் கல்யாணமாகி மயிலாடுதுறையில் செட்டிலாயிட்டேன். என் கணவருக்கு பில்டிங் வேலை. இரண்டு பசங்க. நானும் விவசாய வேலைக்கு போவேன். எங்களுடையது ரொம்ப சாதாரணமான குடும்பம் தான். எங்க இருவரின் சம்பாத்தியத்தில் தான் எந்த கடனும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். ஒரு நாள் என் தோழி, மயிலாடுதுறையில் ஒரு பயிற்சி நடக்குது... நீயும் வான்னு கூப்பிட்டா.

என்ன பயிற்சி எல்லாம் தெரியாது. சரி போய் பார்க்கலாம்ன்னு போனேன். அங்க போன பிறகு தான் நிப்பான் பெயின்ட் நிறுவனம் என் சக்தி என்ற பெயரில் பெண்களுக்கு வீடுகளுக்கு எப்படி பெயின்ட் அடிக்கலாம்ன்னு சொல்லிக் கொடுக்க போறாங்கன்னு ெதரிந்தது. காட்டில் வெயிலில் வயலில் வேலை செய்வதற்கு இந்த பயிற்சி எடுத்தால் நல்லா இருக்கும்ன்னு என் கணவரிடம் சொல்லிட்டு 15 நாள் பயிற்சி எடுத்தேன்.

தினமும் காலை பத்து மணிக்கு பயிற்சி ஆரம்பிக்கும் மாலை நான்கு வரை இருக்கும். காலையில் பெயின்ட் எத்தனை வகை, பட்டின்னா என்ன? அதை எப்படி கலக்கணும், பிரஷ் பிடிக்கும் விதம் மற்றும் எந்த பிரஷ் மற்றும் ரோலர் பன்படுத்தினா எப்படி ரிசல்ட் கிடைக்கும்ன்னு பாடமா எடுப்பாங்க. மதிய இடைவேளைக்கு பிறகு காலையில் படிச்சதை செயல்முறை பாடமா நடத்துவாங்க. அவங்க ஒரு முறை செய்து காண்பிப்பாங்க. நாங்க அதைப் பார்த்து செய்வோம்’’ என்றவர் எவ்வாறு பெயின்ட் கலக்கணும்னு விவரித்தார்.

‘‘எனாமலில் தின்னர் கலந்து அடிக்கணும். பிரைமரில் தண்ணீர் ஊத்தி கலந்து அடிக்கணும். எமல்ஷன் இரண்டு கோட்டிங் அடிக்கணும். அதையும் தண்ணீர் கலந்துதான் அடிக்கணும். முதலில் பட்டி போட தான் கற்றுத்தருவாங்க. பட்டிமாவு கலக்க இயந்திரம் இருக்கு. ஒரு குறிப்பிட்ட அளவு பட்டி மாவு போட்டு அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்தால் பட்டி மாவு தயார். பிறகு அதை தகடு கொண்டு சுவற்றில் வழிச்சு தடவணும். ஆரம்பத்தில் சரியாவே வரல. கட்டி கட்டியா அப்படியே நிக்கும்.

அதன் பிறகு எங்க பயிற்சியாளர் தான் எப்படி அடிக்கணும்னு விளக்கினார். பழகப் பழக வந்திடுச்சு. முதல் பட்டி அடிச்சு அது காய்ந்ததும் மேடு பள்ளமா இருந்தா அதை எமரி பேப்பர் வச்சு சமன்படுத்தி அடுத்த பட்டி போடணும். பிறகு பிரைமர். அதன் பிறகு தான் பெயின்ட் அடிக்கணும். அப்படி அடிச்சா தான் சுவற்றில் பெயின்ட் நல்லா ஒட்டும். சுவருக்கும் பாதுகாப்பு’’ என்றவர் ஆரம்பத்தில் பெண்கள் பெயின்டிங் வேலை செய்வார்களான்னு கிண்டல் செய்துள்ளனர்.

‘‘இந்த தொழிலையும் நீங்க விட்டு வைக்கலை? நல்லா பெயின்ட் அடிப்பீங்களா? ஏணி மேல எல்லாம் ஏறுவீங்களான்னு பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் யாரும் எங்கள நம்பள. அலட்சியமா பார்த்தாங்க. அதன் பிறகு கான்ட்ராக்டர் ஒருவரிடம் வேலைக்கு போனோம். பிறகுதான் எங்களாலும் முடியும்ன்னு நம்பினாங்க. இரண்டு வருஷமா நாங்க பெயின்டிங் வேலைப் பார்த்து வருகிறோம். ஆனால் கடந்த வருடம் கொரோனாவால் ரொம்பவே கஷ்டப்பட்டோம்.

யாரும் வேலைக்கு கூப்பிடல. தினசரி வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்பட்டோம். அந்த சமயத்தில் நிப்பான் நிறுவனம் என் சக்தி மூலமா பயிற்சி பெற்ற எல்லாருக்கும் மாத மளிகை பொருட்கள் கொடுத்து உதவினாங்க. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு திரும்பி இருக்கோம். சென்னார்கோயிலில் ஒரு வீட்டிற்கு ரீபெயின்டிங் செய்தோம்.

இப்ப வரைக்கும் ஒன்பது கட்டிடத்திற்கு பெயின்டிங் கான்ட்ராக்டர் மூலமா பெயின்ட் செய்திருக்கோம். இதற்கான அனுபவம் இன்னும் வேண்டும். அதை வளர்த்துக் கொண்டு தான் தனியாக கான்ட்ராக்ட் எடுத்து செய்ய முடியும். இப்ப நாங்க எங்களுக்கான அனுபவத்தை கற்றுக்கொண்டு இருக்கிறோம். நாங்க வேலைக்கு போவதைப் பார்த்து எங்க கிராமத்தில் மற்ற பெண்களும் இந்தப் பயிற்சியில் இணைந்திருக்காங்க’’ என்றார் லலிதா.

தொகுப்பு: ஷம்ரிதி