Jun 18, 2021
சிறப்பு கட்டுரைகள்

SACA (Stand against child abuse)

நன்றி குங்குமம் தோழி

‘மாமா மாமா... ப்ளீஸ் மாமா... ப்ளீஸ்... என்ன விடுங்க மாமா’ என சிறுமியின் சிணுங்கலோடு பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படமாக ‘சாகா’ (SACA-Stand against child abuse) மார்ச்-8 மகளிர் தினத்திற்கு முதல் நாள் பிரசாத் ஸ்டுடியோவில் வெளியானது. படத்தின் ஹைலைட் பத்ம சங்கர்மகாதேவன் பாடிய ‘சாகா ஆன்தம்’ (SACA anthem).

‘நீ என்ன மாயம் செய்தாய்’ படத்தின் இசையமைப்பாளர் டேவிட் பரத் குமார் இசையில் பாடல் அனைவரின் கவனத்தை வெகுவாய் ஈர்த்தது. ‘பெண்ணை தெய்வம் என்பார், நாட்டின் கண்கள் என்பார் அந்த வார்த்தைகள் பொய்தானோ?’ என பாடலின் முதல் பகுதி மெலோடியாக ஆரம்பித்து... ‘கதறல் சத்தம் மறைந்து போகவே மிகக் கடுமையான சட்டம் வந்து காத்து நிற்கட்டும்...’ என இரண்டாம் பகுதி தீர்வாய் முடிகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் அதில் ‘லெட்ஸ் சாகா’ (Let’s SACA) என விரல் உயர்த்த, சிலர் தங்கள் உணர்வுகளையும் பதிவு செய்திருந்தனர். படத்தின் இறுதியில் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி தன் கருத்துக்களை மிக நீண்ட உரையாடலாகப் பேசியிருந்தார்.

ஆண்- பெண் ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கி அனைவரும் சமம் என்ற விசயத்தை குழந்தையில் பெற்றோர் விதைக்க வேண்டிய முக்கியத்துவம், பெற்றோரிடம் குழந்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசும் சுதந்திரம், இனி ‘குட் டச்... பேட் டச் கிடையாது. எப்பவுமே ‘டோன்ட் டச்தான்’  போன்ற கருத்துக்களை படம் பேசுகிறது.

‘நீ மட்டும் அன்னைக்கு வெளிய போகாமல் இருந்திருந்தா’ எனும் அம்மாவின் விசும்பலுக்கு.. ‘நான் மட்டும் வெளியில் போகாமல் இருந்திருந்தா வேற ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டிருப்பா.. எங்க போய் எங்களை ஒழியச் சொல்றீங்க? வீட்டுல.. ஸ்கூல்ல.. காலேஜ்ல.. பஸ்ல.. கேவலம் டாய்லெட் போற இடத்தில.. ஏன் கோயில்லகூட வைத்து சின்னாபின்னப் படுத்தியிருக்காங்க…’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.

படத்தின் இறுதியில் அந்த அப்யூஷர் யாரு என்கிற கேள்விக்கு..? ‘யாருன்னு சொல்றது, அவன் ஒரு குழந்தைக்கு அப்பா... ஒரு தங்கைக்கு அண்ணன்.. .மனைவிக்கு கணவன்... ஒரு தாய்க்கு மகன்... இந்த சமுதாயத்தில் சக மனுஷன்... அவன் உங்களில் ஒருத்தன்’ என முடிப்பது சமுதாயத்தை நோக்கி விரல் நீட்டுவதாக இருந்தது.

இயக்குநர் பாரதிபாலா இயக்கத்தில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளான குழந்தையாக பேபி மோனிகா தனது தேர்ந்த நடிப்பை சிறப்பாய் வெளிப்படுத்தி இருந்தார். மனநலம் பாதிக்கப்பட்டு, சம்பவத்தில் இருந்து மீளாத இளம் பெண்ணாக நடிகை ஜான்வி கூடுதல் சிறப்பு சேர்த்திருந்தார். இவர்களோடு மாஸ்டர் மகேந்திரன், நடிகை  ஸ்ரீரஞ்சனி, நடிகர் ராமநாதன், கயல் மணி அரவிந்த் ஆகியோரும்கைகோர்த்திருந்தனர். பாடல் மற்றும் குறும்படத்தை உருவாக்கிய பிரம்மாக்களான இசையமைப்பாளர் டேவிட் பரத்குமார் மற்றும் ஆசிரியர் விருட்சம் ஆனந்தியிடம் பேசியபோது...

இயல்பில் நான் சினிமாக்காரன். மியூசிக்கலா நிறையவே ஈவென்ட்ஸ் மேனேஜ்மென்ட்களை செய்து வருகின்றேன். ‘நல்லதை விதைத்தால் நல்லதே முளைக்கும்’ எனும் குறிக்கோளில், ‘போதி’ என்கிற அமைப்பை, எதிர்கால சந்ததியான குழந்தைகள் நலன் சார்ந்து இயக்கி வருகிறோம். நண்பர்களாய் எங்கள் இருவரின் நோக்கமும் ஒன்றாக இருந்தது. பெண் குழந்தைகள் தொடர்ச்சியாய் வன்புணர்வாகி கொல்லப்படுவது எங்கள் மனதை என்னவோ செய்ய,முதலில் அதைக் கையில் எடுத்தோம் என்கின்றனர் அழுத்தமாய்.

சைல்ட் அப்யூஸ்க்கு எதிராய்... தீர்வாய்... ஒரு பாடலை எங்களுக்குத் தெரிந்த வழியில்.. வலியோடு.. மெலோடியாகச் சொல்ல நினைத்தோம். இந்த பாடல் உருவானது. பாடலை சங்கர்மகாதேவன் சார் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்து, களமிறங்கினோம். சைல்ட் அப்யூஸ்க்கு எதிரான விழிப்புணர்வு பாடல் என்றவுடன், எனது மியூசிக் கம்போஷிங்கையும் கேட்டபிறகே பாடுவதற்கு அவர் சம்மதித்தார். அவரின் குரலில் பாடல் முழுமை பெற, தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியையும் காட்சிப்படுத்த நினைத்து உருவானதே சாகா(SACA) குறும் படம்.

சமுதாயத்திற்குத் தேவையான ஒரு டிமான்டிங் இஸ்யூ. அதை அடிச்சு நொறுக்க வேண்டும் என்கிற கோபம்எல்லோருக்குள்ளும் வரவேண்டும். இந்த சிந்தனைப் புள்ளியில் தங்களை அடையாளப்படுத்திய பிரபலங்கள் பலரையும் சலிக்காமல் தொடர்ந்து அணுகினோம். சிலர் முன் வந்தாலும், பலரும் ஒத்துழைக்க மறுத்தார்கள்.  கொரோனாவுக்கு முன்பே தொடங்கிய பணிகள், இரண்டாண்டுகளைக் கடந்தும் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், பல வழிகளில் நிராகரிப்புகளைச் சந்தித்த கசப்பான அனுபவங்களும் சேர்ந்தது என்கின்றனர் இருவரும்.

இந்தக் குறும்படம் திருந்துவதற்கான விசயம் இல்லைதான். ஆனால், நாம் பூவாய், தளிராய், புன்னகையாய் ரசிக்கும் பிஞ்சுக் குழந்தைகளை, நம்மில் ஒருவன் தவறாய் பார்க்கிறான் என்றால், அவனின் அடிப்படை மனோநிலைதான் என்ன? அவன் வளர்ப்பில் எங்கிருந்து குற்றம் ஆரம்பிக்கிறது? அதனை காட்சிப்படுத்தி, சத்தமாகச் சொல்லிவிட்டோம். எல்லோரும் கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்றவாரே, தங்கள் பயணத்தின் அடுத்த அடி நோக்கி இருவரும் விடைபெற்றனர்.

குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகளில்...

*உலக நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடமும், மாநில பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

*இந்தியாவில் ஒவ்வொரு 155  நிமிடத்திற்கும் 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வன்புணர்வுக்கு உள்ளாகிறது. தமிழகத்தில் ஒருநாளைக்கு நான்கு குழந்தை பாதிப்பை சந்திக்கிறது.

*22% குழந்தைகள் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கும், 51% குழந்தைகள் பிற பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகிறார்கள்.

*தெருவோரக் குழந்தைகள், வேலை செய்யும் குழந்தைகள், நிறுவனங்களில் தங்கியிருக்கும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை அதிகம் பதிவு செய்துள்ளனர்.

போக்சோ சட்டம் சொல்வதென்ன?

*2012ல் இருந்து செயல்பாட்டில் உள்ள போக்சோ சட்டம், 18 வயதுக்குள் இருக்கும் அனைத்துக் குழந்தைகளையும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்டது.

*சட்டப்பிரிவு 3 மற்றும் 4ல் குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம். இதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகளும், அதிகபட்சம் ஆயுள் தண்டணையுடன் அபராதமும் விதிக்கப்படும்.

*சட்டப்பிரிவு 5 மற்றும் 6ல் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையுடன் அபராதமும் வழங்கப்படும்.

*சட்டப்பிரிவு 7 மற்றும் 8ல் குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்வது, அவர்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, மற்றவரின் அந்தரங்க
உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். இதில் குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகளும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும்.

*சட்டப்பிரிவு 9 மற்றும் 10ல் குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர் குழந்தையின் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சம் 7 ஆண்டு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

*சட்டப்பிரிவு 11 மற்றும் 12ல் குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, பாலியல் இச்சைக்கு அழைப்பதும் குற்றம். இதில் குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
வழங்கப்படும்.

*சட்டப்பிரிவு 13 மற்றும் 14ல் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தயாரிப்பது, எடுப்பது, விற்பது, மற்றவருக்கு கொடுப்பது குற்றம். இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் அபராதத்துடன் சிறை தண்டனை வழங்கப்படும்.

*சட்டப்பிரிவு 18ல் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

*குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

*குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. இதற்கு குற்றம் இழைத்தவருக்கான பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.

*போக்சோ சட்டத்தில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, மரண தண்டனை என்ற சட்டத்திருத்தத்தை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்:ஆ.வின்சென்ட்பால்