Aug 13, 2022
ஸ்பெஷல்

வயசாயிடிச்சா? Do’s & Don’ts

இன்றைய சூழலில் முதியவர்கள் நீண்ட நாள் மற்றும் திருப்தியாக வாழவும் பல வழிமுறைகள் உள்ளன. மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள பல முன்னேற்றங்கள் மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் அதில் ஒரு சிலர் தான் தங்களின் முதிய காலத்தை மிகவும் இனிமையாகவும் சந்தோஷமாகவும் கழிக்கிறார்கள். காரணம் இவ்வளவு காலம் குடும்பம் வேலை என்று உழைத்தவர்கள், தங்களுக்கான நேரத்தை இந்த காலக்கட்டத்தில் தான் ஒதுக்கிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக தான் பணி ஓய்வு பெற்ற பிறகும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர். ஆனால் வேலை இல்லை நம்மால் இனி எந்த பயனும் இல்லை என்ற மனநிலையில் உள்ளவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் வாழ்க்கையை அதற்காக தயார் படுத்திக் கொள்ள தவறிவிடுகிறார்கள். இதனால் ஆரோக்கியமற்ற சில பழக்கங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். பெரும்பாலான முதியவர்கள் கீழ்க்கண்ட 7 தவறுகளை நாள்தோறும் செய்கின்றனர். அவை என்ன அதில் இருந்து தங்களை எவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்குகிறார் முதியோர் நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் நிகிலேஷ் ஆனந்த்.

ருசியான உணவு

பெரும்பாலான முதியவர்கள் ஆரோக்கியமான உணவினை தவிர்த்து தங்களுக்கு பிடித்தமான அதே சமயம் ஆரோக்கியமற்ற உணவினை சாப்பிட ஆரம்பிப்பார்கள். வயதாக ஆக நமது உடலில் சத்துக்கள் குறைய ஆரம்பிக்கின்றன. எனவே முதியவர்கள் காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள், நட்ஸ் வகைகள் போன்றவை அதிகம் உள்ள சரிவிகித உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவினை தவிர்க்க வேண்டும். காரணம் இது எளிதில் ஜீரணமாகாது.

சாப்பிட்டவுடன் உறக்கம்

வயிறு நிரம்ப உண்ட பிறகு உடனே நேரடியாகத் தூங்கச் சென்றால் அது ஜீரணத்தைப் பாதிக்கலாம். இதனால் உடலில் அமிலத்தன்மை ஏற்படலாம். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது. எனவே உணவுக்குப் பிறகு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது நல்லது; அப்போது உணவு நன்கு ஜீரணமாகப் போதுமான நேரம் கிடைக்கும். உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

நண்பர்களை சந்திக்கத் தவறுதல்

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பொதுவாகவே நமது நட்பு வட்டம் குறுகத் தொடங்கிவிடும். ஆனால் பெரும்பாலான முதியவர்கள் இதை வாழ்க்கை யின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு விடுகின்றனர். குறிப்பாக நீங்கள் தனியே வசிப்பவராக இருந்தால், வாரத்திற்கு இரண்டு முறையாவது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அல்லது அவர்களை போய் நேரடியாக சந்தித்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையில் ரசனை தன்மை அதிகரிக்கும்.

தண்ணீர் குடியுங்கள்

முதியவர்களுக்கு பொதுவாக அவர்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவாக இருக்கும். காரணம் அவர்கள் பெரிய அளவில் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருப்பதால், தாகம் எடுப்பது குறைந்துவிடும். இது இயற்கையான விஷயம். தாகம் இல்லை என்று இவர்களும் தண்ணீர் குடிக்காமல் இருந்து விடுவார்கள். விளைவு உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, உடல் சோர்வு, சிறுநீரகத்தில் பிரச்சினை... என ஒவ்வொரு பிரச்னையாக தலை தூக்க ஆரம்பிக்கும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். மறக்காமல் இருக்க செல்போனில் அலாரம் வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்றில்லை. திரவ ஆகாரமான சூப், பழச்சாறு, பால் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

இன்றையக் காலத்தில் சிறு வயதிலேயே நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். வயதானவர்களுக்கு சொல்லவே வேண்டாம். அவர்களுக்கும் இது போன்ற ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அதனால் அந்தந்த பிரச்னைகளுக்கு ஏற்ற மருந்துகளை அவர்கள் உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதற்கு சோம்பேரித்தனம் படாமல் மருந்துள் சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். மேலும் மாத்திரைக்கு என ஒரு டப்பா வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எந்த மாத்திரை எப்போது சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டு வைத்துக்கொள்ளலாம். அவர்கள் மறந்துவிட்டாலும்
வீட்டில் இருப்பவர்கள் அவர்கள் மருந்துகளை ஒழுங்காக சாப்பிடுகிறார்களா என்று பார்த்து, தவறினால் உரிய நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொடுக்க வேண்டும்.

உடல்நலத்தில் கவனம் அவசியம்

பொதுவாக வயதாக ஆக நெஞ்செரிச்சல், கண் பார்வை மங்குதல் போன்ற சில பிரச்சனைகள் வரலாம். இவை பொதுவாக வயதாவதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்றாலும் சில சமயங்களில் வேறு ஏதாவது நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். பல முதியவர்கள் இவை போன்ற அறிகுறிகளை முதுமையினால் ஏற்படுவதாக எண்ணி அலட்சியம் செய்து விடலாம். அப்படிச் செய்தால் நோய்களைக் கண்டறிவதும், சிகிச்சையும் தாமதம் ஆகலாம். உடலில் சின்ன சின்ன பிரச்னையும் தொடர்ந்து ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

சூழ்நிலையை புரிந்து ஏற்றுக் கொள்ளுதல்

வயதாகும் போது, நம் உடலில் முன்பு போல் வலிமை இருக்காது. அதனால் நம்மால் முன்பு போல் சில வேலைகளை செய்ய முடியாது. ஆனால் ஒரு சிலரால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனாலேயே மனச்சோர்வு ஏற்பட்டு மனரீதியாக சில உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக வண்டி ஓட்டுதல், கடினமான வீட்டு வேலைகள் அல்லது அதிக எடையுள்ள பொருட்கள் தூக்குதல்... போன்ற கடினமான வேலையை செய்ய முடியாது. அதையும் பொருட்படுத் தாமல் செய்யும்போது எலும்பு முறிவு, முதுகு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே அந்த வேலைகளை செய்வதை தவிர்த்துவிடலாம். அதனை செய்வதற்கு பிறரின் உதவியை நாடலாம். மேலும் நம்மால் கடினமான வேலை செய்ய முடியாது என்று எந்த வேலையும் செய்யாமல் இருந்துவிடவும் கூடாது. வண்டி ஓட்ட முடியவில்லை என்றால் நடந்து செல்லலாம். மேலும் தினமும் யோகா, மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். அதன் மூலம் உங்க உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் உறுதியாக இருக்கும்.
- ப்ரியா