Sep 30, 2022
சிறப்பு கட்டுரைகள்

எழிலார்ந்த புன்னகையின் அரசி கே.ஆர்.விஜயா

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்-101

நீள் வட்ட முகம், அலைபாயும் நெளி நெளியான கூந்தல், உணர்வுகளைப் பிசிறின்றி வெளிப்படுத்தும் அழகான கண்கள், முகத்தில் எப்போதும் மாறாத எழிலார்ந்த வசீகரப் புன்சிரிப்பு, அதனூடே வெளிப்படும் முத்துப் பல்வரிசை, மெலிந்த தேகம். சிறப்பான நடிப்புத்திறன். 63ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘கற்பகம்’ திரைப்படத்தின் வழியாக அறிமுகமாகி, பல படங்களில் கவர்ச்சிகரமான நாயகியாகப் பயணித்து, பின்னர் தானே அந்த இமேஜை உடைத்து ‘தெய்வீக நாயகி’ என்று உருவெடுத்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளில் நானூறு திரைப்படங்களுக்கும் மேல் நடித்து திரையுலகில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருப்பவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.

விஜயாவின் திரைப்பயணம் என்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. மிகப்பெரும் போராட்டங்கள், கடுமையான உழைப்பு இவற்றின் பின்னணியில்தான் இந்த வெற்றி அவருக்கு சாத்தியமானது. இவர் திரையில் நுழைந்த காலகட்டத்தில் பத்மினி, சாவித்திரி, பானுமதி, சரோஜாதேவி, தேவிகா, விஜயகுமாரி போன்ற நாயகிகள் பலரும் உச்சத்தில் நிலைபெற்று பேரும் புகழும் பெற்றுத் திரையில் மின்னிக் கொண்டிருந்தார்கள். அறிமுகமான முதல் படத்திலேயே அவர்களின் வரிசையில் விஜயாவும் இணைந்து விட்டார்.

திரை வாழ்வில் ஒளியேற்றிய புகைப்படம்

‘கற்பகம்’ பட நாயகி வாய்ப்பு அமையும் வரை தெய்வநாயகி என்று அறியப்பட்ட அவரின் கலையார்வமும் உழைப்பும் நாடக மேடைகள் மற்றும் தமிழகத்தின் சிறு சிறு நகரங்கள்தோறும் நடைபெறும் பொருட்காட்சி மேடைகளில் பெரும்பாலும் ஆடிப் பாடுவது மற்றும் அரசின் காசநோய் எதிர்ப்பு பிரச்சார நாடகங்களில் பங்கேற்று நடிப்பதாகவே இருந்தது. சென்னை தீவுத்திடல் மைதானத்தில் நடைபெற்ற பொருட்காட்சி அரங்கில் காசநோய் எதிர்ப்புப் பிரச்சார நாடகத்துடன், திரைப் பாடல்களுக்கு வாயசைத்து ஆடிய நிகழ்வில் அப்போதைய கவர்னர் செரியன் மற்றும் நடிகர் ஜெமினிகணேசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். நடனமாடிய 13 வயதேயான அந்தச் சிறுமிக்கு எதிர்காலத்தில் கலையுலகில் நல்ல வாய்ப்புகள் கிட்டும் வாய்ப்பிருப்பதாக ஆருடமும் வாழ்த்துகளும் தெரிவித்தார் ஜெமினி கணேசன். அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெய்வநாயகியின் வெற்றிகரமான திரையுலக வாழ்வுக்கு அடித்தளம் இட்டன.

கதாநாயகி கே.ஆர்.விஜயா உருவெடுத்தார்

‘கற்பகம்’ படத்தின் தயாரிப்பாளரும் கதை, வசனகர்த்தா, இயக்குநருமான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அடுத்து தான் எடுக்கவிருந்த படத்துக்கான நாயகியாக விஜயகுமாரியைத் தேர்வு செய்திருந்தார். ஏனோ சில காரணங்களால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போகவே, புதிதாக ஒரு கதாநாயகியைத் தேடும் படலத்தில் தீவிரமாக இறங்கினார் இயக்குநர். படத்தின் கதாநாயகனாக நடிக்கவிருந்த ஜெமினி கணேசனிடம் கதாநாயகி பற்றி தெரிவிக்கவே, பொருட்காட்சியில் நடனமாடிய பெண்ணைப் பற்றி சொன்னதுடன் அவரின் புகைப்படத்தையும் இயக்குநரிடம் காண்பித்தார். அந்தப் புகைப்படத்தில் இருந்த இளம் பெண்ணின் அழகும் லட்சணம் பொருந்திய முகமும் இயக்குநரை வெகுவாகக் கவர்ந்திழுக்க, அப்போதே அவர்தான் படத்தின் கதாநாயகி என்ற முடிவுக்கும் வந்தார். அதன் பின் ஓராண்டில் படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றிப்படமானது.

அறிமுக நாயகியான கே.ஆர்.விஜயாவுக்கு ஒளி மிகுந்த எதிர்காலம் அப்போதே தொடங்கி விட்டது. கே.ஆர்.விஜயாவுக்கு மட்டுமல்ல, இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனையும் ஸ்டுடியோ அதிபராக்கி உச்சத்தில் வைத்தாள் ‘கற்பகம்’. ஆம்! இந்தப் படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ‘சாரதா’ ஸ்டுடியோவின் அதிபரானார் கே.எஸ்.ஜி. கதாநாயகன் ஜெமினிக்கு சிறந்த நடிகருக்கான விருதினை ‘சினிமா விசிறிகள் சங்கம்’ சார்ந்தவர்கள் அளித்து கௌரவித்தனர். 1963 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப்படம் என தேசிய விருது பெற்றதுடன், இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழையும் ’கற்பகம்’ வென்றது. பின்னர் இப்படம் இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் வெற்றிவாகை சூடியது. இவ்வாறு தெய்வநாயகி கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட அவரது பெற்றோரும் முக்கிய காரணிகளாயிருந்தனர்.

தெலுங்கு, மலையாளக் கூட்டின் பலன் தமிழில் விளைந்தது

தந்தையார் ராமச்சந்திரன் பூர்வீகம் சென்னை ராஜதானியின் ஆந்திரப் பகுதியான சித்தூர். இரண்டாம் உலகப் போரில் விமானப்படையில் ஈடுபட்டவர். அவருடன் போரில் ஈடுபட்ட கேரளப் பகுதியின் திருச்சூரைச் சேர்ந்த விமானப்படை ஜவான்கள் சிலருடன் அவருக்கு ஆழ்ந்த நட்பு இருந்தது. அது அவர்களின் தங்கை கல்யாணிக் குட்டியை மணம் பேசி முடிப்பது வரை நீண்டது. தெலுங்கு பேசும் ராமச்சந்திரன், மலையாளக்கரையின் கல்யாணிக்குட்டியின் மணாளன் ஆனார். இத்தம்பதிகளின் மூத்த மகளாக நவம்பர் 30, 1948 ஆம் ஆண்டில் தெய்வநாயகி கேரளத்தின் திருச்சூரில் பிறந்து சில காலம் அங்கேயே வாழ்ந்து, பின் தந்தையின் ஊரான சித்தூரில் வளர ஆரம்பித்தார்.

தெய்வநாயகியைத் தொடர்ந்து நான்கு பெண் மக்கள், ஒரு மகன் என குடும்பமும் பல்கிப் பெருகியது. கேரளம், ஆந்திரம் என மாறி, மாறி வளர்ந்ததால் தெய்வநாயகியின் பள்ளிப் படிப்பு ஆரம்பக் கல்வியுடன் முற்றுப் பெற்றது. தந்தையின் வியாபாரம் நொடிந்துப் போனதால் பத்தாண்டுகளுக்குப் பின் தமிழகத்தின் பழனிக்குக் குடும்பம் இடம் பெயர்ந்தது. ராமச்சந்திரன், பழனி முருகன் கோயிலில் அலுவலராகப் பணியாற்றத் தொடங்கினார்.

பெற்றோருக்கு இயல்பிலேயே கலைத்துறை மீது ஆர்வம் இருந்ததால், ராமச்சந்திரன் எம்.கே.ராதாவின் நாடகக்குழுவில் சேர்ந்து நடிக்கவும் தொடங்கினார். பின்னாட்களில் ‘கலாவர்த்தினி’ என்ற பெயரில் சொந்தமாக ஒரு நாடகக் குழுவையும் இவர் உருவாக்கி நடத்தியுள்ளார். இக்குழுவில் நடிகர் சுருளிராஜன், நடிகை காந்திமதி போன்றவர்களெல்லாம் இணைந்து நடித்ததாகவும் கூட தகவல்கள் உண்டு. பின்னர் மூத்த மகள் தெய்வநாயகியை விநாயகர் கோயில் நிகழ்ச்சியில் நடனமாடவும் அனுமதித்தார்கள். அதுவே பின்னர் நாடகக் குழுக்களில் சேர்ந்து நடிப்பது என்று பரிணாமம் பெற்றுத் தொடர்ந்தது.

நாடகங்களும் விளம்பரப் படங்களும்....


உயிர்க்கொல்லி நோயான காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் பழனியில் நாடகம் உருவாக்கப்பட்டு அதில் தெய்வநாயகி நடித்தார். ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று நடித்தால் பத்து ரூபாய் ஊதியமாகவும் தரப்பட்டது. அப்போது அதுவே மிகப்பெரும் தொகையாகக் கருதப்பட்ட காலம். பின்னர் மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி என அனைத்து ஊர்களிலும் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிகளில் இந்த நாடகம் தொடர்ந்து நடத்தப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த நாடகம் முடிந்த பின் பிரபல திரைக்கலைஞர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவினரின் நாடகங்களும் நடத்தப்பட்டன. இந்த நாடகங்களை எல்லாம் பார்த்தே தெய்வநாயகி வளர்ந்துள்ளார். பிறகுதான் சென்னை தீவுத்திடலில் அவரது திரையுலக எதிர்காலத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வு அரங்கேறியது.

சென்னை வந்த பின்னர் பல்வேறு அமெச்சூர் நாடகக்குழுக்களிலும் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்தன. அதன் அடுத்தக்கட்டமாக மாடலிங் செய்யும் வாய்ப்புகளும் வரத் தொடங்கின. அப்போதைய பிரபல நிறுவனங்களின் பொருட்களான சிம்சன் பிஸ்கட் மற்றும் சாக்லெட் விளம்பரங்களில் புடவை கட்டிக்கொண்டு மாடலிங் செய்திருக்கிறார். உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர், டர்மிக் பவுடர், மூவ் ஆயில்மெண்ட் விளம்பரப் படங்கள் போன்றவையும் தெய்வநாயகிக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தவையாகும். மூவ் ஆயில்மெண்ட் விளம்பரப் படத்தில் பிரபல நடிகை சரோஜாதேவியும் அவருடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கற்பகம்’ படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே ‘மகளே உன் சமத்து’ படத்தில் சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்தப் படத்தில் உடன் நடித்த நடிகர் எம்.ஆர்.ராதா, ‘பெயர் என்னம்மா?’ என்று கேட்க ‘தெய்வநாயகி’ என்று மெலிந்த குரலில் கூறியுள்ளார். உடனே அவரது பாணியில் கேலி செய்து விட்டு, அம்மா, அப்பா பெயரை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். பின்னர் அவரே விஜயா என்று பெயர் வைத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறியுள்ளார். அப்படித்தான் கல்யாணிக்குட்டி ராமச்சந்திரன் விஜயா என்பதன் சுருக்கமாக கே.ஆர்.விஜயா என்னும் பெயர் உருப் பெற்றது. அப்போது முதல் அசல் பெயர் தெய்வநாயகி என்பது தேய்ந்து மறைந்து கே.ஆர்.விஜயா என்ற ஆளுமைப் பெயர் உருவானது.

வெற்றி மேல் வெற்றியாய்த் தொடர்ந்து வந்த அதிர்ஷ்டம் முதல் பட வெற்றியுடன் அழகும் திறமையும் வாய்ந்தவரான விஜயாவை அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. முதல் கட்ட நாயகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நகைச்சுவை நாயகன் நாகேஷ் என தொடர்ச்சியாக அனைவருடனும் இணைந்து நடித்தார். அதே நேரம் இயக்குநர்களின் நடிகையாகவும் அவர் இருந்தார். அப்போதைய பிரபல இயக்குநர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடித்தார்.

குடும்பப் பாங்கான நாயகியாக ‘கற்பகம்’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் கவர்ச்சிகரமான நாயகியாகவும், அப்போதைய மாடர்ன் உடைகளான ஸ்கர்ட், கவுன், சல்வார் என அணிந்து பல படங்களில் மிகவும் ஸ்டைலிஷாகவும் தோன்றினார். ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் நீச்சல் உடை அணிந்து தோன்றியதுடன் பாலியல் வேட்கை பற்றி வெளிப்படையாகப் பேசிய ‘செல்வம்’, ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ படத்திலோ விடுதியில் வந்து தங்கியிருக்கும் பாலியல் தொழிலாளி, ஸ்ரீ தரின் ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் ஒப்பனையின்றி நடிக்கத் துணிந்தமை.

நடிகர் ஜே.பி.சந்திரபாபு இயக்குநராகவும் பொறுப்பேற்ற ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ படத்தில்  நவநாகரிக உடை உடுத்தி மனோகருடன் ஆடிப் பாடுவதும், இரவு விடுதியில் சந்திரபாபுவுடன் இணைந்து மேற்கத்திய நடனம் ஆடுவதும், மனவேதனையை தன் காதலனான மனோகரிடம் வெளிப்படுத்திய அன்றிரவே கொலையுண்டு இறந்து போவது, திருலோக்சந்தரின் ‘இரு மலர்கள்’ என கனம் மிகுந்த வேடங்களை ஏற்கவும் அவர் சற்றும் தயங்கவில்லை. அதே நேரம் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்களான ‘சரஸ்வதி சபதம்’, ‘திருமால் பெருமை’ போன்ற படங்களில் ஏற்று நடித்த வேடங்களும் குறிப்பிடத்தக்கவையே.

இந்தியையும் விட்டு வைக்கவில்லை. தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளத்திலும் ஏராளமான படங்களை ஒப்புக்கொண்டு நடித்தார். பிற மொழிகளை ஒப்பிடும்போது கன்னட மொழியில் படங்கள் குறைவுதான் என்றாலும் அதையும் அவர் விட்டு விடவில்லை. இதற்கிடையில் இந்தியிலும் ‘ஊஞ்ச்சே லோக்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். கே.பாலசந்தரின் பிரபலமான நாடகம் ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தின் திரை வடிவம் அது. 1965ல் வெளியான இப்படத்தில் அசோக் குமார், ராஜ்குமார் போன்ற பிரபலங்களுடன் புதுமுகமாக ஃபெரோஸ் கான் அறிமுகமானார். இந்த ஒரு படத்துடன் இந்திப் படங்களில் நடிக்க வேண்டாம், தென்னிந்திய மொழிப் படங்கள் மட்டும் போதும் என்ற முடிவுக்கும் வந்து விட்டார் கே.ஆர்.விஜயா. ஆனால், இந்த முடிவை எடுத்தவர் கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர்.

இந்திப் படத்தை அடுத்து அடுத்த ஆண்டில் ‘மேஜர் சந்திரகாந்த்’ தமிழ்ப்படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்க அதனை இயக்கினார் கே.பாலசந்தர். கே.ஆர்.விஜயா இந்தியில் ஏற்ற நாயகி வேடத்தைத் தமிழில் ஏற்று நடித்தவர் ஜெயலலிதா. 1963ல் தொடங்கிய விஜயாவின் திரைப்பயணம் 1966 ஆம் ஆண்டுடன் நிறைவு பெற்றது. மூன்றே ஆண்டுகளில் பரபரப்பாக இயங்கி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துப் பேரையும் புகழையும் அறுவடை செய்திருந்தார். 66ல் நடிப்பதை நிறுத்திக் கொண்டவர், நடித்து முடித்து வைத்திருந்த படங்களே தொடர்ச்சியாக 1968ஆம் ஆண்டு வரை வெளிவந்து கொண்டிருந்தன. புகழின் உச்சியில் இருந்தவர் திடீரென்று படங்களில் நடிப்பதை ஏன் நிறுத்திக்கொண்டார் என்ற கேள்வி அனைத்துத் தரப்பிலிருந்தும் பரவலாக எழுந்தது.

ஏன் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்?

தமிழ்ப் படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்யக்கூடியவரும், தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வேலாயுதம் நாயருடன் ஏற்பட்ட காதலின் விளைவும் ரகசியமாக நடத்திக் கொண்ட திருமணம் போன்றவைதான் கே.ஆர்.விஜயா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வது என்ற முடிவெடுக்க வைத்தது…...  

கே.ஆர்.விஜயா நடித்த திரைப்படங்கள்  

கற்பகம், கை கொடுத்த தெய்வம், கருப்புப் பணம், தொழிலாளி, தெய்வத் திருமகள், சர்வர் சுந்தரம், பணம் படைத்தவன், தாயும் மகளும், தாழம்பூ, பஞ்சவர்ணக்கிளி, கல்யாண மண்டபம், நாணல், காட்டுராணி, இதயக்கமலம், நான் ஆணையிட்டால்..., யாருக்காக அழுதான், சின்னஞ்சிறு உலகம், செல்வம், ராமு, தேன்மழை, தாயின் மேல் ஆணை, தட்டுங்கள் திறக்கப்படும், அண்ணாவின் ஆசை, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், தங்கை, நினைவில் நின்றவள், பட்டணத்தில் பூதம், விவசாயி, பாலாடை, கந்தன் கருணை, இரு மலர்கள், முகூர்த்த நாள், பெண்ணே நீ வாழ்க, பொன்னான வாழ்வு, நெஞ்சிருக்கும் வரை, சீதா, மனம் ஒரு குரங்கு, ஊட்டி வரை உறவு, திருமால் பெருமை, தங்க வயல், பால் மணம், அவரே என் தெய்வம்,

திருடன், கண்ணே பாப்பா, பெண்ணை வாழ விடுங்கள், அக்கா தங்கை, நிலவே நீ சாட்சி, சொர்க்கம், ராமன் எத்தனை ராமனடி, நம்ம வீட்டு தெய்வம், சங்கமம், கல்யாண ஊர்வலம், எதிரொலி, சூதாட்டம், சபதம், கண்ணன் கருணை, ஆதிபராசக்தி, அன்னை வேளாங்கண்ணி, நல்ல நேரம், சக்தி லீலை, தவப்புதல்வன், நான் ஏன் பிறந்தேன், இதோ எந்தன் தெய்வம், கண்ணம்மா, என்ன முதலாளி சௌக்கியமா?, அன்னை அபிராமி, ஆசீர்வாதம், தெய்வம், குறத்தி மகன், சொந்தம், வாயாடி, நத்தையில் முத்து, தீர்க்க சுமங்கலி, மல்லிகைப்பூ, பாரத விலாஸ், தேவி கருமாரியம்மன், ரோஷக்காரி, மாணிக்கத் தொட்டில், எங்கள் குலதெய்வம், தங்கப்பதக்கம்,

திருடி, ஆயிரத்தில் ஒருத்தி, கஸ்தூரி விஜயம், தாய் வீட்டு சீதனம், ஜானகி சபதம், அக்கா, அம்மா, மேயர் மீனாட்சி, வாயில்லாப்பூச்சி, மிட்டாய் மம்மி, தசாவதாரம், மகராசி வாழ்க, கிரகப்பிரவேசம், கியாஸ்லைட் மங்கம்மா, முருகனடிமை, ரௌடி ராக்கம்மா, தனிக்குடித்தனம், துணையிருப்பாள் மீனாட்சி, நாம் பிறந்த மண், தேவியின் திருமணம், வருவான் வடிவேலன், கருணை உள்ளம், ஸ்ரீகாஞ்சி காமாட்சி, ஜெனரல் சக்கரவர்த்தி, திரிசூலம், ஆனந்த பைரவி, அன்னபூரணி, ஜஸ்டிஸ் கோபிநாத், ஒரே வானம் ஒரே பூமி, நாடகமே உலகம், நான் வாழ வைப்பேன், நீல மலர்கள், வெள்ளிரதம், ஆசைக்கு வயசில்லை, சுப்ரபாதம்,

 ரிஷிமூலம், இணைந்த துருவங்கள். தர்மராஜா, மங்கல நாயகி, தேவி தரிசனம், நட்சத்திரம், காலம், சத்திய சுந்தரம், கல்தூண், அஞ்சாத நெஞ்சங்கள், ஊரும் உறவும், தாய் மூகாம்பிகை, நான் குடித்துக்கொண்டே இருப்பேன், ஹிட்லர் உமாநாத், ரங்கா, ஊருக்கு ஒரு பிள்ளை, தேவியின் திருவிளையாடல், அஸ்திவாரம், யாமிருக்க பயமேன். யுக தர்மம், சுமங்கலி, மிருதங்கச் சக்கரவர்த்தி, நீதிபதி, அப்பாஸ், காமன் பண்டிகை, அபூர்வ சகோதரிகள், தங்கக் கோப்பை, தராசு, சரித்திர நாயகன், இரு மேதைகள், சிம்ம சொப்பனம், வம்ச விளக்கு, சமயபுரத்தாளே சாட்சி, புதுயுகம், நவக்கிரக நாயகி, படிக்காத பண்ணையார், அவள் சுமங்கலிதான்,

ராகவேந்திரர், ராஜரிஷி, மகாசக்தி மாரியம்மன், மச்சக்காரன், ஜோதிமலர், மேல்மருவத்தூர் அற்புதங்கள், பதில் சொல்வாள் பத்ரகாளி, சாதனை, ஆயிரம் கண்ணுடையாள், தர்மம், அன்னை என் தெய்வம், வேலுண்டு வினையில்லை, கிருஷ்ணன் வந்தான், வேலைக்காரன், தாயே நீயே துணை, பேர் சொல்லும் பிள்ளை, முப்பெரும் தேவியர், வீடு மனைவி மக்கள், கை கொடுப்பாள் கற்பகாம்பாள், நம்ம ஊரு நாயகன், அன்புக் கட்டளை, தாயா தாரமா?, என் அருமை மனைவி, பாட்டுக்கு ஒரு தலைவன், மீனாட்சி திருவிளையாடல், வாழ்ந்து காட்டுவோம், பெண்கள் வீட்டின் கண்கள், தங்கைக்கு ஒரு தாலாட்டு, வைகாசி பொறந்தாச்சு, நம்ம ஊரு மாரியம்மா,

மகா மாயி, காவல் நிலையம், அக்கினிப் பார்வை, நாளைய தீர்ப்பு, அண்ணன் என்னடா தம்பி என்னடா, சுயமரியாதை, வரம் தரும் வடிவேலன், அம்மா பொன்ணு, உடன்பிறப்பு, முதல் மனைவி, ராஜபாண்டி, வர்றார் சண்டியர், கோலங்கள், எல்லாமே என் ராசாதான், ஆணழகன், சுபாஷ், வாழ்க ஜனநாயகம், வெற்றி விநாயகர், அதிபதி, விவசாயி மகன், கவலைப்
படாதே சகோதரா, மன்னவரு சின்னவரு, பொட்டு அம்மன், துர்கா, ஜூனியர் சீனியர், ஷாக், சந்திரமுகி, தசாவதாரம், ஆடுபுலி, விருதுநகர் சந்திப்பு, சுவடுகள், மாய மோகினி, 143, சக்ரா.

(அடுத்த இதழிலும் புன்னகை அரசி தொடர்வார்.)

செல்லுலாய்ட் பெண்கள்’ தொடரில் இடம்பெறும் கட்டுரைகள் காப்பிரைட் உரிமை பெற்றவை. இக்கட்டுரைகளிலிருந்து எந்த ஒரு பகுதியும் கட்டுரை ஆசிரியரின் ஒப்புதல் பெறாமல் அச்சு வடிவிலோ, யூ டியூப் சானல்களிலோ எடுத்தாளப்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்