Jul 26, 2021
சிறப்பு கட்டுரைகள்

அன்னதானம் என் உயிர்...படிப்பு என் கனவு!

நன்றி குங்குமம் தோழி

“பிறக்கும்  எல்லோரும்  வாழதான் செய்கிறோம். அப்படி வாழும் போது என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியமாக பார்க்கிறேன்” என்கிறார் சென்னை, கண்ணகி நகரை சேர்ந்த உமா. குடும்ப சூழல் காரணமாக ஆறாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை நிறுத்தியவர், இன்று நூற்றுக்கணக்கான குழந்தைகளின் படிப்பிற்கு வழிகாட்டியாக இருக்கிறார்.  ‘‘பூர்வீகம் சென்னை ஐஸ் ஹவுஸ். குடிசைப் பகுதிதான். இன்றைக்கும் நான் ரொம்ப ஆசைப்படுவது வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்று. என்னை நானே கருப்பு கோட்டு போட்டு கற்பனை செய்துக்குவேன். படிப்புதான் இல்லையே தவிர என்னிடமிருந்து வரும் கேள்விகளும், பதில்களும் ஷார்ப்பாக இருக்கும்.

இன்று நான் செய்து கொண்டிருக்கும் வேலை மூன்று வயதில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். என் அப்பா செல்லமால் தோட்டம் சந்திரன் என்றால் எல்லோருக்கும் தெரியும். பாட சாலை, குழாய் ரிப்பேர், குடிசை மக்களுக்கு கழிவறை வசதி என எங்கள் பகுதியில் ஏதாவது பிரச்னை என்றால் இவர்தான் முதல் ஆளாக நின்று கடிதம் போடுவது என எல்லா வேலைகளும் செய்வார்.

அந்த நேரத்தில் அப்பா கூட எல்லா இடத்துக்கும் போவேன். யாராவது வழி தவறி பஸ் ஸ்டாண்டில் உட்காந்திருந்தா, உடனே அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவார். வந்தவங்களுக்கு, ஒரு வீட்டில் சாப்பாடு, ஒரு வீட்டில் குழம்பு, ஒரு வீட்டில் பொரியல் என்று நாலு வீட்டில் சாப்பாடு வாங்கி வந்து, எங்க வீட்டில் இருப்பதோடு சேர்த்து கொடுப்போம். எங்க ஒரு வீடு சாப்பாடு மட்டுமே பத்தாது. பத்து பேர் வீட்டில் இருந்து உணவுகள் சேர்ந்தால், இல்லாத ஒரு குடும்பத்துக்கு உணவு கொடுக்கலாம் என்பதை உணர வைத்தார். அப்படி வந்தவங்களுக்கு எல்லோர்கிட்டையும் கொஞ்சம் காசு சேர்த்து, கம்பு நட்டு, பேனர் கட்டி ஒரு தற்காலிக இருப்பிடம் மாதிரி ரெடி பண்ணி கொடுப்பார்.

இப்படி பார்த்து பார்த்து வளர்ந்ததுனால எங்களுக்கும் யாரும் சொல்லித் தராமலேயே, உள்ளே போயிருச்சு. அதனால் யார் கஷ்டப்பட்டாலும், பசியாக இருந்தாலும் தாங்கவே மாட்டேன்” என்று கூறும் உமா, “அன்னதானம் என் உயிர் மூச்சு. படிப்பு என் கனவு” என்கிறார். “என்னால் படிக்க முடியாத படிப்பை, படிக்க முடியாத ஏழை எளியவர்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறேன். எங்களை வச்சு நிறைய பேர் ஏமாத்திட்டு இருக்காங்க. அதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களுக்கு எப்படி இவ்வளவு பணம் வருது என்றெல்லாம் கேள்வி கேட்பாங்க.

ஒரு நேரத்தில் கஷ்டப்பட்டவங்களுக்கு, நாங்க செய்த உதவி மூலம் இன்று அவங்க ஒரு நல்ல நிலையில் இருக்காங்க. அவங்க மாதம் ஒரு 10 கிலோ அரிசி வாங்கி கொடுக்கிறாங்க. அவங்க மாதிரி ஒரு 10 பேர் உதவ முன் வரும் போது, அது 100 ஆக பெருகும். இது மாதிரி தான் நாங்க மற்றவர்களிடம் இருந்து உதவி பெறுகிறோம். தினம் 1000 பேரிலிருந்து 1500 பேர் வரைக்கும், செய்யூர், செல்லமால் தோட்டம், ஐஸ் ஹவுஸ் குடிசைப் பகுதி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் சாப்பாடு கொடுக்கிறோம். சாப்பாடு மட்டுமின்றி, குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கெட், ஹார்லிக்ஸ் என என்னென்ன தேவைப்படுகிறதோ அதையெல்லாம் தருகிறோம்.

கொரோனாவிற்கு முன் வேலை கிடைப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு வீட்டில் மூன்று பேர் வேலை செய்தாங்கன்னா, இப்ப ஒருத்தர்தான் வேலைக்கு போகக்கூடிய சூழலாக இருக்கிறது. அதுவும் முன்ன வாங்கின சம்பளத்தவிட குறைவான சம்பளமாகவும் இருக்கு. அரசு வீடு கொடுத்திருந்தாலும் வீட்டு வாடகை, கரண்ட் பில் எல்லாம் இவங்கதான் கட்டணும். இது போக குடும்பத்தையும் ஓட்டியாகணும். இன்னும் சொல்லப் போனால் பஞ்சத்தில் அடிபட்ட மாதிரிதான் இருக்காங்க. உடம்பு சரியில்லைனா கூட ஒரு நாள் லீவ் போட்டா வேலை போயிடுமோ என்ற பயத்தில் எதையும் பொருட்படுத்தாமல் போறாங்க. அந்த பகுதி மக்களுக்கு மருத்துவமும் கொடுத்து வருகிறோம்” என்று கூறும் உமா, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை தத்தெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வும் அளித்து வருகிறார்.
 
‘‘நிறைய குடிசைப் பகுதிகளுக்கு போய் வேலை செய்கிறோம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் நிறைய பேரை மீட்டெடுத்து மறு வாழ்வு கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு இருக்கும் திறமையை கண்டறிந்து வேலை வாய்ப்பினையும் உருவாக்கி இருக்கிறோம். இதை நான் வெளியே சொன்னால் எனக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அசிங்கம் இல்லையா? அதனால் நிறைய விஷயங்களை வெளியே சொல்லமாட்டோம்.

அவர்களை வைத்து பராமரிக்க பெரிதாக இடம் இல்லை. வாழ்க்கையில் ஒருவாட்டி கெட்டுட்டாங்கன்னா, இந்த பசங்க வெளியில சொல்லி பிளாக்மெயில் பண்றாங்க. அதோடு இன்னும் பல பேரால் சீரழிக்கப்படும் போது பெத்தவங்க ஏற்க மறுக்குறாங்க. அக்கம், பக்கம் பேச ஆரம்பிச்சு ஒரு சிலர் இதுவே தொழிலாவும் கூட மாத்திடறாங்க. அந்த மாதிரி இருக்கும் பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம்.

ஆறு வயது குழந்தைக்குக் கூட கவுன்சிலிங் கொடுத்திருக்கிறோம். அந்த பெண்களுக்கு வேலை வாங்கி கொடுப்பது முதல் விடுதியில் சேர்ப்பது வரை எல்லாமும் செய்து தருகிறோம். எங்க கிட்ட ஒரு 1500 குழந்தைங்க டியூஷன் படிக்கிறாங்க. இன்னும் நிறைய பேருக்கு கல்வியை கொண்டு போய் சேர்க்கணும். அந்த கல்வி மூலம் தான் மாற்றங்கள் கொண்டு வர முடியும்” என்கிறார் உமா.

தொகுப்பு: அன்னம் அரசு