Sep 23, 2021
சிறப்பு கட்டுரைகள்

நான்தான் உங்க Gator Buddy

நன்றி குங்குமம் தோழி

சமீப காலமாக இணையத்தில் முதலை ஒன்று தன் நண்பர்களான முயல், ஒட்டகச்சிவிங்கி, சிங்கம், யானை... இவர்களுடன் நடைபெறும் சிறு உரையாடல் கொண்ட கார்ட்டூன் வைரலாகி வருகிறது. கேட்டர் என்று அழைக்கப்படும் அந்த முதலையை வடிவமைத்து இருப்பவர் மலேசியாவை சேர்ந்த சௌ ஹோன்லாம்.

‘‘பொதுவாகவே எல்லாரும் முதலையை பார்க்கும் போது அதன் நீண்ட வாய், கூர்மையான பற்கள், உறுதியான வால்களை நினைத்து பயமாக இருக்கும். உயிரியல் பூங்காவில் வாயைத் திறந்து கொண்டு அசையாமல் படுத்து இருப்பதை பார்க்கும் போது மனசு கொஞ்சம் பதைபதைக்கும். ஆனால் இந்த காமிக்சில் நீங்கள் வித்தியாசமான மற்றும் தோழமையான முதலையை பார்ப்பீர்கள். அவனைப் போல் நமக்கும் ஒரு நண்பனோ/தோழியோ இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே இந்த முதலையை வடிவமைச்சிருக்கேன்’’ என்ற சௌ ஹோன்லாம் தன்னைப் பற்றியும் தன் கார்ட்டூன் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘என்னைப் பொறுத்தவரை மனிதர்களின் பின்னணியில் மட்டுமல்ல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அழகான கதை இருக்கும். மிருகம், உணவு, டீ பாட்... ஏன் ஒரு சின்ன உயிரினமாகவும் இருக்கலாம். இவற்றால் பேச முடியாது. ஆனால் நம்மிடம் ஏதோ ஒன்று சொல்ல நினைப்பது போல் தோன்றும். அப்படி அவர்கள் ெசால்ல நினைப்பதை தான் காமிக்ஸ் வடிவத்தில் என்னுடைய கற்பனையில் உருவாக்கினேன்.

மிகவும் மன உளைச்சலுடன் வாழ்ந்து வரும் இந்த உலகத்தில் என்னுடைய இந்த சிறிய கார்ட்டூன் படம் மக்களுக்கு முகத்தில் ஒரு சிரிப்பை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது தான் கேட்டர் கதாப்பாத்திரம்’’ என்று கூறும் சௌ பிரபல நிறுவனங்களான நைக், ரீபாக், கூகில் எக்ஸ் டெனார், ஆர்ஆசியா ஏர்லைன்ஸ் போன்ற பல பிராண்டுகளுக்கு டி-ஷர்ட் டிசைன் செய்வது மட்டுமில்லாமல் அவர்களின் விளம்பர போஸ்டர்களும் வடிவமைத்து வருகிறார்.

மலேசியாவில் டீன்ஏஜ்களிடம் சௌ மிகவும் பிரபலம். இவர் வடிவமைத்துள்ள லட்சக் கணக்கான டி-ஷர்டுகள் இளசுகளின் ஃபேவரெட். 2010ம் ஆண்டு ‘பிளையிங் மவுஸ்’ என்ற ஒரு பிராஜக்ட்டை துவங்கிய சௌ அதன் மூலம் தினமும் ஒரு டி-ஷர்ட் வடிவமைப்பது என ஒரு வருடம் வடிவமைத்தார். தற்போது ‘த டெய்லி லைவ்ஸ் ஆப் ஃபுட் அண்ட் டிரிங்க்’ என்ற தலைப்பில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் குறித்து உண்மை மற்றும் கற்பனை இரண்டையும் கலந்து விளக்கப் படங்களை வரைந்து வருகிறார்.

‘‘பிளையிங் மவுஸ் பிராஜக்ட் செய்த போது நான் வேற எந்த வேலையும் செய்யவில்லை. முழுக்க முழுக்க அதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். காரணம் இன்று என்ன வரைய வேண்டும் என்று யோசித்து அதை வரைய வேண்டும், அதற்காகவே என் ஒரு முழு வருடத்தை அர்ப்பணித்தேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே வரைய பிடிக்கும். நான் பள்ளி படிப்பை முடித்து வெளியே வந்த போது என்னுடைய மனதில் இருந்த ஒரே விஷயம் சித்திரம் வரைய வேண்டும் என்பது தான். கல்லூரி படிக்கும் போது பகுதி நேர வேலையாக டிசைனிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அப்படித்தான் என் டிசைனிங் பயணம் ஆரம்பித்தது.

நான் வடிவமைக்கும் ஒவ்ெவாரு டிசைன்களும் ஒரு கதை சொல்வது போல இருக்கும். காரணம் எனக்கு கதை படிக்க பிடிக்கும். நான் படித்ததை மற்றவர்களுக்கு கார்ட்டூன் மூலமாக சொல்கிறேன். மேலும் நம்மை சுற்றி இருக்கிற ஒவ்வொரு பொருட்களுக்கு பின்னணியில் ஒரு கதை இருக்கும். அதில் என் கற்பனை வளத்தை சேர்த்து ஒரு விளக்கப்படமாக கொடுக்கிறேன். இதற்கு மொழி அவசியமில்லை. நாம் வரையும் படங்களே அதில் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை சொல்லிவிடும்.

யோசனை மற்றும் அதை செயல்படுத்துதல் இது இரண்டும் ஒரு டிசைனருக்கு மிகவும் அவசியம். அது மட்டுமில்லாமல் அதை திறமையாக வெளிப்படுத்த வேண்டும். என்னுடைய சக்சசுக்கு அது தான் காரணம்னு நினைக்கிறேன்’’ என்றவர் ஒரு நல்ல ஓவியர். தன் திறமையை பூட்டி வைக்காமல் உலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டுமாம். ‘‘டிசைனிங் துறை நாம் நினைப்பது போல் ரோஜா மலர் இதழ்களால் நிறைந்த படுக்கை கிடையாது. முட்கள் நிறைந்த கடுமையான பாதை. இதில் நீங்கள் உங்க திறமையை எவ்வளவு வெளிப்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். அப்போது தான் உங்களை பற்றி எல்லாருக்கும் தெரிய வரும்.

திறமையான டிசைனர் என்றால் அவர் தன்னை ஒரு அறைக்குள் பூட்டி வைத்துக் கொள்ளாமல் தைரியமாக ெவளிப்படுத்த வேண்டும். இப்போது தான் நிறைய சமூக வலைத்தளங்கள் இருக்கே. உங்க திறமைக்கான பெஸ்ட் பிளாட்ஃபார்ம் அதுவாக கூட இருக்கலாம். தற்போது ‘லிமிடெட்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். ‘வீ சாட்’ என்ற சாட் ஆப்பிற்கான ஸ்மைலிகளை தயாரிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு தெரியாததை பார்க்காததை வரையாதீர்கள். ஆனால் அவர்கள் சிந்திக்காத விஷயத்தை பற்றி வரையுங்கள்’’ என்ற சௌ ஹோன்லாம், பெஸ்ட் கான்செப்ட், பெஸ்ட் பிரிண்டெட், நியகம்மர், ரைசிங்பர்சனாலிட்டி, டாப் 10 டிசைனர், பெஸ்ட் டிஜிட்டல் ஆர்ட் வர்க் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: ஷன்மதி

படங்கள்: ஜி.சிவக்குமார்