Sep 17, 2021
ஸ்பெஷல்

பத்தாண்டு அதிமுக அரசில் பல்லாயிரம் கோடி ஊழல் கல்வி முதல் கொரோனா வரை எதையும் விடவில்லை

* அள்ளிச்சுருட்டிய அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர்
* அதலபாதாளத்திற்கு சென்ற தமிழக பொருளாதாரம்

அதிமுக அரசின் ஒட்டு மொத்த நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது. இதனால் அதல பாதாளத்துக்கு சென்று விட்ட தமிழகத்தை மீட்க, மாற்றத்துக்கு மக்கள் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிற்கே ஒரு காலத்தில் ரோல் மாடலாக தமிழகம் திகழ்ந்தது. இப்போது காலம் மாறி, அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள், முறைகேடுகள் நிறைந்து மிகவும் பின் தங்கிய மாநிலமாக தமிழகம் மாறியது மிகவும் வேதனையான விஷயம். அதிமுக அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. எனவே, இந்த ஆட்சி தமிழகத்தில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

* கல்வியில் தோல்வி
கல்வித்துறையில் 14 வகையான இலவசப் பொருட்கள் வழங்குவதில் ரூ. 300 கோடி, ஆசிரியர் இட மாறுதல் மூலம் ரூ.400 கோடி, பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் ரூ.116 கோடி, பொது நூலகத்துறைக்கான புத்தகம் வாங்க அனுமதி அளித்ததில் கமிஷன் 25 சதவீதம், மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தில் கட்டிடம் கட்டியது, பள்ளிகளுக்கு வேண்டிய இருக்கைகள் வாங்கியதில் சுமார் ரூ200 கோடி, இலவச நீட் பயிற்சியில் ரூ.420 கோடி, பள்ளிகளுக்கு கணினிகள் வாங்கியதில் பல கோடி, கலர் பென்சில் வாங்கியதில் ரூ.2.17 கோடி, ஜியோமெட்ரிக் பாக்ஸ் வாங்கியதில் ரூ.4.32 கோடி, கிரேயான்ஸ் வாங்கியதில் ரூ.1.7 கோடி என பல கோடி இந்த துறையில் முறைகேடாக சுருட்டப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கென ஒதுக்கப்பட்ட ரூ.24 ஆயிரம் கோடியில் பாதி தொகை முறைகேடாக சுருட்டப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறை முற்றிலுமாக அழிந்து விட்டதாக ஆசிரியர்கள் கொதிக்கின்றனர்.  

உயர் கல்வித்துறையில் அண்ணா பல்கலை துணை வேந்தருடனான கருத்து வேறுபாட்டால் பொறியியல் படிப்புக்கான அடிப்படை அம்சங்கள் சீரழிந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பணம் பெற்றுக் கொண்டு பலருக்கு மதிப்பெண் போட்டது, கணினி ஆசிரியர் தேர்வில் பார்த்து எழுதியது, பணி நியமனங்களில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கியது என ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஊழல் நடந்து கண்டுபிடிக்கப்பட்டு பலர் மீது நடவடிக்கை எடுகுகப்பட்டது. உயர் கல்வித்துறையில் தேர்வுத் தாள் திருத்தியது முதல் வெளி நாடு வாழ் மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கு இடம் ஒதுக்கியது, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கியது, அங்கீகாரம் புதுப்பித்தல், கல்விக் கட்டணம் நிர்ணயம் என உயர்கல்வித்துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.  

கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறை தன்னிச்சையாக இயங்கவில்லை. நீதிமன்ற தீர்ப்புகள்தான் இயக்கின. இலவசங்களிலும் ஊழல்: 2014-15ல் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் பள்ளிகளுக்கான இலவசங்களை ஏற்றி இறக்க மட்டும் ரூ.10,400 கோடி செலவு செய்துள்ளதாக எடப்பாடி அரசு கணக்கு காட்டி முறைகேடு செய்துள்ளனர். பள்ளிக்கு போகும் இலவசங்களை வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே வாகனம் கொண்டு வந்து எடுத்து சென்று விடுவர். அதே போல் இலவச பொருட்களையும் அந்தந்த பஞ்சாயத்து நிர்வாகமே வாகனம் மூலம் எடுத்து சென்று விடுகின்றன. பிறகு இந்த ரூ.10,400 கோடி எங்கு சென்றது என தெரியவில்லை. பசுமை வீடு திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தான் இரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சில்லறை விற்பனையை காட்டிலும் 1 டன்னிற்கு ரூ.5 ஆயிரம் அதிகமாக கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர். இதில் மட்டும் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது.

* ‘ஷாக்’ அடிக்கும் ஊழல்
மின்வாரியம் தமிழகம் முழுதும் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகளை வழங்கி வருகிறது. இவற்றுக்கு தேவையான மின்சாரம் அனல், காற்றாலை, சூரியசக்தி, நீர் மின்நிலைங்களின் வாயிலாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இதுதவிர தனியாரிடம் இருந்தும் கொள்முதல் செய்கிறது. இவ்வாறு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதால் கூடுதல் தொகை செலவு செய்யப்படுகிறது. சுயஉற்பத்தியின் விலையானது ஒரு யூனிட்டுக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை இருக்கிறது. மத்திய தொகுப்பில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்துக்கான செலவும் சுயஉற்பத்தி ஆகும் செலவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. ஆனால் தனியாரிடமிருந்து வாங்கும் மின்சாரத்தின் விலை ரூ.4 ல் இருந்து ரூ.5 வரை இருக்கிறது. இதுவே நுகர்வோரிடம் வரும் போது ரூ.7 முதல் ரூ.7.50 வரை வந்து விடும். இவ்வாறு கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்குவதால் மின்வாரியத்திற்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.

* சத்துணவு திட்டத்தில் ரூ.2,400 கோடி சுருட்டல்
சத்துணவு வழங்கும் திட்டத்தில் சமூகநலத்துறை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக 2018ம் ஆண்டு பகிரங்க குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, தமிழக அரசுக்கு சத்துணவு திட்டத்திற்காக முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த ரெய்டில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், அவர்களின் உறவினர்களுக்கு அந்த நிறுவனம் ரூ.2,400 கோடிலஞ்சம் கொடுத்துள்ளதாக வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

சத்துணவு திட்டத்துக்கு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனம் மீது வரி ஏய்ப்பு, முட்டை விநியோகத்தில் முறைகேடுசெய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான குடோன்கள் உள்பட 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய பதவியில் உள்ள அரசியல்வாதிகள், மூத்த உயர் அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கிறிஸ்டி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். ஆனால், டெல்லி தலைவர்களின் தலையீடு காரணமாக சோதனையில் சிக்கிய அதிகாரிகள் பற்றி தகவல் வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.

* விலைவாசி கிடுகிடு
ஒரு அரசானது நடுத்தர, ஏழை மக்கள் சிரமப்படாமல் இயல்பாக வாழ்வதற்குரிய திட்டங்களைத்தான் தீட்ட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசோ, அடிதட்டு மக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பால் விலை, பஸ் கட்டணம், மின்சார கட்டணத்தை உயர்த்தினர். அத்தியாவசிய பொருட்களின் பதுக்கலை தடுக்காதது, பட்டியலில் இருந்து நீக்கியது உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. வெங்காயம் திடீரென ஒரு கிலோ ரூ.100க்கு ஏறியது. பருப்பு, சமையல் எண்ணெய், மல்லி, மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனைத்தும் விலை ஏறிவிட்டன. ஒரு பொருள் உற்பத்தி அதிகரிக்கும் காலத்தில் விலை குறைவதும், உற்பத்தி குறையும் காலத்தில் விலை ஏறுவதும் இயல்பான ஒன்று. ஆனால் உற்பத்திக்கும் விலை உயர்வுக்கும் தொடர்பே இல்லை என்ற நிலையை இந்த அதிமுக அரசு உருவாக்கி விட்டது.

* கடனில் மூழ்கி தத்தளிப்பு
நிர்வாக திறனற்ற அதிமுக அரசால் வரவின்றி கவர்ச்சித் திட்டங்களை உருவாக்கி செலவு செய்து மக்கள் தலைமையில் கடனை சுமத்துகிறது. ஆடம்பர செலவுகள் என்பதே இங்கு நிர்வாகமாக இருக்கிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் வரி வர வேண்டிய வருமானம் பறி போகிறது. கிரானைட், ஆற்று மணல், தாது மணல் என மதிப்புமிக்க கனிம வளங்கள் எல்லாம் வெளிப்படையாக சுரண்டப்படுகிறது. அதில் கிடைக்கும் பல ஆயிரம் கோடி தனி நபர்களின் பாக்கெட்டுக்கு செல்கிறது. நிர்வாக குளறுபடி, புதிய வருவாய்க்கான வாய்ப்பின்மை, உரிய காலத்தில் திட்டங்களை செயல்படுத்தாமை, திட்டங்களை கண்காணிக்காமை என திறனற்ற ஒரு அரசால் தமிழகம் கடனில் தத்தளிக்கிறது.

* சீரழிந்த தொழில்துறை
உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு வந்ததாக பெருமையாக சொல்லப்பட்டது. அந்த முதலீடு என்னவாயிற்று என இதுவரை தெரியவில்லை. இதனால் எத்தனை லட்சம் பேருக்கு வேலை கிடைத்தது என்றும் தெரியவில்லை. ஏற்கனவே இருக்கும் சிறு குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்கவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல நிறுவனங்கள் நொடித்து போய் விட்டன. தொழில் தொடங்க வந்தாலும் அதிமுக வார்டு கவுன்சிலரில் இருந்து அமைச்சர்கள் வரை பலரையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த தொந்தரவுக்கு பயந்தே பலர் ஓடி விடுகின்றனர். தொழில்துறையை முற்றிலும் சீரழித்து வளர்ச்சியை தடுத்து மாநிலத்தை பின்னோக்கி தள்ளியிருக்கிறது இந்த அதிமுக அரசு.

* வாக்கி டாக்கி ஊழல்
ஊழல்களையும், முறைகேடுகளையும் விசாரணை செய்யும் காவல் துறையிலேயே நடந்த ஊழல் இது. 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் காவல்துறைக்கென ரூ.47 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்க காவல்துறையிலுள்ள தொழில்நுட்ப பிரிவு முடிவெடுத்தது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மாறாக ரூ.83 கோடியே 45 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டதாகவும், 10 ஆயிரம் வாக்கி டாக்கிகளுக்கு பதிலாக 4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தவிர, ஒரு வாக்கி டாக்கி ரூ.47 ஆயிரத்து 560க்கு பதிலாக ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்போதைய உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, டிஜிபிக்கு கடிதம் எழுதினார். அதில், இவ்வளவு பெரிய தொகையை ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தது ஏன்? தொலைத்தொடர்பு உரிமம் பெறாத நிறுவனத்திடம் வாக்கி டாக்கிக்கான டெண்டர் ஏன் கொடுக்கப்பட்டது என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதன்பிறகே வாக்கி டாக்கி முறைகேடு வெளியே தெரிய வந்தது.

* குட்கா ஊழல்
2013ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்கவும் தடை விதித்து சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார். இருந்தும் இந்த பொருட்கள் தமிழகத்தில் ரகசியமாக புழக்கத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2016ல் வருமான வரித்துறையினர் குட்கா வியாபாரி வீடு மற்றும் குடோனில் சோதனை செய்தனர். அங்கே சில ஆதாரங்கள் சிக்கின அதில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு சுமார் ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் கிடைத்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

* வேளாண் திட்ட முறைகேடு
சிறு, குறு விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2018ல் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் போலி விவசாயிகளை பயனாளிகளாக சேர்த்து, தமிழகம் முழுவதும் ரூ.110 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகள் துணை போயுள்ளனர்.

* கொரோனாவிலும் ஊழல்
கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. முதலில் ரேபிட் டெஸ்ட் கிட் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.400 பெறுமானமுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூ.600க்கு தமிழக அரசு ஏன் வாங்கியது என கேள்வி எழுந்தது. பிறகு தெர்மல் ஸ்கேனர், பிளீச்சிங் பவுடர், சானிடைசர், தடுப்புக்கவச உடை ஆகியவை வாங்கப்பட்டதிலும் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது மட்டுமன்றி கொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலும் முறைகேடு நடந்துள்ளது.

இப்படியாக அதிமுக அரசில் கல்வி முதல் கொரோனா வரை அனைத்துத்துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. எனவே, தமிழகத்திற்கு ஊழல் ஆட்சியா? நேர்மையான நிர்வாகத்திறன் மிக்க ஆட்சி தேவையா என்பதை மக்களே நீங்கள்தான் இன்று முடிவு செய்ய வேண்டும். உங்கள் ஒரு விரல் அந்த புரட்சியை இன்று செய்யட்டும். சில துறைகளில் நடந்துள்ள ஊழல்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறையிலும் ஊழல் புரையோடிப்போயுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஒவ்வொரு துறையிலும் நூற்றுக்கணக்கான கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளன. முக்கிய துறைகளில் ஆயிரக்கணக்கான அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இவைகளால் தமிழக அரசு முன்னேற்றம் காணமுடியாமல் தவித்து வருகிறது. இதனால் தமிழக வளர்ச்சி 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அடுத்த 10 ஆண்டுகள் கடுமையான முறையில் உழைத்தால் மட்டுமே தமிழகம் முன்னேற்றம் காண முடியும். இளைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

* குற்றங்களுக்கும் குறைவில்லை
தமிழகத்தில் பல்வேறு துறை சார்ந்தும், மக்களின் அடிப்படை பிரச்னைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினால், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர் போராட்டம் கைவிடப்படும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் தங்களின் துறை சார்ந்தும், பொதுமக்கள் அடிப்படை பிரச்னைகள் குறித்தும் போராட்டம் நடத்தினால் கையில் தடியோடு போலீஸ் தான் வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வருவதில்லை. ஆட்சியில் அமரும்போதே, எனக்கு பயந்து ரவுடிகள் பிற மாநிலத்திற்கு ஓடிவிட்டார்கள் என்று சூளூரைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பெண்கள் தெருக்களில் நடக்க முடியவில்லை. நாள் தோறும் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை என பெருகி விட்டன. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை எந்த புகாரையும் வாங்குவதில்லை. காவல் நிலையங்கள் கட்டபஞ்சாயத்து ஆலமரங்களாகி விட்டன. காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவலாக செயல்படுகிறது. சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

* பெண் எஸ்பிக்கே பாதுகாப்பில்லை
தமிழக சிறப்பு டிஜிபியாக இருந்த ஒருவர், பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல் துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே அந்த சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து கொண்டது. பாலியல் தொல்லை ஆளான பெண் எஸ்பி புகார் கொடுக்க சென்றபோது அலைக்கழிக்கப்பட்டார். இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார் என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். இச்சம்பவத்தால் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது அதிமுக அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.