Sep 28, 2022
சிறப்பு கட்டுரைகள்

தாதியர்களின் தாதி..!! ‘சூலகிட்டி நரசம்மா’

நன்றி குங்குமம் தோழி

ஒரு நாட்டின் ஆரோக்கியத்தைக் குறிக்கும் குறியீடுகளில் “மகப்பேறு மரண விகிதம்” (Maternal mortality rate) எனும் கர்ப்பம் மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படும் பெண்களின் மரணங்களும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா...? அறிவியல் வளர்ச்சி மிகுந்துள்ள இந்நாளிலும் உலகின் மிகச் சிறிய நாடுகளே இந்த விகிதத்தைக் குறைக்க இன்றும் போராடி வரும் நிலையில், இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு கிராமத்துப் பெண்மணி இதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? அவர்தான் சூலகிட்டி நரசம்மா.

நரசம்மா என்று பெயரிலேயே இருந்ததாலோ என்னவோ, இயல்பாகவே சேவை புரியும் மனமும் அவருக்கு அதிகமிருந்திருக்கும் போல. அதிலும் மற்றவர்களுக்கு பிரசவம் பார்ப்பதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து ‘சூலகிட்டி’ நரசம்மா என்று மக்களால் பாசமாக அழைக்கப்பட்டார். ‘சூலகிட்டி’ என்றால் கன்னட மொழியில் ‘பிரசவத்திற்கான மருத்துவச்சி’ என்று பொருள்.

கர்நாடக மாநிலத்தின் தும்கூர் பவகடா மாவட்டத்தின் கிருஷ்ணபுரம் என்ற கிராமத்தில், 1920ல் பிறந்தவர் நரசம்மா. இவரின் தாய்மொழி தெலுங்கு. இவரின் முன்னோர்கள் பிழைப்புக்காக ஆந்திராவில் இருந்து கர்நாடகத்துக்கு குடிபெயர்ந்திட, நரசம்மாவின் பாட்டி முதல் அவரின் குடும்பத்துப் பெண்கள் பலரும் பிழைப்போடு, பாரம்பரியமாய் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் மருத்துவச்சித் தொழிலையும் அருகில் உள்ளவர்களுக்கு செய்துதுள்ளனர்.

சாலைப் போக்குவரத்து, பள்ளிக்கூடம் என எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் பிறந்து வளர்ந்த விளையாட்டுப் பெண்ணான நரசம்மாவுக்கு அவரின் 12 வயதில் தாய்மாமனோடு திருமணம் நடந்திருக்கிறது. பிள்ளை பெறுவதும், குழந்தை வளர்ப்பதும் பெண்ணின் மரபணுவிலே பதிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில், அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்ததுமே இறக்க நேரிட, நரசம்மாவுக்குள் அது பெரும் வலியாய் மாறியது.

தனக்கு நேர்ந்தது போல் யாருக்கும் இந்த துயரம் நேரக்கூடாது என்ற முடிவோடு, தன் 18 வயதில், தன்னுடைய பாட்டி மரிகெம்மாவிடம் பிரசவம் பார்க்க பாடம் கற்கச் சென்றாராம் நரசம்மா. இதில் தொடர்ந்து பாட்டிக்கு உதவினாலும், 1940ல் தன்னுடைய 20 வயதில் தன் பாட்டியைஅருகில் வைத்துக் கொண்டு, தன் அத்தைக்கு பிரசவம் பார்த்ததே தன் வாழ்வின் முக்கியத் திருப்புமுனை எனக் குறிப்பிடும் நரசம்மா, ‘நரசு.. உனது கைகளில் ஏதோ தனித்துவமான சக்தி உள்ளது.

இந்த முறை எனக்கு நடந்த பிரசவத்தில்தான் நான் நிம்மதியாக பயமின்றி இருந்தேன்’ என்று அத்தை சொன்ன வார்த்தைகளே, தொடர்ந்து பதினைந்தாயிரம் குழந்தைகள் வரை பிரசவிக்கத் தூண்டுகோலாகவும் அமைந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் சுகப்பிரசவத்திற்குப் பிறகு, ‘தாயும் சேயும் நலம்’ என்று குழந்தையின் குடும்பத்தாரிடம் தான் பகிர்ந்த தருணங்களை மறக்கவே முடியாது என்றும் நெகிழ்வோடு குறிப்பிட்டுள்ளார்.

ஆம்.. இருபது வயதில் தொடங்கிய நரசம்மாவின் இந்தப் புனிதப்பயணம் அவரது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. தனது கிருஷ்ணபுரம் கிராமத்தில் மட்டுமல்லாது, மருத்துவ வசதிகளே அற்ற அருகாமை கிராமங்களுக்கும் சென்று பிரசவம் பார்த்துள்ளார். தன்னுடைய ஏழ்மையான நிலையிலும் பணம் பெற்றுக் கொள்ளாமலே சேவையைத் தொடர்ந்ததால், ‘சூலகிட்டி நரசம்மா’ என்று மக்கள் பாசத்துடன் அழைக்கத் தொடங்கினர்.

வருடங்கள் கடக்க பெண்கள் பிரசவிப்பதும், தான் அவர்களுக்கு பிரசவம் பார்ப்பதும் தனி கலை என்பதை உணர்ந்தவர், தன் அருகே இருந்த பெண்கள் கருவுற்ற சமயத்தில் ஆலோசனைகளையும் வழங்கி, குழந்தைகள் இறப்பு நேராமல் தவிர்க்கவும் உதவினார். சேவையை விரிவுபடுத்த நினைத்தவர், தனது குடும்பத்துப் பெண்கள் பலருக்கும் பிரசவம் பார்க்கக் கற்றுக் கொடுத்தார். தன் முதல் பெண்ணான அஞ்சினம்மாவை வைத்தே தனக்கு பிரசவம் பார்க்க வைத்து, தனது பன்னிரெண்டாவது குழந்தையைபிரசவித்தார் நரசம்மா.

‘குழந்தைகள் பிறப்பில் அல்ல..அக்குழந்தைகளுக்கு தாய் மறு பிறவி எடுப்பதில்தான் மகிழ்ச்சி நிறைந்துள்ளது’ என்பதை உணர்ந்த நரசம்மா, பெண்களுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் பயம், பரிதவிப்பு போன்ற உணர்ச்சிகளை நம்பிக்கையான வார்த்தைகளை உதிர்ப்பதன் மூலமாக  தைரியமூட்டி வழிகாட்டினார்.

அவர் கர்ப்பமாய் இருந்த காலத்தில் பாட்டி மரிகெம்மா, 10 கிலோமீட்டர் நடந்தே வந்து சத்தான உணவுகளை வழங்கிச் சென்றாராம். அதையே பின்பற்றி தன்னிடம் பிரசவம் பார்க்க வரும் வசதியற்றப் பெண்களுக்கு, தானே விவசாயம் செய்து விளைவித்த ராகியால் செய்த உணவுப் பதார்த்தங்களை வழங்கியுள்ளார். தனது கிராமத்திற்கு தற்காலிகமாய் வரும் நாடோடி இனப் பெண்களுக்கும் இலவசமாகப் பிரசவம் பார்த்துக் கொடுத்ததோடு, அவர்களின் பாரம்பரிய இயற்கை மருத்துவத்தைக் கற்றுக்கொண்டு, கர்ப்ப காலத்தில் தன்னை நாடி வரும் பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தியுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தோடு, கருவில் வளரும் குழந்தையின் அசைவு, துடிப்பு போன்றவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதோடு, பிரசவகால இடையூறுகளை முன்பே கணித்து மகப்பேறு மரணங்களைக் குறைத்திடவும் உதவி புரிந்துள்ளார். பாரம்பரிய தாதியரிடையே இருக்கும் பிடிவாத குணம் சிறிதுமின்றி, பிரசவ நேரத்தில் சிக்கல்கள் ஏற்படும்போது, அவர்களைத் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு உடன் அழைத்துச் சென்று, பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.

எழுபதாண்டுகளில் ஏறத்தாழ பதினைந்தாயிரம் பிரசவங்கள், அனைத்தும் இலவசமாக என அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியவர் நரசம்மா. 2007 வரை, கிருஷ்ணபுரம் மற்றும் அதன் அருகாமை கிராமங்களில் மட்டுமே தெரிந்திருந்த அவரின் பெயர், பிரபல கன்னட எழுத்தாளர்கள் பாஹா. ராமகுமாரி மற்றும் அன்னபூர்ணா வெங்கடராஜப்பா ஆகியோரின் முனைப்பால், நரசம்மாவின் 87 வயதில் மாநில அளவில் தெரியத் தொடங்கியது.

தனது 94ம் வயதில், 2014ல் தும்கூர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் கிடைக்கப் பெற்றார் சூலகிட்டி நரசம்மா. தொடர்ந்து கிட்டூரு ராணி
சென்னம்மா விருது, தேவராஜ் அர்ஸ் விருது, கர்நாடக ராஜ்யோத்சவ விருது என மாநிலத்தின் பல்வேறு விருதுகளும், புகழும் நரசம்மாவைத் தேடி வந்தது. இவரது உயரிய பணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இவரின் 98 வயதில் 2018ல் பத்ம விருது வழங்கி இந்திய அரசால் சூலகிட்டி
நரசம்மா கௌரவிக்கப்பட்டார்.

வயது மூப்பிலும் பார்வை மற்றும் செவித்திறன் குறையேதுமின்றி வலம்வந்த நரசம்மா, நன்கு விளைந்த நிலக்கடலை, ராகி உணவு வகைகள், அவ்வப்போது சேர்த்துக் கொள்ளும் ‘சக்கனா’ என்ற சுவைமிக்க ஆட்டுக்கறி ஆகியவையே தன்னை இறுதிவரை ஓட வைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பன்னிரெண்டு குழந்தைகளுக்குத் தாயாக, 32 பேரக் குழந்தைகளுக்கு பாட்டியாக முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த நரசம்மாவைத் தேடி பல்வேறு விருதுகள் வந்தபோதிலும், தனது மகள் உட்பட ஏறத்தாழ 200 பெண்களை தாதியர்களாகத் தான் பயிற்றுவித்ததே தனக்கு மனநிறைவை அளித்தது என்கிறார் நினைவுகளில் மூழ்கியவராய்.

அன்பு, பாசம், பொறுமை, சேவை மனம் நிறைந்த இந்த மூதாட்டி தனது 98 வயதில், டிசம்பர் 25, 2018ல் நுரையீரல் நோயால் இயற்கை எய்தினார்.. யோசித்துப் பார்த்தால், ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், அவர்களுக்கு அதை எளிதில் கிடைக்கச் செய்வதுதான் எந்தவொரு நலத்திட்டத்தின் நோக்கமாகவும் இருக்கும். இத்தகைய வரையறைகள் எதையும் அறியாமலே மகப்பேறு மருத்துவத்தின் மிகப்பெரிய நலத்திட்டத்தை தனது வாழ்விடத்திலே உருவாக்கி அதைச் செய்கிறோம் என்பதைக்கூட உணராமலே, அத்தனையும் தன்னுடைய பாசத்தாலும், நேசத்தாலும் செயல்படுத்தியவர் டாக்டர் சூலகிட்டி நரசம்மா என்ற தாதியர்களின் தாதி..!

படங்கள்: ஜி.சிவக்குமார்