Sep 19, 2021
சிறப்பு கட்டுரைகள்

விஸ்வமயாவும்.. ஆனி சிவாவும்..

நன்றி குங்குமம் தோழி

கடவுளின் தேசத்தில் என்னதான் நடந்தது?

கடந்த மாதம் இறுதியில் கேரள மாநிலத்தில் இருந்து கிளம்பிய இருவேறு செய்திகள் இணையத்தில் விஸ்வரூபமெடுத்தன. முதல் செய்தி மருத்துவ மாணவி விஸ்வமயா இறப்பு. இரண்டாவது  செய்தி காவல் உதவி ஆய்வாளர் ஆனி சிவாவின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி. கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் விஸ்வமயா அவரது கணவரால் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கி வரதட்சணை கொடுமையின் கோர முகத்தை வெளிச்சமிட...   கேரளப் பெண்கள் வலைத்தளங்களில்  #stopdowry, #justicevismaya போன்ற ஹேஷ்டேக்குகளை டிரென்டாக்கி, வரதட்சணை கொடுக்க மாட்டோம் என தங்கள் வீட்டு வாசலிலே பதாகைகளை ஏந்தினர். இளம்பெண்கள் பலரும் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டே நாட்களில் சிறுவன் ஒருவனோடு காவல்துறை அதிகாரி உடையில் இருக்கும்  இளம் பெண்ணின் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட கேரள காவல் துறை, ‘மன உறுதி மற்றும் நம்பிக்கையின் உண்மையான எடுத்துக்காட்டு ஆனி சிவா’ என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிப் பாராட்ட இதுவும் வலைத்தளங்களில் வைரலானது. கேரளப் பெண்கள் விஷயத்தில் கடவுளின் தேசத்தில் என்னதான் நடக்கிறது?

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த இளம்பெண் விஸ்வமயா. ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு மாணவியாக வலம் வந்த நிலையில்,  மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாய் பணியாற்றிய கிரண்குமார் என்பவருக்கு 100 சவரன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்து பெற்றோர் மணம் முடித்தனர். திருமணமான சிறிது நாளிலே, மேலும் பணம் கேட்டு மனைவியை நச்சரிக்கத் தொடங்கி இருக்கிறார் கிரண்குமார். ஒரு கட்டத்தில் மனைவி விஸ்வமயாவை அடித்துத் துன்புறுத்தியும் வந்துள்ளார். கொடூரத்தின் உச்சமாக ஆணி மற்றும் கட்டைகளாலும் விஸ்வமயா  முகம், கை, கால் மற்றும் தலையில் தாக்கியுள்ளார்.

இத்தகைய சூழலில் கடந்த மாத இறுதியில் விஸ்வமயா மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். கழுத்தில் காணப்படும் காயங்கள் கண்டிப்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக இல்லை என்றும், தன் மகளை கிரண்குமார் அடித்துக் கொன்றுவிட்டதாக போலீஸில் புகார் தெரிவித்தனர் பெற்றோர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர். கணவர் கிரண்குமாரும் காவல்துறையில் சரணடைந்தார்.

இந்நிலையில் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக உடம்பில் ஏற்பட்ட காயங்களைக் காட்டி வாட்ஸ்ஆப் மூலமாக தனது நெருங்கிய சகோதரர் ஒருவருக்கு ஏற்கனவே புகைப்படங்களை அனுப்பி வைத்தும், கணவன் தன்னை கொடுமைப்படுத்தும் விசயங்களை குறுந்தகவல்களாகவும் பகிர்ந்துள்ளார் விஸ்வமயா. இறப்புக்கு முதல் நாள், கணவன் தேர்வுக்கு தன்னை அனுமதிக்கவில்லை என்று அம்மாவிடமும் விஸ்வமயா அழுததாகவும் சொல்லப்பட்டது.

விஸ்வமயா  இறப்பைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் அர்ச்சனா என்கிற 24 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். சுரேஷ் என்பவரை அர்ச்சனா காதலித்துள்ளார். 3 லட்சம் வரதட்சணை கொடுத்த பின்னரும், மேலும் பணம் வேண்டுமென சுரேஷ் குடும்பத்தினர் பிரச்சனை செய்ய, கடந்த 21-ம் தேதி இரவு அர்ச்சனா இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுவும் கொலைதான்  என்று அர்ச்சனாவின் பெற்றோர் கதறுகிறார்கள். அவரைத் தொடர்ந்து ஆழப்புழாவில் 19 வயதான சுசித்ரா என்ற இளம்பெண்ணும் வரதட்சணை பிரச்சனையால்தான் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடவுளின் தேசம்... இந்தியாவிலே படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம்... இடதுசாரி சிந்தனைகளைக் கொண்ட ஆளும் அரசு என்ற பெருமையை பெற்றுள்ள கேரளா, எதையும் துணிந்து எதிர்கொள்ள தெரியாத பலவீனமான மனங்களை கொண்ட மாநிலம் என்ற சோகத்தையும் தன்னுள் புதைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில்தான் மனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற மந்திரத்தை கற்றுக் கொடுத்துள்ளார் துணை ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள தன்னம்பிக்கைப் பெண் ஆனி சிவா.

ஒரு காலத்தில் ஆதரவற்று என் குழந்தையுடன் நான் கண்ணீர் சிந்திய அதே இடத்தில் இன்று நான் துணை ஆய்வாளர் என்னும் ஆனி சிவா  வாழ்க்கைக்கு முக்கியம் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும்தான் என்கிறார். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அத்தனை மேஜிக் மாற்றங்களையும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆனி சிவா.13 வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் வர்க்கலா பகுதியில் வசித்த ஆனி சிவா, அரசு கல்லூரி ஒன்றில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அப்போது தன்னுடன் படித்தவருடன் காதல் வயப்பட, வழக்கம்போல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் பெற்றோர். எதிர்ப்பை மீறி காதலித்தவரை கரம் பிடித்தார். காதல் வாழ்க்கையின் துவக்க இன்பத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதன்பிறகான குடும்ப பிரச்சினையில் ஆனி சிவாவை குழந்தையுடன் நிர்கதியாக்கிவிட்டு, வேறொரு திருமணம் செய்து கொண்டு பிரிந்துவிட்டார் அவரின் கணவர்.   6 மாத கைக்குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு ஆறுதல் தேடி சென்றவரை பெற்றோரும் ஏற்காமல் கதவை சாத்திவிட, தனித்துவிடப்பட்டார் ஆனி.

இருதரப்பினராலும் கைவிடப்பட்ட நிலையில், நான் கைக்குழந்தையோடு தனியொரு பெண்ணாக வீடு தேடி அலைந்தேன். சிங்கிள் மதர் என்பதாலும் உறவினர்கள் ஆதரவு இல்லை என்பதாலும் எனக்கு வாடகைக்கு வீடு கொடுக்க பலரும் யோசிக்க, கைக்குழந்தையாக இருந்த எனது மகனை வைத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் கூட படுத்து உறங்கியிருக்கிறேன் என்கிறார் ஆனி. தங்குவதற்கு இடமின்றி பல இடங்களில் மாறி மாறி வசித்த நிலையில், வயதான பாட்டி ஒருவரின் அரவணைப்பில் ஓலைக் குடிசையில் குழந்தையோடு ஓரமாக ஒண்டியிருக்கிறார். தனது பாதுகாப்பிற்காக தலை முடியை ஆண்களைப் போல வெட்டிக் கொண்டவரின் தோற்றம், சிலரது பார்வையில் மகன் சிவசூர்யாவின் அப்பாவாகத் தோற்றம் தர, வேறு சிலருக்கோ அண்ணன், தம்பியாகவும் தோன்றியுள்ளது.

2008ல் இதே வர்க்கலாவில் கணவர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார். 2012ல் சட்டப்படி விவாகரத்து கொடுத்தார். எப்போது கணவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேனோ அப்போது முதல் நான் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு  ஐஸ்கிரீம் விற்பது, எலுமிச்சை ஜூஸ் விற்பது, எல்.ஐ.சி. முகவர் என தற்காலிகமாக பணிகளுக்கு சென்றிருக்கிறேன். அப்போது தான் 2014-ம் ஆண்டு பெண் காவல் உதவி ஆய்வாளர் நேரடி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதை என்னிடம் காட்டிய தோழி ஒருவர், அந்தத் தேர்வை எழுத எனக்கு ஊக்கமளித்தார்.

மேலும் நண்பர்கள் ஆலோசனையில், சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து கான்ஸ்டபிள் தேர்வெழுதி 2016ல் கான்ஸ்டபிளாக பணி வாய்ப்பு பெற்றேன். தொடர்ந்து, 2019ல் சப் இன்ஸ்பெக்டர் தேர்விலும் வெற்றி பெற்று, எந்த வர்க்கலா என்கிற சிற்றூரில், ஐஸ்கிரீமும் எலுமிச்சைப் பழச்சாறும் விற்று, எனது வாழ்க்கையை சிரமங்களுக்கிடையே குழந்தையுடன் நகர்த்தினேனோ, அதே வர்க்கலா காவல் நிலையத்தில் இன்று சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றிருக்கிறேன் என்கிறார் இந்த நம்பிக்கை நாயகி.

கல்லூரிக் காலத்தில் காதலிப்பது தவறில்லைதான். ஆனால் யாரை காதலிக்கிறோம் என்பதில் கவனம் தேவை எனும் ஆனி சிவா, தற்கொலை என்பது எதற்குமே தீர்வல்ல. பெண்கள் எப்போதும் தன்னம்பிக்கையோடு போராடி உதாசீனப்படுத்தியவர்கள் முன்பே வாழ்ந்துகாட்ட வேண்டும். தைரியத்தோடு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல்  கணவர் சரியாக அமையாத பெண்களை, சமூகம் என்ன நினைக்குமோ, உறவினர்களும், சுற்றமும் என்ன நினைப்பார்களோ என அஞ்சாமல் பெற்றோர் பாசத்தோடு அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்ட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லால்

பெண்களுக்கு கல்யாணம் மட்டும் லட்சியம் இல்லை. அவர்கள் சுதந்திரமாக இருப்பது முக்கியம். ‘பெண்களுக்குத் திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம்.  வரதட்சணை வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு. வரதட்சணை வேண்டாம் என்று எதிராகக் குரல் கொடுப்போம். பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் சுயமாக வாழ வேண்டும். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்’ என்று இளம் பெண்களிடம் பேசும் வீடியோ காட்சியை தன்னுடைய ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் மோகன்லால்.

நிவேதிதா லூயிஸ், வரலாற்றாளர்

ஏன் திருமணங்கள் தோற்றுப் போகவே கூடாதா? யாரும் விழவே கூடாதா? விழுந்து எழுந்துதானே சைக்கிள் ஓட்டவே கற்றுக்கொள்கிறோம். தம்மாத்தூண்டு சைக்கிள் ஓட்டவே இந்த நிலை என்றால், திருமணங்கள் என்ன விழவே கூடாத புனிதத்தன்மை வாய்ந்தவையா? விழுந்து எழுந்து வர பெண்களுக்கு சொல்லித்தர வேண்டாமா? என்ற கேள்வியை தன் இணைய பக்கத்தில் கேட்டுள்ளார் எழுத்தாளரும் வரலாற்றாளருமான நிவேதிதா லூயிஸ்.

ஓவியா, சமூக செயற்பாட்டாளர்

விஸ்வமயா இறப்பு, ஆனி சிவாவின் தன்னம்பிக்கை இரண்டு பதிவுகளையும் ஒப்பிட்டு, பெண்களுக்கான ஆடை உரிமை பற்றி பேசுவதில் பாதி கூட பாலின வேறுபாடற்ற உடை குறித்து நாம் பேசுவதில்லை. வாழ்ந்து காட்டும் ஆனி... வாழ்க! என ஆனி சிவாவின் புகைப்படங்களோடு தனது முகப்பு பக்கத்தில் சமூக செயற்பாட்டாளர் ஓவியா பதிவிட்டுள்ளார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்