Aug 14, 2022
சிறப்பு கட்டுரைகள்

ரோஜாவனத்தில் ஆறுதல் அடையும் அனாதைப் பூக்கள்!

நன்றி குங்குமம் தோழி

ஹாரன் சத்தம் காதை பிளக்கின்றன... டேய்! சீக்கிரமாக வா கீழே ஸ்கூல் வண்டி வந்திருச்சு பாரு! எப்ப பாத்தாலும் இதே வேலைதாண்டா உன்கூட என்று புலம்பியபடி ஒரு வாயில் பீடி புகைத்தபடி பேப்பரை புரட்டினார் ஒரு முதியவர்... சிறு குடிசைகள் நிறைந்த அந்த நெருக்கடியான சூழலில் பூனைகள் பதுங்குகின்றன. வீட்டுக் கூரையின் மீதிருந்த புறாக்களை பிடிக்க, பூனை ஒன்று ஏக்கமாக காத்திருக்க... சிறுவர்கள் அடித்த கோலி குண்டுகளின் சத்தத்தில் கூரையின் மேலிருந்த புறாக்கள் பறந்தன... இந்தக் காட்சி அமைந்திருந்தது அந்த மாடி வீட்டில், ‘‘இன்னும் பத்து நிமிடத்துல வந்திருவேன். போலீஸெல்லாம் நா பாத்துக்கிறேங்க, அவங்க என்னோட நண்பர்கள்தான்’’ என்று ஃபோன் பேசியபடியே கீழே இறங்கினார் அந்தப் பெண்.

யார் அந்த பெண்? அவர் பெயர் ரோஜா. அனாதை பிணங்களின் தாய். அவரிடம் இதைப்பற்றி பேச ஆரம்பித்தபோது அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளிலும் வலியோடு வாழ்வின் மீதான அன்பும் வெளிப்பட்டது.‘‘ஒரு முறை வீட்டில் எல்லாருடன் கோயிலுக்கு போயிருந்தோம். போகும் வழியில் ஒரு மூட்டை கட்டி வச்சிருந்தாங்க. நாலைந்து மூட்டை இருக்கும். என்னன்னு பாத்தா அத்தனையும் இறந்துபோன மனிதர்களோட உடல்கள். எனக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சு.

பக்கத்துல உள்ளவங்ககிட்ட கேட்டா அவங்க எல்லாம் அனாதைகள். யாரும் கிடையாது. இறந்துட்டாங்க. அதனால தான் இப்படி கட்டி வச்சிருக்காங்கன்னு ரொம்ப சாதாரணமா சொல்லி கடந்து போயிட்டாங்க. ஆனா என்னால அப்படி கடந்துபோக முடியல. எல்லோரும் மனிதர்கள் தானே, பிறகு ஏன் இப்படி பாகுபாடு பார்க்கணும் என்ற கேள்வி என் மனசுல அன்னைக்கு நானே கேட்க ஆரம்பிச்சேன். அதற்கான விடையும் எனக்கு அப்ப தெரியல என்றாலும், அதன் தேடல் எனக்கு அதை புரிய வச்சது.

இப்ப எங்க அனாதை உடல்கள் இருந்தாலும் அவங்களுக்கு உறவா நான் இருக்கேன்.  அவங்கள அடக்கம் செய்ய கிளம்பிடுவேன். முதல்ல இந்த செயலை செய்யும்போது எனக்கே கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு. எல்லாருக்கும் இறப்பு, சுடுகாடு என்றாலே ஒரு வித பீதி ஏற்படும். அதுமட்டுமில்லாம, சுடுகாடு என்றால் அங்கு பேய்கள் நடமாடும். அங்கு பெண்கள் போனா அவர்களுக்கு பேய் பிடிச்சிக்கும்ன்னு எல்லாம் என்னை பயமுறுத்த ஆரம்பிச்சாங்க.

உண்மையை சொல்லணும்னா நான் தினமும் சுடுகாட்டுக்கு போய்ட்டுதான் வர்றேன். இன்னவரைக்கும் ஒரு பேய் கூட பார்த்ததில்லை. பேய்லாம் ஒண்ணுமே இல்லங்க. மனுசன் செத்துபோய்ட்டா அவ்வளவுதாங்க. அவன் உடல் மண்ணோட மக்கி போய்டும் அவ்வளவுதான் வாழ்க்கை. இங்க அனாதையா இறக்குறவங்களும் ஒரு சூழ்நிலையில் மகிழ்ச்சியா அவங்க குடும்பத்தோட வாழ்ந்தவங்கதான். ஏதோ ஒரு சூழ்நிலை அவங்க அனாதை ஆகிட்டாங்க.

அவங்க வாழும்போது எவ்வளவு ஆசைகள் இருந்திருக்கும் ஆனா இந்த நிலைக்கு வருவோம்னு நினைச்சிகூட பாத்திருக்க மாட்டாங்க. ஆனால் அவங்க எல்லாரும் யாருமே இல்லாமல் ஆதரவற்று இறந்து கிடக்கும் போது பார்க்கவே ரொம்பவே பரிதாபமா இருக்கும். உயிரோடு இருக்கும் போது எப்படி வேண்டும் என்றாலும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இறக்கும் போது அவனுக்கு கடைசி காரியங்கள் செய்ய நாலு பேராவது இருக்கணும். அப்படி யாருமே இல்லை என்றால், அவன் இறப்பு என்பது மிகவும் கொடுமையான விஷயம். இது போல் பலரை நான் பார்த்து இருக்கேன். ஒருவர் இறந்த பல நாட்களாகி இருக்கு.

யாருமே கண்டக்கல. அவர் கன்னத்தில் புழுக்கள் நெலிஞ்சிட்டு இருந்தது. பார்க்கும் போதே என் உடல் எல்லாம் கூசிச்சு. ஒரு முறை பிறந்த குழந்தையை கொன்ற குப்பைத் தொட்டியில் வீசி இருந்தாங்க. அந்த குழந்தையை இந்த கைகளால் தான் தூக்கிட்டுபோய் அடக்கம் செஞ்சேன். எத்தனை பேரு குழந்தை இல்லாம இருக்காங்க. ஏன் குப்பத் தொட்டில போடுறீங்க! நீங்க பண்ண தப்புக்கு அந்த சிசு என்ன பாவம் செய்தது. நான் எல்லா பெண்களையும் கேட்பது ஒன்று தான். நீங்க தவறே செய்திருந்தாலும், குழந்தைய குப்பைத் தொட்டியில் போடாதீங்க. ரோட்டு ஓரமா கூட போடுங்க அல்லது அனாதை இல்ல வாசலில் விட்டுடுங்க. அந்த குழந்தை வளர்ந்து எப்படியாவது பொழச்சிக்கும். யாராவது ஒருவர் தத்துக்கூட எடுத்துப்பார்.

எத்தனையோ பேரு அனாதையா இருக்குற குழந்தைய வளக்க ரெடியா இருக்காங்க. என்னை பொறுத்தவரைக்கும் இங்க யாருமே அனாதை இல்ல. அனாதைன்னு சொல்லப்படுறவங்க எல்லாருமே அவங்க கஷ்டங்கள், சந்தோசங்களை சொல்றதுக்கு யாருமே இல்லன்னுதான் ஏங்கிட்டு இருக்காங்க. நீங்க ரோட்ல போகும்போது அவங்கள பாத்தீங்கன்னா முதல்ல பேசுங்க அதுபோதும் அவங்களுக்கு, காசு, பணம், சாப்பாடு, கொடுக்குறதெல்லாம் அப்புறம்தான். இதுல என்ன ஒரு கொடுமையான விசயம்னா நாம இவ்வளவு கஷ்டப்பட்டு வளக்குற பிள்ளை நம்மள கைவிட மாட்டாங்கன்னு நம்புறதுதான். பெத்தவங்கள பாத்துகிற நல்ல பசங்களும் இருக்காங்க.

எல்லாரும் அப்படி இருந்துட்டா யாரும் அனாதையா இருக்க மாட்டாங்க. முன்னெல்லாம் கோயிலுக்கு போகும்போது மாலை வாங்குவேன். ஆனா இப்ப விடிஞ்சதுமே மாலை வாங்குறேன். சுடுகாட்டில் இருக்கும் அனாதை பிணங்களுக்கு ஒரு பேத்தியாவோ, மகளாவோ இருந்து நல்லடக்கம் செய்யும்போது அவங்களுக்காக நான் இருக்கேன்னு நினைக்கும் போது மனசு திருப்தியா இருக்கு. என்னுடைய இந்த செயலுக்கு எப்போதும் துணை நிக்கும் காவல்துறைக்கும், நண்பர்களுக்கும் நான் என் நன்றியை தெரிவிக்கணும். அவங்க இல்லாம இது சாத்தியமில்ல’’ என்றார்
புன்னகை எய்தியபடி ரோஜா.

அவரின் அந்த ஒற்றை புன்னகையில் எவ்வளவு ஆழமான வாழ்வின் வலிகள், மனித வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்கள் அடங்கி இருக்கு. சக மனிதனை நேசிப்பதை விட ஆக சிறந்தது இவ்வுலகில் வேற எதுவும் இல்லை. பெயரில் மட்டும் அல்ல, மற்றவர்களை நேசிப்பதிலும் மனதால் அவர் ரோஜாதான். அந்த ரோஜாவனத்தில் அனாதை என்ற பூக்கள் அன்பால் ஆறுதல் அடையட்டும்.

தொகுப்பு: சக்தி மல்லிவீரப்பா