Jun 18, 2021
சிறப்பு கட்டுரைகள்

பக்லைட்

நன்றி குங்குமம் தோழி

கணவரின் இறப்பில் வாழ்க்கையை கண்டெடுத்த சந்தியா! 

ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி படம்தான் பக்லைட். தமிழில் பக்லைட் என்றால் பித்துபிடித்தவர் என்றும் சில சமயம் முட்டாள்தனத்தையும் குறிக்கும். திருமணமான ஐந்தே மாதங்களில், நம் கதாநாயகி சந்தியாவின் கணவர் ஆஸ்திக் இறந்துவிடுகிறார். ஆஸ்திக்கின் பெற்றோர்கள் மிகுந்த துயரத்தில் இருக்க, சந்தியாவால் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தமுடியவில்லை. சமூக வலைத்தளத்தில், கணவனின் இறந்த பதிவுக்கு எத்தனை லைக்கும் கமெண்டும் வந்துள்ளன என்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறாள்.

திருமணமான ஐந்து மாதங்களில், சந்தியாவும் - ஆஸ்திக்கும் சில நிமிடங்கள் கூட மனம் விட்டுப் பேசியதில்லை. இதனால் இந்த மரணத்தை சந்தியா அலட்சியமாகவே அணுகுகிறாள். வந்திருப்பவர்கள் அனைவருமே சந்தியா மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால் இப்படி நடந்து கொள்கிறாள் என நினைக்கிறார்கள்.

இந்தப் படத்தை மிகவும் உணர்ச்சிபூர்வமாகவோ அல்லது ட்ராமா பாணியிலோ இயக்குனர் உமேஷ் பிஷ்ட் கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் அவர் இதை டார்க் காமெடியாகவும், ஃபீல் குட் மூவியாகவும் உருவாக்கியிருப்பது ப்ளஸ்.

உத்தரப்பிரதேசத்தில் வசித்து வரும் வழக்கமான கூட்டுக் குடும்ப பின்னணியில் கதை தொடங்குகிறது. கதைப்படி, ஒருவர் இறந்து தகனம் செய்ததும், அடுத்த 13 நாட்களுக்கு, நெருங்கிய உறவினர்கள் சூழ அந்த வீட்டில் துக்கம் அனுசரிக்கப்படும். அந்த 13 நாட்களும் உப்பு, காரம் இல்லாத வீட்டு உணவையே சாப்பிட வேண்டும். வெளியில் உணவை வாங்கி சாப்பிடக் கூடாது. ஆனால் நம் கதாநாயகி ரகசியமாக சென்று பானிபூரி சாப்பிடுகிறாள். சிப்ஸும், கூல்ட்ரிங்கையும் மறைத்து வைத்து உண்கிறாள்.

இங்கு பல குடும்பங்களில், பெண்களில் தன் கணவனுடன் எந்த விதமான இணக்கமும் புரிதலும் இல்லாமல் “நாலு பேர் என்ன பேசுவாங்க?” என்பதால், அந்த நாலு பேருக்காக மட்டுமே சேர்ந்து வாழ்கின்றனர். ஒரு பெண், தன் கணவன் இறந்து போனால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்த சமூகம் அவள் மீது வைத்திருக்கும் கோட்பாட்டை இந்த திரைப்படம் உடைக்கிறது.

இதற்கிடையே சந்தியாவின் தோழி நாசியா சைதி துக்கம் விசாரிக்க வருகிறாள். அவளது பெயரே அந்த வீட்டில் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. அவளுக்கென தனி காஃபி டம்ளர் கொடுக்கப்படுகிறது. அவளுடன் யாரும் நெருங்கி பழகவோ, ஒன்றாக சாப்பிடவோ தயாராகயில்லை. சந்தியா தன் தோழியிடம், “எனக்கு அழுகையே வரல. நல்லா பசிக்குது” என்கிறாள். சடங்கு என்கிற பெயரில் வெறும் பெயருக்காக கடைபிடிக்கப்படும் பழக்கங்களையும் இந்த படம் வெளிப்படையாகவும் கிண்டலாகவும் அணுகியுள்ளது.

கணவன் இறந்து துக்கம் அனுசரிக்கப்படும் அந்த 13 நாட்களில், சந்தியா தனக்கான வாழ்க்கையை தேடி கண்டுபிடிக்கும் படம்தான் பக்லைட். மிகவும் தீவிரமான கருவைக் கொண்டிருந்தாலும், அதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பதால். கதை பாரமாக இல்லை. இறந்த ஆஸ்திக் குறித்து ஒரு ரகசியம் தெரிய வருகிறது. சந்தியா அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தன் கணவன் குறித்த பல தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது.

சந்தியாவைச் சுற்றியே கதை நகர்ந்தாலும், பிற  கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. சந்தியாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என அவள் அப்பா சொல்ல, ஏற்கனவே வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களை என்ன செய்வது என்று அம்மா கேட்கிறாள். இப்படி உறவினர்களாக வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே மனிதனுக்கே உரிய நிறை குறைகளுடன் இருக்கிறார்கள். அவர்களை கெட்டவர்கள் என முழுமையாக ஒதுக்கவும் முடியவில்லை, அருமையானவர் என்று அரவணைக்கவும் இயலவில்லை.

‘‘பெண் எப்போது சுயமாக சிந்திக்க தொடங்குகிறாளோ, அப்போது இந்த சமூகம் அவளை பித்துப்பிடித்ததாக (பக்லைட்டாக) சித்தரிக்கிறது” எனக் கூறும் சந்தியாவின் கதாபாத்திரமும், கதை நகர நகர, குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையை நோக்கி நகர்கிறது. வாழ்க்கையில், நமக்கான முடிவுகளை நாம் எடுக்க தவறும் போது, மற்றவர்கள் அதை கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறார்கள் என்கிறது பக்லைட்அமீர் கானுடன் தங்கல் படத்தில் நடித்த சனயா மல்ஹோத்ரா, இங்கு சந்தியாவாக நடிப்பில் மிளிர்கிறார். சயானி குப்தா, படத்தில் சில நிமிடங்களே தோன்றினாலும், திரைக்கதையில் திருப்புமுனையாக இருக்கிறார்.

சந்தியா தனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் பயணமாக இந்த 13 நாட்கள் இருந்தாலும், அழுத்தமான கதைக்களம் இல்லாததால், அதில் நம்பகத்தன்மை இல்லை. முதல் முறையாக இசையமைப்பாளர் அவதாரத்தை ஏற்றிருக்கும் பாடகர், அர்ஜித் சிங்கின் பாடல்கள், மனதில் நிற்கவில்லை. மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்களாக அசுதோஷ் ராணாவும் ஷீபா சத்தாவும் கச்சிதமான பொருத்தம். உறவினர்களின் சுயநலத்திற்கு நடுவே, ஆஸ்திக்கின் பெற்றோர்களின் துயரம் மட்டுமே உண்மையாக இருக்கிறது. இன்னும் பல ஆழமான பாகுபாடுகளையும், மரணத்தைச் சுற்றியிருக்கும் மூடநம்பிக்கைகளையும் இந்த படம் கேள்வி கேட்க தவறியிருக்கிறது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்