Jun 18, 2021
சிறப்பு கட்டுரைகள்

நம்பிக்கை

நன்றி குங்குமம் தோழி

‘‘முடிவே பண்ணிட்டியா?’’  தோழியின் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் நித்யா.‘‘ம்...’’‘‘நித்தி! உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுப்போச்சா?’’ சீறிய உமாவிடம் சலிப்பாய் ‘உச்’ கொட்டினாள் நித்யா.‘‘உமா! என்னை மைண்ட்வாஷ் பண்றதா இருந்தால் தயவு செய்து போனை வெச்சிடு. நான் பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்...’’‘‘என்ன பெரிய பிரிப்பேர்? அப்பா சேர்த்து வெச்ச பணத்தை அம்மா சேமித்து வைத்த நகைகளை எப்படி தூக்கிட்டு போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா?’’‘‘உமா!’’

‘‘வாயை மூடு! நீ எப்படிடி இவ்வளவு சுயநலவாதியாய் மாறின? மூணு பொண்ணுங்க பொறந்தும் உங்கப்பா முகம் கோணாமல் முணுமுணுக்காமல் உங்களை எப்படியெல்லாம் வளர்த்தாரு? நீ பி.டி.எஸ்.தான் பண்ணுவேன்னு  சொன்னதற்கு கொஞ்சமும் மறுக்காமல் படிக்க வைத்தாரே! அதுவும் கடன் வாங்கி. எல்லாத்தையும் மறந்துட்டியா?’’ உமா கோபமாய்க் கேட்க, நெற்றியைப் பற்றிக்கொண்டாள் நித்யா.

‘‘இல்ல உமா! நான் எதையும் மறக்கல!’’ ‘‘பிறகெப்படி இந்த முடிவை எடுத்த? உங்கப்பா பாடுபட்டு படிக்கவெச்சதுக்கு பலன் கிடைக்கிற நேரத்தில இப்படி எவன்கூடவோ ஊரைவிட்டு போகப்போறேன்னு சொல்றியே! இது உனக்கே அநியாயமாய் தோணல?’’‘‘புரியாமல் பேசாதே உமா! மனோவுக்கு அவங்க வீட்ல வேற பெண் பார்க்கிறாங்களாம்.’’‘‘ஸோ வாட்?’’‘‘என்னடி இப்படி கேட்கிற? நானும் அவனும் சின்சியராக லவ் பண்றோம்.’’

‘‘அப்படி சின்சியராய் லவ் பண்றவன் அவங்க வீட்ல பேசி உங்க வீட்ல வந்து கேட்கலாமே?’’ அதை விட்டுட்டு எதுக்காக ஊரை விட்டு ஓடிப்போகணும்?’’‘‘அதான் ஏற்கனவே சொன்னேனே உமா!நான் மிடில் கிளாஸ்! அவங்க ராயல் ஃபேமிலி. என்னை எப்படி ஏத்துப்பாங்க?’’
‘‘அது அவன் கடமை! தேடித்தேடி வந்து பேசினானில்ல? நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு சொன்னானில்ல? அதே மாதிரி அவன் பேரண்ட்ஸ்கிட்ட பேசச் சொல்லு!’’‘‘எல்லாம் பேசிப்பார்த்தாச்சு. பட் நோ யூஸ். அதனால்தான் இந்த முடிவை எடுத்தோம். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம் அவங்க வீட்ல சொல்லலாம்னு மனோ சொல்றான். எனக்கும் அதுதான் சரின்னு தோணுது.’’

‘‘முட்டாள்! நேத்து வந்த ஒருத்தனுக்காக இவ்வளவு யோசிக்கிறியே! உன் அம்மா, அப்பாவை… உன்கூடப்பொறந்த தங்கைகளை பத்தி யோசிச்சியா? நீ செய்யுற காரியம் அவங்களை எப்படி பாதிக்கும்னு நினைச்சிப் பார்த்தியா?’’‘‘சும்மா போரடிக்காதே உமா! அவ்வளவு பெரிய பாவம் எதுவும் பண்ணலயே! மனசுக்கு பிடிச்சவனோட வாழப்போறேன். இது பெரிய குற்றமா என்ன?’’  நித்யா சற்றே அலட்சியமாய்க் கேட்க, உமாவிற்கு வாயடைத்துப் போனது.

தான் செய்வது தவறே இல்லை என நினைப்பவளிடம் என்ன சொல்லி திருத்துவது? அடுத்தடுத்த வீடு என்பதால் இருவருமே பால்யகாலத்து தோழியர்! அதோடு நித்யாவின் தந்தை கங்காதரனின் நிலையை நேரிடையாய் கண்டு வளர்ந்தவள்! மாநகரப்பேருந்தின் ஓட்டுநராகப் பணிபுரியும் கங்காதரன் தன் சக்திக்கு மீறி மூன்று மகள்களையும் படிக்க வைப்பதை அந்த தெருவே அறியும். நித்தியும் அறிந்தவள்தான். புத்திசாலியான மாணவி! மருத்துவ மாணவி!இதுவரை படிப்பில் முதலிடத்தில் இருப்பவள்.

படிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இந்த மனோவின் வரவால் சுத்தமாய் மாறிவிட்டாள்! அதுவும் அவனுக்காக வீட்டை விட்டு… ஊரை விட்டு… படிப்பை விட்டு பெங்களூர் புறப்படுகிறான் என்பதை உமாவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது தடுத்து விடலாம் என முயற்சித்தது பலனளிக்காமல் போய்விடுமோ என்ற தவிப்பில் சற்றே இறங்கி வந்தாள் உமா.

‘‘நித்தி! ப்ளீஸ் நித்தி! தயவு செய்து நான் சொல்றதை கேளு. இன்னும் ரெண்டு மாசத்தில நம்ம படிப்பு முடியுது. எப்படியும் நீ யுனிவர்சிட்டி ரேங்க் எடுத்திடுவ. கண்டிப்பாய் ஜாப் கிடைச்சிடும். உங்கப்பா பட்ட கடனையெல்லாம் அடைக்கணுமே நித்தி. அது உன் கடமை இல்லையா? உங்கப்பா கண்ட கனவு நனவாகிற நேரத்தில் நீ இந்த முடிவை எடுக்கலாமா? நீ எவ்வளவு பெரிய புத்திசாலி!’’‘‘உமா பிளீஸ்! ஏற்கனவே நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன்! நீ வேற எதையாவது பேசி என்னை குழப்பாதே! போனை வை! எனக்கு டயமாகுது’’ என போனை கட் பண்ணி கட்டிலில் எறிந்தாள்.

அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தங்கைகளை ஒருகணம் பார்த்தாள். மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எடுத்து வைத்த பொருட்களை சரி பார்த்தாள்.
நான்கு நாட்களுக்குத் தேவையான உடைகள், அழகுசாதனப் பொருட்கள், அம்மா தந்த நகைகள் என எல்லாம் தயார். உடன் பயிலும் தோழிக்கு திருமணம் என கூசாமல் பொய் கூறி தந்தையிடம் அனுமதி வாங்கியாகி விட்டது. வழிச்செலவுக்கு பணம் வேண்டுமே! மனோ கொண்டு வந்தாலும் தன்னை நம்பி கையில் பணம் வேண்டும். அறைக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். வெளிச்சம் தெரிந்தது.

அப்பா இன்னும் படுக்கவில்லை. பணம் கேட்டு பார்க்கலாம் என எழுந்தவள் பேக்கை மூடி கட்டிலுக்கடியில் வைத்துவிட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியேற, ஹாலில் அமர்ந்திருந்த கங்காதரன் மனைவியை அழைத்தார்.‘‘லஷ்மி! நாளைக்கு உன் வளையல் ரெண்டை தா! தேவைப்படுது.’’‘‘ எதுக்கு?’’‘‘இந்த மாசம் மூணு பேருக்குமே பீஸ் கட்டினதில லோன் கட்ட முடியல. பேங்க்ல இருந்து மெசேஜ் வந்திட்டே இருக்கு. வளையலை வெச்சி லோனை கட்டிடலாம்.’’‘‘அடடா! மொதல்லயே சொல்லக்கூடாது. பெரியவ ஏதோ கல்யாணத்துக்குப் போகணும்னு கேட்டான்னு இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் கொடுத்தேன்.’’  லஷ்மி இயல்பாய் கூற, நித்யாவின் நடை தடைபட்டது. இதயத்திற்குள் முள்ளொன்று சுருக்கென்று தைத்தது.

‘‘கொடுத்திட்டியா? வேற ஏதாவது நகை இருந்தா கொடேன்.’’‘‘ஏதோ பெரிய இடத்து கல்யாணமாம். நிறைய நகை போட்டுட்டு போனால்தான் கௌரவமாய் இருக்கும் என்றாள். சரின்னு எல்லாத்தையும் கொடுத்திட்டேன். அதான் ரெண்டு நாள்ல வந்திடுவாள்ல. அதுக்குப்பிறகு தர்றேன்.’’‘‘அதுவும் சரிதான்! கூடப்படிச்சபுள்ள கல்யாணம். நல்லதா துணிமணி நகை நட்டு போட்டுட்டு போனால்தான் நல்லா இருக்கும். நான்… கணேசன் கிட்டு கேட்டுபார்க்கிறேன்.’’‘‘ ஏங்க! இப்படி கடனுக்கு மேலே கடனா வாங்கணுமா? பேசாம ஒரு டிகிரி படிக்க வெச்சிருந்தால்…’’

‘‘இதையே எத்தனை தரம் சொல்லுவ லஷ்மி! நாம என்ன சாதாரண புள்ளைகளையா பெத்திருக்கோம்?  ஒவ்வொன்னும் வைரம் லஷ்மி! வைரம்! பொட்டப்புள்ளைகளை வதவதன்னு பெத்து போட்டிருக்கானே! எப்படித்தான் கரையேத்துவானோன்னு நம்மள எத்தனை பேர் இளப்பமாய் பேசினாங்க? ஆனால… அதே வாய் இன்னிக்கு நம்புள்ளைகளைப் பார்த்து எப்படி பொளக்குது பார்த்தியா? நம்ம குடும்பத்தில எத்தனை பயலுக படிச்சாணுங்க. எவனாவது அரியர் இல்லாம பாசானாங்களா? பாதிப்பேர் பள்ளிப்படிப்பையே தாண்டலையே!

ஆனா நம்ம புள்ளைக… அத்தனையும் பர்ஸ்ட் கிளாஸ்ல பாசாச்சு. பெரிய கோல்ட் மெடல் வாங்கி சாதிச்சுட்டாளே. அவ ஆசைப்பட்ட படிப்பை படிக்க வைக்கிறது நம்ம கடமையில்லையா? நாளைக்கே அவ டாக்டராகிடுவா! நம்மை மாதிரி நம்ம புள்ள கஷ்டப்பட வேண்டாம் லஷ்மி! நல்ல படிப்பு! நல்ல வேலை! கைநிறைய சம்பளம். அவ எதிர்காலம் அமோகமாய் இருக்கும் லஷ்மி.

மத்த ரெண்டுபேருமே படிப்பை முடிச்சதும் வேலைக்குப் போயிடுவோம்னு சொல்றாங்க. படிக்கட்டும். வேலை பார்க்கட்டும். புள்ளைங்க சந்தோஷமாக வாழறதுக்கு பெத்தவங்க கொஞ்சம் கஷ்டப்படலாம் லஷ்மி. தப்பில்லை!’’‘‘அதுக்கில்லங்க! பொம்பளை புள்ளைங்க! அவங்கள படிக்க வைக்கிறதுக்கே இவ்வளவு கடன்பட்டிருக்கிறோம். இன்னும் கல்யாணம் காட்சின்னு எவ்வளவோ இருக்கே! அதுக்கெல்லாம் பணம் வேண்டாமா? இதில பெரியவளோட போக்கில கொஞ்சம் மாற்றம் தெரியுது. அது வேற என் வயித்தை கலக்குது’’ என்ற மனைவியை கங்காதரன் திகைப்பாய் நிமிர்ந்து பார்க்க. நித்யா சுவரோடு ஒண்டிக்கொண்டாள். இருதயம் வேகமாய் அடித்துக் கொண்டது. ‘‘லஷ்மி! நீ… என்ன சொல்ற?’’

‘‘ஆமாங்க! இப்பல்லாம் அடிக்கடி யார் கூடவோ போன்ல பேசுறா! ஏதோ… தப்பாப்படுது.’’‘‘சேச்சே! நம்ம புள்ள மேல சந்தேகப்படுறியா?’’‘‘அ… ப்படி….யில்ல… பொம்பளப்புள்ள… வெளியே நாலு இடத்துக்குப் போறா வர்றா! மனசில ஏதாவது ஆசையை வளர்த்துக்கிட்டால்…’’ ‘‘அதை தைர்யமாய் நம்மகிட்ட சொல்லுவா லஷ்மி. நாம அவளுக்கு அந்த சுதந்திரத்தைத் தந்திருக்கோம்...’’ கங்காதரன் சொல்ல, நித்யாவிற்கு தொண்டை அடைத்துக் கொண்டது.

‘‘ஆனா நம்ம பொண்ணு அப்படி எதுவும் செய்ய மாட்டா லஷ்மி. ஏன்னா நம்மபுள்ள நம்ம கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவ. பொறுப்பான பொண்ணு. படிப்புதான் அவளுக்கு முக்கியம். படிப்பு விஷயமா யார் கிட்டயாவது பேசியிருப்பாள். அதைப்போய் தப்பா எடுத்துக்காதே! லஷ்மி! நம்ம புள்ளைக மேலே நாம் நம்பிக்கை வைக்கணும். அவ நம்ம பொண்ணு! புரியுதா?’’‘‘சரி சரி! தப்புதான்! பெத்தவ இல்லையா? எல்லா விசயத்திலயும் எச்சரிக்கையாய் இருக்கிறேன்.’’

‘‘நம்ம புள்ளகை தங்கம். அதுங்க ஒருநாளும் தடம் மாறிப்போகாது. நம்பு! அது படிக்கட்டும்! வேலைக்கு போகட்டும்.’’ ‘‘ம்.ம்! போகட்டும்! சம்பாதிக்கட்டும்! பொட்டப்புள்ளக சம்பாதிச்சு நமக்கா தரப்போறாங்கன்னு ஆளாளுக்கு கேட்கிறாங்க!’’ ‘‘கேட்கிறவங்க கேட்டுட்டு போகட்டும் லஷ்மி. நாம என்ன பலனை எதிர்பார்த்தா குழந்தைகளை படிக்க வைக்கிறோம்? நம்ம கடமையை நாம செய்யுறோம். நம்ம குழந்தைங்க சந்தோஷமாக வாழ்வதுதானே நமக்கு நிறைவு?’’‘‘அது உண்மைதாங்க! நீங்க கணேசன்கிட்ட பணம் எதுவும் கேட்க வேண்டாம். பெரியவதான் நாளை மறுநாள் வந்திடுவாள்ல. வளையலை தர்றேன். அடகு வெச்சி லோனைக்கட்டிடுங்க. இப்பப் படுங்க.’’ என்றவாறே லஷ்மி எழுந்து செல்ல, நித்யா மௌனமாய் அறைக்குள் நுழைந்தாள். மனம் முழுக்க இனம் புரியாத வேதனை படர்ந்தது.

எப்படி? எப்படி அப்பாவை… அவரது உழைப்பைப்பற்றி… அம்மாவின் கனவுகளைப்பற்றி சிந்திக்காமல் போனேன்? ஏழெட்டு மாதங்களே பார்த்துப் பழகிய… விரும்பிய ஒருவனுக்காக எப்படி என்னை பெற்றவர்களை மறக்கத் துணிந்தேன்? அம்மாவிடம் மட்டுமல்ல… தங்கள் காதுபடவே உறவினர்கள் பலர் கேட்டதுண்டு!‘‘இப்படி பொட்டப்புள்ளைகளுக்காக சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் கொட்டி படிக்க வெக்கிறியே? நாளைக்கு உனக்கும் உம் பொண்டாட்டிக்கும் கஞ்சிக்கு என்ன பண்ணுவ?’’ அதற்கும் அப்பா அசர மாட்டார்.

‘‘எம்புள்ளங்க நல்லா வாழுறத பார்த்தால் போதும்யா. வேறென்ன வேணும் எனக்கு?’’ என்பார். தனக்கென்று பத்து பைசா சேர்த்து வைக்காத அப்பாவை விட்டுவிட்டுப் போக எப்படி துணிந்தேன்? என்மீது எத்தனை நம்பிக்கை வைத்து அப்பா என்னை கடன் வாங்கி படிக்க வைத்தார்? அந்தக் கடனை நானல்லவா அடைக்க வேண்டும்? அது அல்லவா என் கடமை? அதைவிடுத்து என்ன காரியம் செய்யத் துணிந்தேன்? என் அப்பாவின் உழைப்பை எப்படி மறந்தேன். எத்தனை நாள் இரவில் கால் வலியால் முனகியிருப்பார்? அப்பாவின் காலடியில் அமர்ந்து எத்தனை நாள் தைலம் தடவி விட்டிருப்போம்? அதையெல்லாம் எப்படி மறந்து போனேன்?

எது என்னை மறக்க வைத்தது? புதிதாய் முளைத்த நேசமா? அதுவா என் கண்ணை மறைத்தது? அடுத்த வீட்டு உமாவிற்கு இருக்கும் அக்கறை ஏன் எனக்கு இல்லாமல் போனது? எத்தனை சுலபமாய் எனக்கான வாழ்க்கையை தேடிக்கொண்டு வெளியேற நினைத்தேன்? அப்படி நான் சென்று விட்டால் என் பெற்றோர்களின் நிலை? என் தங்கைகளின் எதிர்காலம்?கடவுளே! என்ன தவறு செய்யவிருந்தேன்? என் படிப்பு… என் எதிர்காலம் என்றே வாழ்பவர்களை மறந்து சுயநலமாய் இருந்துவிட்டேனே! இல்லை.

இது தவறு. நான் ஒருபோதும் இந்த தவறை செய்யக்கூடாது. என்மேல் என் அப்பா வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டும்!மனோவிற்கு துணிவிருந்தால் என்னை உண்மையாக நேசித்திருந்தால் அவனது பெற்றோரிடம் வாதிடட்டும். பேசி சமாதானம் செய்யட்டும். அதை விட்டு வீட்டை விட்டு வெளியேறுவது எப்படி சரியாகும்? இந்த களங்கத்தை எப்படி என் பெற்றோர் தாங்குவர்? நான் எப்படி இதைச்செய்யத் துணிந்தேன்? கட்டிலில் அமர்ந்து நெற்றியை இறுகப்பற்றிக்கொண்டு சிந்திக்கத் துவங்கினாள். வெகுநேர சிந்தனைக்குப் பின் அலைபேசியை எடுத்தாள்.

‘‘டியர் மனோ! ஸாரி! என்னால் நாளை உன்னுடன் வர இயலாது. இன்னும் இரண்டு மாதத்தில் என்னுடைய படிப்பு முடிந்துவிடும். நான் வேலைக்குப் போக வேண்டும். என் படிப்பிற்காக அப்பா வாங்கிய கடனை அடைக்க வேண்டும். என்னால் முடிந்த அளவிற்கு தங்கைகளுக்கு உதவ வேண்டும்! அம்மா, அப்பாவிற்கு கொஞ்சம் வைப்பு நிதி போட வேண்டும். இப்படி எனக்கு நிறைய கடமைகள் இருக்கிறது மனோ! வீட்டிற்கு தலைமகள் நான்! மகனுக்குரிய கடமைகள் மகளுக்கும் இருக்கிறது. அந்தக்கடமைகளை விட்டுவிட்டு உன்னுடன் என்னால் வர இயலாது.

என் அப்பா என்மீது வைத்துள்ள நம்பிக்கையை என்னால் பாழாக்க முடியாது. நான் உன்னை விரும்பியது விரும்புவது உண்மை! என் அன்பின் மீது உனக்கும் நம்பிக்கை இருக்கிறது என்றால் எனக்காக காத்திரு. என் கடமைகள் நிறைவேறிய பிறகு என்னைப் பெற்றவர்களின் சம்மதத்தோடு உன்னைக் கரம் பிடிப்பேன். அதற்குமுன் நீ வேறு யாரையேனும் திருமணம் செய்துகொண்டால் நிச்சயம் என் வாழ்த்துக்கள் உண்டு! உன் முடிவு எதுவாயினும் எனக்கு சம்மதமே! பை!’’  என டைப்செய்து மனோவிற்கு அனுப்பிவிட்டு தங்கைகளுக்கு நடுவே படுத்துக் கொண்டபோது அதுவரை அவளை அழுத்திக்கொண்டிருந்த பாரம் விலகி மனம் லேசாகிப் போனது.

தொகுப்பு: கலைவாணி சொக்கலிங்கம்