Sep 28, 2022
சிறப்பு கட்டுரைகள்

மகத்தானவர்களுக்கான மதிப்புக்குரிய விருது!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் பல துறைகளில் தங்களின் கால் தடத்தினை பதித்து வருகிறார்கள். மருத்துவ துறையில் ஆரம்பித்து ஐ.டி.  ஃபேஷன், மனித வளத்துறை, சுயதொழில், அலுவலக நிர்வாகி... என அவர்களின் அடையாளத்தை சொல்லிக் கொண்டே போகலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும்... இன்றும் சில பெண்கள் ஒரு கூட்டுக்குள் தங்களை அடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது குடும்பமாக இருக்கட்டும் அல்லது அவர்கள் வேலைக்கே செல்பவராக இருந்தாலும், தங்களுக்கு என சில எல்லைக் கோடுகளை வரைந்து அதற்குள் மட்டுமே பயணித்து வருகிறார்கள். அந்த எல்லைக் கோடு இனி வேண்டாம். அதைத் தகர்த்து வெளியுலகத்தில் இவர்களுக்கு என ஒரு தனிப்பட்ட அடையாளம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சென்னையில் கடந்த வாரம் முதல் முறையாக இந்தியன் மீடியா வர்க்ஸ் நிறுவனம் ஸ்டார்நைட் 2021 என்ற நிகழ்ச்சியினை கொண்டாடியுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாகி ஜான் அமலன் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து கொண்டார்.

‘‘விருதுகள் ஒருவரை கவுரவிப்பதற்காக கொடுப்பது மட்டுமல்ல... அது ஒருவரின் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்காகவும் கொடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் நாங்க இந்த விருதினை இந்தாண்டு வழங்கினோம். சினிமா மட்டுமில்லாமல், ஃபேஷன், புகைப்படத் துறை, சிகை அலங்கார நிபுணர், தொழில்முனைவோர் என பலதரப்பட்ட துறையை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. மேலும் இதில் பங்குபெறுவதற்கு அவர்களுக்கு எந்த வித பின்புலமும் தேவையில்லை. திறமையை மட்டுமே கணக்கில் கொண்டு இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காகவே பிரத்யேக நடுவர் குழு அமைக்கப்பட்டிருந்தது’’ என்றவர் விருதுகளில் பங்கு பெறுபவர்களை எவ்வாறு தேர்வு செய்தார்கள் என்பதை பற்றி விவரித்தார்.

‘‘இப்போது எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது. மேலும் கொரோனா தொற்றை தவிர்க்க போட்டியாளர்கள் அனைவரும் முதலில் தங்களை குறித்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் தமிழகத்தில் எந்த கிராமத்தில் இருந்தாலும் திறமையானவர்களாக இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதன் பிறகு அதில் தகுதியானவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அடுத்தக்கட்டத்திற்கு தேர்ச்சி பெறுவார்கள். இந்த கட்டத்தில் தேர்வு பெற்றவர்களை மதிப்பிட்டு கடைசி கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது தேர்வு பெற்றவர்கள் முதலில் தங்களை அறிமுகம் செய்ய வேண்டும். அடுத்து அவர்கள் திறமையினை வெளிப்படுத்த வேண்டும். கடைசியாக இவர்களுக்கு என பிரத்யேக ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியும் உண்டு. ஃபேஷன் ஷோ என்றால் மாடல்களுக்கு மட்டுமே உகந்தது மற்றும் அதன் மேல் தப்பான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் உள்ளது.

பலர் முன்னிலையில் அழகாக நடந்து வந்து தங்களுக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மையை உடைக்கும் ஒரு களமாகத்தான் அந்த மேடை உள்ளது. மேலும் இதில் வெற்றி பெற்றவர்கள் மிஸ்டர் தமிழகம், மிஸ் தமிழகம், மிசஸ் தமிழகம், இந்தியன் வுமன் ஃபவுண்டேஷன் மற்றும் இந்திய ஃபேஷன் விருதுகள் என்ற பெயரில் பலதரப்பட்ட  துறையினை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது’’ என்றார். இந்திய ஃபேஷன் விருதுகளின் தலைப்பில் வெளிப்படையான நடிகைக்கான விருதினை ஜனனி ஐயருக்கும், கிளாம்டால் விருது சாக்‌ஷி அகர்வால், வளர்ந்து வரும் நடிகை அபிராமி, சிறந்த சிகை அலங்கார விருது போனி சசிதரன், சிறந்த ஃபேஷன் ஆலோசகர் சிநேகா நாயர், சிறந்த புகைப்பட நிபுணர் வெங்கட்ராம், சிறந்த ஸ்டைலிஷ் தொழில் முனைவோர் சம்யுக்தா போன்றோருக்கு வழங்கப்பட்டது. இந்திய ஃபேஷன் விருதுகளில், ஃபேஷன், ஊடகம், உடற்தகுதி போன்றவற்றுக்கு சினேகா நாயர், மீனா சுகப்பிரியா மற்றும் டாக்டர் ஜெயா மகேஷ் பெற்றனர்.

இந்த விருதுகளை பிரபலங்கள் பெற்று இருந்தாலும், அதையும் தாண்டி பெண் தொழில் முனைவோர், ஃபேஷன் துறையை சார்ந்தவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் என பலர் விருதினை தட்டிச்சென்றுள்ளனர். சென்னையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா இந்த வருடம் மட்டுமில்லாமல், ஒவ்வொரு வருடமும் நடைபெற இருப்பதாக ஜான் அமலன் தெரிவித்தார். இதன் மூலம் புதுப்புது திறமைசாலிகளை கவுரவிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.

தொகுப்பு: பிரியா மோகன்

படங்கள்: ஜி.சிவக்குமார்